புதன், 11 ஏப்ரல், 2018

Oh My God

காஞ்சிலால் என்பவர் கடவுள் சிலைகளை வைத்து வியாபாரம் செய்து வரும் ஒரு நாத்திகவாதி. கடவுள் நம்பிக்கை என்பது சிறிதுமற்றவர். கடவுள் சம்பந்தப்பட்ட விசயங்களை கேலி செய்பவர்.

ஒரு சாமியார் நடத்தும் பூஜையில் குழப்பம் விளைவித்ததற்காக சாமியார் காஞ்சிலாலுக்கு சாபம் கொடுக்கிறார். தொடர்ந்து அதே நாள் இரவு வரும் நிலநடுக்கத்தில் காஞ்சிலாலின் கடை தரைமட்டமாகிறது.

சாமியாரின் அல்லது சாமியின் சாபம்தான் இப்படி ஆகிவிட்டது என்று அனைவரும் பேசிக்கொண்டிருக்கும் வேளையில் காஞ்சிலால் மட்டும் தனது கடையின் இன்சூரன்ஸ் பத்திரத்தை தேடி எடுத்துக் கொண்டு இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு செல்கிறார்.

இயற்கைச் சீற்றங்களான சுனாமி, புயல், மற்றும் நிலநடுக்கங்கள் அனைத்டும் கடவுளால் ஏற்படுபவை. அதற்கு நாங்கள் இழப்பீடு தரமுடியாது என்று கைவிரிக்கிறது இன்சூரன்ஸ் நிறுவனம். தற்போது உருவான நஷ்டத்திற்கு இழப்பீடு கிடைக்க வாய்ப்பில்லை எனும் நிலை ஆகிவிடுகிறது.

தொடர்ந்து காஞ்சிலால் எடுக்கும் முடிவு வித்தியாசமானது. கடவுள் மீது வழக்குபோட முடிவு செய்யும் காஞ்சிலால் ஒவ்வொரு வக்கீலாக தேடி அலைகிறார். யாரும் இவருடைய கோரிக்கையை ஏற்றுக்கொள்வதில்லை. கடைசியாக ஒரு வழக்கறிஞர் கிடைக்கிறார். அவரின் உதவியோடு வழக்கு ஆவணங்களை தயாரித்து தானே வழக்கறிஞராக வழக்கு தொடர்கிறார் காஞ்சிலால்.
கடவுளின் மீது தொடரப்படும் வழக்கில் சம்மனை யாருக்கு அனுப்புவது? நாங்கள் கடவுளின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்ளும் சாமியார்களே இதற்குப் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று சொல்லி அவர்களுக்கே சம்மனை அனுப்புகிறார் காஞ்சிலால். சாமியார்கள் தரப்பு வக்கீல் இது சுயவிளம்பரத்திற்காக போடப்பட்ட வழக்கு என்று சொல்லி தள்ளுபடி செய்யுமாறு நீதிபதியைக் கேட்டுக்கொள்கிறார். ஆனால் காஞ்சிலாலின் கோரிக்கை நியாயமானது. வழக்கு தொடரட்டும் என்று சொல்லி வழக்கை ஏற்றுக் கொள்கிறார் நீதிபதி.

நீதிமன்றத்திலிருந்து வீட்டுக்கு வரும் வழியில் சாமியார்களின் அடியாட்கள் ஆயுதங்களோடு காஞ்சிலாலைத் துரத்துகின்றனர். கிருஷ்ணா வாசுதேவ் என்னும் ஒருவர் பைக்கில் வந்து காஞ்சிலாலைக் காப்பாற்றுகிறார். அடியாட்களால் தாக்கப்பட்ட காஞ்சிலாலின் வீட்டையும் வாங்கி அங்கே தானும் தங்குகிறார். காஞ்சிலாலின் மனைவி தனது பிள்ளைகளை அழைத்துக் கொண்டு தந்தை வீட்டுக்கு சென்று விடுகிறாள்.

இயற்கை சீற்றங்களால் தங்கள் உடைமைகளை இழந்து இன்சூரன்ஸ் நிறுவனத்தால் ஏமாற்றப்பட்ட பலரும் காஞ்சிலாலுடன் இணைந்து கொள்கிறார்கள். அவர்கள் அனைவரின் சார்பாகவும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து வாதாட ஆரம்பிக்கிறார் காஞ்சிலால். வழக்கு விசாரணை சூடு பிடிக்கிறது. ஊடகங்களிலும் பரபரப்பாக பேசப்படுகிறது.

சாமியார்களோடு பாதிரியார்களும் இஸ்லாமிய முல்லாக்களும் இணைந்து கொண்டு எதிர்தரப்பில் நின்று வாதிடுகிறார்கள். சாமியார் தரப்பு வக்கீல் “உருவான நிலநடுக்கம் கடவுளின் செயல்தான்” என்பதற்கு எழுத்துப்பூர்வமான ஆதாரம் கேட்கிறார். காஞ்சிலாலிடம் அப்படி ஒரு ஆதாரம் இல்லாததால் ஆதாரத்தை சமர்ப்பிக்க அவகாசம் கேட்டுப் பெறுகிறார்.

வீட்டில் வந்து இடிந்து போய் உட்கார்ந்திருக்கும் காஞ்சிலாலிடம் பகவத்கீதை, பைபிள், குரான் போன்ற புத்தகங்களைக் கொடுத்து படிக்கச் சொல்கிறார் கிருஷ்ணா. முழுக்க முழுக்க நாத்திகவாதியான காஞ்சிலால் அவற்றைப் படிக்கிறார்.

கடவுள் தான் நிலநடுக்கத்தை உருவாக்கினார் என்பதற்கான எழுத்துப்பூர்வமான ஆதாரம் கிடைக்கவே மறுநாள் அதைவைத்து நீதிமன்றத்தில் வாதாடுகிறார் காஞ்சிலால். தொடர்ந்து வாதிடும்போது சுயநினைவிழந்து மயங்கி விழுகிறார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் காஞ்சிலாலைப் பார்க்க வருகிறார் கிருஷ்ணா. தன்னுடைய சாவிக்கொத்தை வைத்து காஞ்சிலாலைக் குணப்படுத்துகிறார். தானே பகவான் கிருஷ்ணர் என்று உண்மையை சொல்லி காஞ்சிலாலுக்கு காட்சி தருகிறார். பின் காஞ்சிலால் சுயநினைவிழந்து இருந்த ஒரு மாதத்தில் நடந்தவைகளை விவரிக்கிறார்.
நீதிமன்ற வழக்கில் காஞ்சிலால் தரப்பு வென்று விடுகிறது. சாமியார்களும், இன்சூரன்ஸ் நிறுவனமும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு தருகிறது. சுயநினைவிழந்து கிடக்கும் காஞ்சிலால் விஷ்ணுவின் 11வது அவதாரம் என்று சாமியார்கள் பரப்புரை செய்கின்றார்கள். காஞ்சிலாலின் ஊழியனும் சாமியாராகி விடுகிறான். காஞ்சிலால் பெயரில் கோவில்கள் கட்டப்பட்டு விடுகின்றன. கீர்த்தனைகளும் பாடப்பட்டு இருக்கின்றன.

மேலும், “தான் இந்த அவதாரத்தை பூர்த்தி செய்யும் வேளை வந்துவிட்டது. சுய நினைவற்றுக் கிடக்கும் என் உடலை நல்லடக்கம் செய்யுங்கள்” என்று காஞ்சிலாலே அருள் வாக்கு கொடுத்ததாக சொல்லி அவருடைய நல்லடக்கத்திற்கும் ஏற்பாடு செய்துவிட்டார்கள் சாமியார்கள். காஞ்சிலாலின் இறுதிச்சடங்கிற்கு ஏராளமான பக்தர்களும் வந்துவிட்டனர். அன்பளிப்பாகவும் பலகோடி ரூபாய் சேர்த்துவிட்டது.

கிருஷ்ணர் மேலும் “நான் புனிதமெனக் கருதப்படும் பொருட்களிலும், சடங்குகளிலும், சிலைகளிலும் இருப்பதில்லை. கடவுளிடம் பேரம்பேசும் மனிதர்களிடமும் செல்வதில்லை. மாறாக திறந்த மனதுடன் என்னைத் தேடும் உன் போன்ற மனிதர்களிடம் வருகிறேன். அவர்களுக்கே காட்சி தருகிறேன். மனிதர்கள் கடவுளைத் தன் மனதிலேயே தேடவேண்டும்” என்று கூறுகிறார்.

இவ்வளவையும் தெரிந்துகொள்ளும் காஞ்சிலாலுக்கு தலையே சுற்றுகிறது. காஞ்சிலால் கிருஷ்ணரை அழைத்துக் கொண்டு தன்னுடைய கோவிலும், இறுதிச்சடங்கு ஏற்பாடுகளும் நடக்கும் இடத்திற்கு வருகிறார். சங்கு சக்கரங்களோடு விஷ்ணுவைப் போல நிறுவப்பட்டிருக்கும் தன்னுடைய சிலையை அடித்து நொறுக்குகிறார். நடந்ததை உணரும் பக்தர்கள் கூட்டம் ஆத்திரத்துடன் சாமியார்கள் மீது பாய்கிறது. அவர்களை தடுத்து நிறுத்துகிறார் காஞ்சிலால்.

“அவர்கள் உங்களை ஏமாற்றவில்லை, மாறாக நீங்கள்தான் ஏமாந்திருக்கிறீர்கள். கடவுளை உங்களுக்குள்ளே தேடுங்கள். சிலைகளிலும், சடங்குகளிலும் கடவுள் இல்லை. இம்மாதிரி சாமியார்களும் கடவுளின் ஏஜென்டுகள் இல்லை” என்று கூடியிருக்கும் கூட்டத்திற்கு அறிவுரை சொல்கிறார் காஞ்சிலால்.

பிறகு தன் மனைவி குழந்தைகளை கூட்டத்தில் காணும் காஞ்சிலால், அவர்களுக்கு கிருஷ்ணனைக் காட்ட அழைத்து வருகிறார். ஆனால் கிருஷ்ணன் மறைந்து விடுகிறார். கிருஷ்ணனின் சாவிக்கொத்து மட்டும் கீழே கிடக்கிறது. காஞ்சிலால் அதை எடுத்து பத்திரம் செய்துகொள்ள முயலும்போது, “என்ன செய்கிறாய் காஞ்சி? நான் அந்த சாவிக்கொத்திலும் இல்லை.” என்று ஒரு அசரீரி கேட்கவே அதையும் எறிந்து விடுகிறார். காற்றில் எறியப்பட்ட சாவிக்கொத்து ஒளிக்கீற்றுடன் மறைந்து விடுகிறது.

கடவுளை எங்கே தேடவேண்டும்? எங்கே தேடக்கூடாது? சாமியார்கள் என்பவர்கள் யார்? என்பதை சற்று வித்தியாசமான கோணத்தில் அணுகிய திரைப்படம். வியாபார நோக்கில் தான் எடுக்கப்பட்ட படம் என்றாலும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.

திங்கள், 19 மார்ச், 2018

ஆடும் கூத்து

சேரன், நவ்யா நாயர், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடிப்பில் டி.வி.சந்திரன் என்ற மலையாள இயக்குனரின் கைவண்ணத்தில் வெளியான படம் ஆடும் கூத்து. தமிழ்படங்களிலேயே மிகச்சிறந்த ஒரு படம். ஆனால் யாருக்கும் தெரியாமலேயே போய்விட்ட படம்.

இந்தப்படம் நன்றாக ஓடவில்லை எனும்போது உலகசினிமா பற்றி  எழுதுகிறவர்ளுக்கு கூட இந்தப்படம் தெரியாமல் போய்விட்டதோ என்று நினைக்கத் தோன்றுகிறது. ஒருவேளை அவர்கள் எழுதினாலும் இம்மாதிரி படங்களை ரசிக்க தமிழ் ரசிகனுக்கு விருப்பமில்லையோ என்னவோ?

வெடிபடு மண்டத் திடிபல தாளம்போட – வெறும்
வெளியிலி ரத்தக் களியொடு பூதம்பாட – பாட்டின்
அடிபடு பொருளும் அடிபடு மொலியிற் கூடக் – களித்
தாடுங்காளீ, சாமுண்டீ, கங்காளீ!

அன்னை அன்னை ஆடும்கூத்தை
நாடச்செய்தாய் என்னை

என்ற பாரதியின் பாடல் வரிகள் டைட்டில் கார்டில் பிண்ணனி இசையாக வர படம் தொடங்குகிறது. கதை நடக்கும் காலம் 1985ம் ஆண்டு.

ஒரு ஊரின் வாய்க்காலில் ஒருவனை மூன்று பேர் சேர்ந்து வெட்டிக்கொலை செய்கிறார்கள். அதை சற்று தொலைவில் சுற்றும் ராட்டினத்தில் மேலே இருந்து பார்த்து விடுகிறாள் மணிமேகலை. உடனே இறங்கி வந்து அப்பாவையும் மற்ற ஆட்களையும் கூட்டி வந்து காட்டுகிறாள். ஆனால் கொலை நடந்ததற்கான தடயம் எதுவும் தென்படுவதில்லை.

“மற்றவங்க கண்ணுக்குத் தெரியாததெல்லாம் உனக்கு மட்டும் ஏன் தான் தெரியுதோ” என்று நொந்து கொள்கிறார் அப்பா அழகிய நம்பி பிள்ளை. இவள் கண்டதை யாரும் நம்பவில்லை.

கருப்பு வெள்ளை சினிமாவின் கழிவு பிலிமில் இருந்து செய்யப்பட்ட ஒரு வளையலை மணிமேகலையின் முறைமாமன் முத்து திருவிழாவில் இருந்து வாங்கிவந்து மணிமேகலைக்கு பரிசாகத் தருகிறான். அந்தப் பிலிமில் ஒரு சினிமா இருக்கிறது என்று முத்து சொல்வதைப் பார்த்து கேலி செய்கிறாள் மணிமேகலை.
மறுநாள் கால்வாயில் அமர்ந்து துணி துவைக்கும் போது அந்த வளையலில் இருந்து ஒளிக்கீற்று புறப்பட்டு ஒரு படம் ஓடத்துவங்குகிறது. அதிலே ஒரு இளம் காதல் ஜோடி தெருக்கூத்து ஆடுகின்றனர். ஒரு ஜமீன்தார் ஒரு சிலரைக்கட்டி வைத்து சவுக்கால் அடிக்கிறார்.

அதைப்பார்த்து பயப்படும் மணிமேகலை ஓடிவந்து முத்துவிடம் கூறுகிறாள். மணிமேகலை ஏதேதோ உளறுவதாக நினைக்கும் முத்து அவளது வீட்டில் சொல்லி ஒரு மனநல மருத்துவரிடம் காட்ட ஏற்பாடு செய்கிறான். அனால் மருத்துவரோ அவளுக்கு ஒன்றுமில்லை என்று சொல்லி வெறுமனே சம்பிரதாயத்திற்கு இரண்டு மாத்திரைகளை எழுதிக்கொடுத்து விட்டு செல்கிறார்.

இதற்கிடையில் ஊர் கால்வாயில் ஒரு பிணம் கண்டெடுக்கப்பட மணிமேகலை ராட்டினத்தில் இருந்து பார்த்தது உண்மைதான் என்று அனைவரும் நம்புகின்றனர். இப்போது மணிமேகலையின் வளையலில் இருந்து ஒளிக்கீற்றுக்களுடன் மீண்டும் அந்தக் காட்சி விரிகிறது. அதிலே அந்த ஜமீன்தார் மோகவயப்பட்டு அந்த கூத்தாடிப் பெண்னைத் தூக்கிவரச் சொல்லி தன் ஆட்களிடம் ஏவ, அவர்கள் அந்தப் பெண்னை துரத்தி வருகிறார்கள். அதைப் பார்த்து மணிமேகலை மிகவும் பயப்படுகிறாள். ஏனெனில் அந்தக் கூத்தாடிப் பெண்ணாக வருவது மணிமேகலையேதான்.

இரண்டாவது முறை மணிமேகலையைப் பரிசோதிக்கும் மருத்துவர், கல்யாணம் செய்து வைத்தால் சரியாகிவிடும் என்கிறார். மணிமேகலைக்கும் முத்துவுக்கும் திருமணம் நிச்சயம் ஆகிறது. மணமேடையில் இருக்கும் வேளையில் மீண்டும் அந்தக் காட்சி தெரிகிறது. அதிலே ஜமீன்தாரின் ஆட்கள் தாசி என்று சொல்லி அந்தக் கூத்தாடிப் பெண்ணைக் கட்டி வைத்து மொட்டையடித்து விடுகிறார்கள். அதைப்பார்க்கும் மணிமேகலை மணமேடையிலேயே அலறி ஆர்ப்பாட்டம் செய்து விடுகிறாள். கல்யாணம் நின்று விடுகிறது.

மனம் வெறுத்துப் போகும் முத்து சொந்த ஊரில் செய்யும் ஜவுளிக்கடை வேலையை விட்டுவிட்டு அயலூரில் ஒரு பத்திரிக்கை அலுவலகத்தில் வேலைக்கு சேர்கிறான். அங்கே பழைய செய்திகளை கணிணியில் படிக்கும் போது மணிமேகலைக்கு தெரிந்த காட்சிகளுக்கு இணையான ஒரு சம்பவம் பற்றிப் படிக்கிறான். உடனே அந்த செய்தித்தாளை மணிமேகலையிடம் கொண்டு வருகிறான்.
தன்னுடைய மனதில் இருந்து உறுத்திக்கொண்டிருக்கும் விசயத்திற்கு ஒரு விடை கிடைக்கப்போகிற சந்தோசத்தில் மணிமேகலை முத்துவை அழைத்துக் கொண்டு சம்பந்தப் பட்ட ஊரான கடையநல்லூருக்கு பயணிக்கிறார்கள். அந்த ஊரிலே உள்ள ஓய்வுபெற்ற ஆசிரியர் லூயிஸ்பாபுவைச் சந்தித்து விவரம் கேட்கிறார்கள். லூயிஸ்பாபு விவரத்தை சொல்லத் தொடங்குகிறார்.

1975ல் இந்திராகாந்தியின் எமர்ஜென்சி காலகட்டத்தில் ஞானசேகரன் என்ற இயக்குனர் தன் ஆசைக்கு இணங்காத கூத்தாடிப் பெண்னை தாசி என்று சொல்லி மொட்டையடித்த ஒரு ஜமீன்தாரின் கதையை படமாக்க முயற்சிக்கிறார். கூத்தாடிப் பெண்ணாக பிரபா என்ற நடிகையும், அவளது காதலனாக ஞானசேகரனும் நடிக்கின்றனர். மேலும் ஜமீன்தாராக இந்த லூயிஸ்பாபு ஆசிரியர்.

இதற்கிடையில் உண்மையிலேயே அந்தக் கொடூரத்தை செய்த அன்பரசன் ஜமீன்தாரின் மகன் கனிவரசன் இந்தப் படப்பிடிப்பை தடுக்க முயற்சிக்கிறான். அவன் செய்த ரகளையில் படப்பிடிப்பு நின்று விடுகிறது. அவமானத்தில் நடிகை பிரபா தற்கொலை செய்து கொள்கிறாள். தன்னுடைய காதலியான பிரபா இறந்து போன சோகத்தில் இயக்குனர் ஞானசேகரன் ஒரு இளைஞர் இயக்கத்தில் சேர்ந்து விடுகிறார்.
ஆதிக்க சமூகத்தின் அக்கிரமங்களை பொறுக்க முடியாமல் இயக்குனராகி அதை படமாக்க முயற்சித்த ஞானசேகரன், தன் லட்சியம் அதே ஆதிக்க சமூகத்தால் சிதைக்கப்பட்டதில் கோபம் கொள்கிறார். தன்னுடைய ஆட்களை அழைத்து வந்து ஜமீன்தார் கனிவரசனைப் சிறைப்பிடித்து மரணதண்டனை கொடுக்கிறான். பிறகு போலீசில் மாட்டிக்கொள்ளும் ஞானசேகரன் காவலர்களால் கொல்லப்படுகிறான்.

லூயிஸ்பாபு சொன்ன கதைப்படி தலித் பெண்ணை மொட்டையடித்து சித்ரவதை செய்த ஜமீன்தாரின் கொடுமைகள் சினிமாவாக வராமல் செய்வதன் மூலம் மேல்சாதி வர்க்கம் தன் தரப்பு அநீதிகளை மறைத்து வைத்துள்ளனர். அதை மீண்டும் படமாக்கி வெளியிட முடிவு செய்கிறாள் மணிமேகலை. எந்தப் பெண்ணை அந்த ஜமீன்தார் மொட்டையடித்து அவமானப்படுத்தினானோ அதே பெண்ணை அழைத்து வந்து நடிக்கவைத்து நின்று போன சினிமாவை படமாக்கி வெளியிடுகிறாள் மணிமேகலை. தன்னுடைய மனதின் பாரம் வெளியான திருப்தியில் முத்துவின் கரங்களைப் பற்றுகிறாள்.

மேல்சாதி வர்க்கத்தின் அட்டூழியங்களும், அவர்களால் கீழ்சாதி வர்க்கம் அடையும் கொடுமையும் படத்தில் காட்டப்படுகிறது. ஏதாவது ஒரு வகையில் ஆதிக்கசமுதாயம் தன்னுடய கோரமுகத்தைக் காட்டிகொண்டே இருக்கிறது.  ஜமீன்தார் காலத்து கொடுமைகளில் இருந்து தொடங்கி தோள்சீலைப் போராட்டம், கீழ்வெண்மணி படுகொலைகள், திண்ணியத்திலே மலம் தின்ன சொன்ன கொடூரம் வழியாகப் பயணித்து இன்று காதலர்களை பிரிப்பதன் மூலம் கௌரவத்தையும், கலாசாரத்தையும் பாதுகாக்கிறேன் என்று கிளம்பி கௌரவக் கொலை செய்யும் கொடுமைகளாக நீடிக்கிறது ஆதிக்கசாதியின் அநீதிகள்.

மணிமேகலைக்கு படம் எப்படித் தெரிகிறது, ஈ.எஸ்.பி சக்தி, அமானுஷ்யம் என்றெல்லாம் கதையின் போக்கினை சிதறவிடாமல் தேவையானதை மட்டும் சொல்லி இருக்கிறார் இயக்குனர். மணிமேகலை மற்றும் பிரபாவாக நவ்யா நாயர், ஞானசேகரனாக சேரன், லூயிஸ்பாபுவாக பிரகாஷ்ராஜ், ஜமீன்தாராக சீமான் மிகச்சிறப்பாக நடித்துள்ளனர். ஒரே ஒரு காட்சியில் மட்டும் வந்தாலும் மனோரமாவின் நடிப்பு சிறப்பு.

உலக சினிமா, வித்தியாசமான கதை என்று முயற்சிக்கும் இயக்குனர்கள், திரைக்கதை எழுத்தாளர்கள் அனைவரும் பார்க்கவேண்டிய படமிது. இம்மாதிரி படங்களுக்கு மக்கள் வரவேற்பு கிடைக்கவேண்டும். 

அம்மணி படம் வெளியான போது சென்னையில் ஒன்றிரண்டு திரையரங்குகளில் மட்டுமே அப்படம் திரையிடப்பட்டது. அந்த மாதிரி இல்லாமல் இதுபோன்ற படங்களுக்கும் திரையரங்குகள் முன்னுரிமை தரவேண்டும். 

இல்லையென்றால் வாராவாரம் வெள்ளிக்கிழமை வெளியாகும் கதையே இல்லாத குப்பைகளைப் பார்த்து சினிமா ரசிகர்களும், தமிழ் சினிமாவும் கெட்டுப்போய்விடும்.

வியாழன், 15 மார்ச், 2018

The Good, The Bad and The Ugly

செரிகோ லியோனி என்ற இயக்குனரின் ஆக்கத்தில் 1966ல் வெளிவந்த ஒரு இத்தாலிய கௌபாய் சினிமாவின் பெயர் நல்லது, கெட்டது, மற்றும் அசிங்கமானது. மூன்றுவகை மனிதர்களைப் பற்றி பேசுகின்ற ஒரு சிறந்த படம்.

இந்தப் படம் அமெரிக்க உள்நாட்டுபோர் நடக்கும் காலகட்டத்தில் ஒரு தங்கப்புதையலைத் தேடிச்செல்லும் மூன்று துப்பாக்கி வீரர்களைப் பற்றி பேசுகிறது.

இரண்டு லட்சம் டாலர் மதிப்புள்ள புதையலை திருடி பதுக்கி வைத்திருக்கும் கார்சன் என்பவனைப் பற்றி அறிந்தவன் ஸ்டீவன் என்னும் முன்னாள் ராணுவ அதிகாரி. ஸ்டீவனிடம் இருந்து கார்சனைப் பற்றிய தகவலைப் பெற்று வர தன்னுடைய வேலையாளான ஏஞ்சல் ஐஸ் என்பவனை அனுப்புகிறான் பேக்கர் என்பவன். ஸ்டீவனிடம் இருந்து தகவலை அறிந்த பின் அவனைக் கொன்றுவிடுமாறு கூறும் பேக்கர், அதற்கு கூலியாக ஐநூறு டாலர் பணமும் தருகிறான்.

ஸ்டீவனை சந்திக்கும் ஏஞ்சல் ஐஸ், அவனை மிரட்டி கார்சன் பற்றிய விசயத்தை அறிந்து கொள்கிறான். அதே வேளையில் ஸ்டீவன், ஆயிரம் டாலர் கொடுத்து பேக்கரை கொல்ல சொல்கிறான். அதைப் பெற்றுக்கொள்ளும் ஏஞ்சல் ஐஸ் ஏற்கனவே வாங்கிய ஐநூறு டாலருக்காக ஸ்டீவனையும், தற்போது வாங்கிய ஆயிரம் டாலருக்காக பேக்கரையும் கொன்று விட்டு தங்கப்புதையலைத் தேடி தானே புறப்படுகிறான்.
பல குற்றங்கள் செய்ததற்காக டூகோ என்பவன் தலைக்கு இரண்டாயிரம் டாலர் பரிசு அறிவிக்கிறது ஒரு மாகாண அரசு. அவனை பிடித்துக் கொடுக்க மூன்று பேர் முயற்சிக்கும் வேளையில் அவர்களிடம் இருந்து டூகோவைக் காப்பாற்றுகிறான் ப்ளாண்டி என்பவன். பிறகு ப்ளாண்டி அவனைப் பிடித்து மாகாண அரசிடம் கொடுத்து இரண்டாயிரம் டாலர் பெற்றுக்கொள்கிறான்.

டூகோவை தூக்கில் போடும் வேளையில் அவனைக் காப்பாற்றி தூக்கிச் செல்கிறான் ப்ளாண்டி. வெகுதூரம் சென்றதும் ப்ளாண்டி, டூகோ இருவரும் அந்த இரண்டாயிரம் டாலரை பங்கு பிரித்துக் கொள்கிறார்கள். இதே போல் பல மாகாணங்களில் தங்கள் கைவரிசையைக் காட்டி பணம் சம்பாதிக்கிறார்கள் இருவரும்.

“நானே தூக்கு கயிறு ஏறி அபாயத்தை சந்திக்கிறேன். எனவே எனக்கு அடுத்த முறை பாதிக்கும் அதிகமாக வேண்டும்” என்கிறான் டூகோ. “இருந்தாலும், நானே கயிறை வெட்டி உனை விடுவிக்கிறேன்” என்று ப்ளாண்டி எடுத்துக் கூறினாலும் டூகோ புரிந்து கொள்ளவில்லை. டூகோவின் வசைமொழிகளை தாங்க முடியாத ப்ளாண்டி அவனுடைய நட்பை முறித்துக் கொள்கிறான்.
டூகோ, ப்ளாண்டி, ஏஞ்சல் ஐஸ் மூவருமே அந்த தங்கப்புதையலைத் தேடி செல்பவர்கள்தான். ஆனால் தனித்தனி வழிகளில் செல்கிறார்கள்.

தன்னுடன் உறவை முறித்து கொண்ட ப்ளாண்டி மீது கோபம் கொள்ளும் டூகோ வேறு ஒரு இடத்தில் அவனை சிறைப்பிடிக்கிறான். ப்ளாண்டியை பழிவாங்க நினைக்கும் டூகோ அவனை தூக்கில் போட முனைகிறான். அப்போது எங்கிருந்தோ இருந்து வந்த பீரங்கி குண்டு அவர்கள் இருவரும் இருந்த வீட்டின் மீது விழ அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தப்பிச் செல்கிறான் ப்ளாண்டி.

பிறகு மீண்டும் ஓரிடத்தில் ப்ளாண்டியை சிறைப்பிடிக்கிறான் டூகோ. அப்போது ஒரு பாலைவனத்தில் ப்ளாண்டியை வெயிலில் தண்ணீர் கூட இல்லாமல் நடக்க வைத்து அவனை சித்ரவதை செய்கிறான். அவனது தண்ணீர் பாட்டிலை துப்பாக்கியால் சுட்டு வீணாக்குகிறான். தொப்பியையும் எடுத்து விடுகிறான். இறுதியில் மேலும் நடக்க முடியாமல் ப்ளாண்டி கீழே விழும் வேளையில் அவனை சுட எத்தனிக்கிறான் டூகோ.

அப்போது ஒரு குதிரை வண்டி ஓடிவருகிறது. அதை நிறுத்தும் டூகோ அதிலே கார்சனுடன் சிலர் சுடப்பட்டுக் கிடப்பதைக் காண்கிறான். கார்சனிடம் இருந்து அந்தப்புதையல் இருக்கும் சுடுகாட்டின் பெயரை அறிந்து கொள்கிறான். “அந்த சுடுகாட்டில் எந்த சமாதியின் அருகில் உள்ளது” என்று டூகோ கார்சனைக் கேட்க, கார்சனோ தண்ணீர் கேட்கிறான்.

டூகோ தண்ணீர் எடுத்து வரச் செல்லும் வேளையில் சமாதியின் பெயரை கார்சனிடம் இருந்து அறிந்து கொள்கிறான் ப்ளாண்டி. இப்போது குறைந்தபட்சம் அந்த சமாதியின் பெயரை அறிந்து கொள்வதற்காகவேனும் ப்ளாண்டியின் உயிரைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் வந்து விடுகிறது டூகோவிற்கு.

ப்ளாண்டியை தூக்கிச் சென்று அருகில் இருக்கும் ராணுவ முகாமில் வைத்து வைத்தியம் செய்யும் டூகோ, மிக அழகாக நண்பன் வேஷம் போடுகிறான். “நீ என் நண்பன். உன்னைக் காப்பாற்றுவதே என் வேலை” என்று வசனம் பேசுகிறான்.

ப்ளாண்டி குணமானதும் இருவரும் சேர்ந்து அந்த தங்கப் புதையலைத் தேடி புறப்படுகிறார்கள். வழியில் இருவரும் கைது செய்யப்பட்டு ராணுவ முகாமில் கைதிகளாக அடைக்கப்படுகிறார்கள். அங்கே சிறைக்காவலராக வருகிறான் ஏஞ்சல் ஐஸ். கைதியாக வரும் டூகோவை அடித்து உதைத்து அவனிடம் இருந்து சுடுகாட்டின் பெயரை அறிந்து கொள்கிறான்.

ஆனால் சமாதியின் பெயர் தெரியாததால் ப்ளாண்டியை அழைத்து கொண்டு புதையலைத் தேடி புறப்படுகிறான் ஏஞ்சல் ஐஸ். சிறையில் இருந்து தப்பிக்கும் டூகோவும் புதையலைத் தேடி வருகிறான். இதற்கிடையில் ஏஞ்சல் ஐஸிடமிருந்து தப்பிக்கும் ப்ளாண்டி டூகோவை வந்து சேர்கிறான்.

ப்ளாண்டியைப் பொறுத்தவரை டூகோ, ஏஞ்சல் ஐஸ் இருவரில் ஒருவரின் உதவி தேவை. ஆனால் அந்த இருவருக்குமே ப்ளாண்டியின் உதவி தேவை.
டூகோ, ப்ளாண்டி இருவரும் புதையலை அடைந்த போது அங்கு வந்து சேர்கிறான் ஏஞ்சல் ஐஸ். அப்போது நடக்கும் சண்டையில் ஏஞ்சல் ஐஸை சுட்டுக்கொல்கிறான் ப்ளாண்டி. இருவரும் புதையலை பாதி பாதியாக பிரித்துக் கொள்கிறார்கள்.

இறுதியில் டூகோவை தூக்கு கயிற்றில் மாட்டி நிற்க வைத்து விட்டு வெகுதூரம் சென்றபின் அவனை கயிற்றில் இருந்து விடுவிக்கிறான் ப்ளாண்டி. ஆனால் அப்போதும் அவனை பலபல கெட்ட வார்த்தையால் திட்டுகிறான் டூகோ. படத்தின் இறுதியில் ப்ளாண்டி நல்லது என்றும், ஏஞ்சல் ஐஸ் கெட்டது என்றும், டூகோ அசிங்கமானது என்றும் காட்டப்படுகிறது.

இந்தக்கதையில் வரும் மூன்று மனிதர்களைப் போலவே மனிதர்களிலும் நல்லவர்கள், கெட்டவர்கள், அசிங்கமானவர்கள் என்று மூன்று வகையினர் இருக்கிறார்கள். நல்லவர்களும், கெட்டவர்களும் மிக குறைந்த அளவில் இருப்பார்கள். ஆனால் இந்த அசிங்கமானவர்கள் மிகவும் அதிகமாக இருப்பார்கள்.

நன்றிகெட்டதனம், நேரத்திற்கேற்ப நடித்தல், வஞ்சகம், பேராசை, முட்டாள்தனம் இவையே இந்த அசிங்கமானவர்களின் குணங்கள். இவற்றின் மொத்த உருவமாக இருக்கிறான் டூகோ. நேரத்திற்கேற்ப நடிக்கிறான். ஒருமுறை ப்ளாண்டியை கொல்லத்துடிக்கிறான். மறுமுறை பணத்திற்காக ப்ளாண்டியைக் காப்பாற்றத் துடிக்கிறான். ப்ளாண்டியை சித்ரவதை செய்கிறான். அதே ப்ளாண்டியை தனது நண்பன் என்கிறான்.

ஆனால் ப்ளாண்டியும், ஏஞ்சல் ஐஸும் புதையலைத் தேடுவதிலேயே குறியாக இருக்கிறார்கள். இருவருக்கும் ஒரே ஒரு வேறுபாடு ஏஞ்சல் ஐஸ் புதையலை தான் மட்டுமே அடைய நினைக்கிறான். ஆனால் ப்ளாண்டி தன்னோடு கூட்டாளியாக வரும் டூகோவிற்கும் பாதி கொடுக்க நினைக்கிறான்.

நல்லவர்களும் கெட்டவர்களும் எப்போதும் ஒருவருக்கொருவர் எதிரியாக இருப்பார்கள். ஆனால் அசிங்கமானவர்கள் எவருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைத்துக் கொள்வார்கள். ஆனால் எவரையும் நம்புவதில்லை.

அசிங்கமானவனாகக் காட்டப்படும் டூகோ தன்னை எத்தனையோ முறை காப்பாற்றிய டூகோ மீதும் அவநம்பிக்கை கொள்கிறான். அசிங்கமான வார்த்தைகளால் திட்டுகிறான். இப்படிபட்ட மனிதர்கள் நம்மை சுற்றிலும் நிறைய இருப்பார்கள். அவர்களுக்கு ஏஞ்சல் ஐஸ் போன்ற சாத்தான்களையும், ப்ளாண்டி போன்ற கடவுள் தன்மை கொண்டவர்களையும் பிரித்தறிய தெரியாது. அவர்கள் பிரித்தறியவும் முயற்சிப்பதில்லை.

மனிதர்களில் பெரும்பாலோனோர் கடவுளை நம்புவதில் அசிங்கமானவர்களாகவே இருப்பார்கள். சில சமயம் போற்றுவார்கள். சில சமயம் தூற்றுவார்கள். ஏனெனில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. பொறுமையில்லை. அக்கறையும் இல்லை.

கெட்டதை அழித்து விடுங்கள். அசிங்கமானவற்றிற்கு நீங்கள் நல்லதையே செய்தாலும் அதனிடம் இருந்து விலகி இருங்கள். மனிதர்களைப் பற்றியும், தன்னைப் பற்றியும் அறிந்து கொள்வதற்காக ஒவ்வொரு மனிதனும் பார்க்கவேண்டிய திரைப்படம் இது.

செவ்வாய், 6 மார்ச், 2018

அவள் அப்படித்தான்

கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீப்ரியா நடிப்பில், ருத்ரய்யா இயக்கத்தில் 1978ல் வெளிவந்த படம் அவள் அப்படித்தான். ஆணாதிக்க உலகில் அடிபடும் ஒரு பெண்ணின் வாழ்வைப் பற்றிப் பேசுகிறது. மேலும் அது ஒரு பெண்ணினுடைய முட்டாள்தனத்தை பற்றியும் பேசுகிறது.

நாயகி மஞ்சு சிறுவயதிலேயே தனது தாயின் தவறான நடத்தையாலும், தந்தையின் கையாலாகாததனத்தாலும் பாதிக்கப்படுகிறாள். காவல்காரன் சரியாக இல்லாத தோட்டத்தை எந்த ஆடு வேண்டுமானாலும் மேய்ந்து விடலாம். அப்படித்தான் மஞ்சுவையும் சிலர் மேய்ந்து விடுகிறார்கள்.

கல்லூரியில் படிக்கும் வேளையில் ஒருவனைக் காதலிக்க அவன் இவளை ஏமாற்றிவிடுகிறான். நிம்மதியைத் தேடி சர்ச்சுக்கு போகிறாள். அங்கே பாதிரியாருடனும், பாதிரியின் மகனுடனும் பழக்கம் ஏற்படுகிறது. பாதிரியின் மகனைக் காதலிக்கிறாள். அவன் முன்னவனை விட மோசமாக இருக்கிறான். அனைத்தையும் முடித்துவிட்டு அண்ணன் தங்கை என்று வேஷம் போடுகிறான்.

பின்பு மஞ்சு தன்னை முழுவதுமாக மூடியவளாக, கொஞ்சம் திமிர் பிடித்தவளாக மாற்றிக்கொள்கிறாள். ஒரு விளம்பரக் கம்பெனியில் வேலைக்கு சேர்கிறாள். கம்பெனியின் நிர்வாகி தியாகு ஒரு பெண் பித்தன். தியாகு ஆவணப்படம் எடுக்கும் தனது நண்பன் அருணுக்கு உதவி செய்யுமாறு மஞ்சுவைக் கேட்டுக்கொள்கிறான்.

அருண் மஞ்சுவுக்கு உதவி செய்துவரும் வேளையில் அருண் மஞ்சுவைப் பற்றிப் புரிந்துகொள்கிறான். அவனுக்கு மஞ்சு மீது காதல் பிறக்கிறது. மஞ்சுவும் அருணைப்பற்றி புரிந்து கொள்கிறாள் என்றாலும் பலமுறை ஏமாந்த காரணத்தால் தற்போது ஒரு பயம், தற்காப்பு காரணமாக தன் இதயத்தை மூடியே வைத்திருக்கிறாள்.

அவள் முழுவதுமாக மூடிக்கொண்ட அருண் அவளை விட்டுவிடுகிறான். கடைசியாக மஞ்சு இறங்கிவருகிறாள். ஆனால் காலம் கடந்து விடுகிறது. அருண் வேறு ஒரு பெண்ணை மணம் முடித்து விடுகிறான். மஞ்சு மீண்டும் தனிமரமாகிறாள்.

பெண் சுதந்திரம் பற்றிப் பேசும் அனைவரும் கையிலெடுக்கும் முதல் ஆயுதம் அகம்பாவம். ஆணைப்போல உடை உடுத்தினால், அவனைப் போல வேலைக்கு போனால், அவனைப்போல மது அருந்தினால், சிகரெட் பிடித்தால் அதுதான் பெண் சுதந்திரம்.

அவள் ஒரு தொடர்கதை ஒரு திமிரான சொந்தக்காலில் நிற்கும் பெண்ணைப் பற்றிப் பேசியது. ஆனால் தன்னை சட்டாம்பிள்ளை என்று இழிவாகப் பேசும் குடும்பத்துக்காக இரையாகிப் போனவள் அந்த்க் கதையின் நாயகி.

அவள் அப்படித்தான் கதையும் சொந்தக்காலில் நிற்கும் ஒரு பெண்ணாக நாயகியை சித்தரிக்கிறது. ஆனால் இவளோ ஒவ்வொரு முறையும் குடும்பத்தை உருவாக்கிக் கொள்ள ஆசைப்படுகிறவள். தன்னை ஒரு ஆணிடம் ஒப்படைக்க எண்ணுகிறவள். இல்லையெனில் மீண்டும் மீண்டும் காதலித்து ஏமாறவேண்டும். காதல் முழுக்க பொய்யென்று பேசிய அருணிடமே ஏன் காதல் கொள்ள வேண்டும்.

அடுத்தவரை சார்ந்து இருப்பதிலிருந்து விடுபடும் ஒரு மனிதன் மட்டுமே விடுதலை பெற முடியும். சுயச்சார்பு உள்ளவனுக்கு மட்டுமே, சுயச்சார்பு பொருளாதாரத்தை கையிலெடுக்கும் சமூகம் மட்டுமே விடுதலை பெறும். சுயச்சார்பு உள்ள சமூகமாக இருந்த நம்மை அவனைச் சார்ந்து இருக்க வைப்பதன் மூலமே அடிமையாக்கினான் வெள்ளைக்காரன்.

வேறொரு ஆணைச் சார்ந்து இருக்கும் வரை பெண் விடுதலை என்பதே ஒரு தவறான வார்த்தை. ஒரு மனிதன் அடிமையாக இருப்பதையே மேலும் மேலும் விரும்பினால் அவனுக்கு சுதந்திரத்தை ஆண்டவனால் கூட அளிக்க முடியாது. அப்படிப்பட்ட ஒரு பாத்திரம் தான் மஞ்சு.

ஒரு முதலாளிக்கு சேவகனாக இருப்பது ஒருவித அடிமைத்தனம். ஆனால் இந்தச் சேவகன் முதலாளியின் மீது கொண்ட வெறுப்பில் வேலையை உதறிவிட்டு இன்னொரு முதலாளியிடம் வேலைக்கு சேர்வது எந்தவகையில் முதலாளித்துவத்திற்கு எதிரான செயலாகும்? அப்படித்தான் இந்த மஞ்சுவும் ஆணாதிக்கத்திற்கு எதிரானவளாகக் காட்டப்பட்டாலும் ஒவ்வொரு முறையும் ஆணாதிக்கத்தையே விரும்புகிறாள்.

துரதிஷ்டவசமாக பெண்ணியம் தவறான பாதையிலேயே சென்று கொண்டிருக்கிறது. கடைசிக்காட்சியில், அருண் மனைவியிடம் மஞ்சு கேட்கிறாள், “பெண் விடுதலை பற்றி என்ன நினைக்கிறீர்கள்” என்று. அவளோ, தனக்கு அது பற்றி ஒன்றும் தெரியாது என்கிறாள். “அதனால்தான் நீ நிம்மதியாக இருக்கிறாய்” என்கிறாள் மஞ்சு. அதுதான் உண்மையும் கூட. பெண் விடுதலை பற்றி அதிகம் பேசுபவர்கள் தான் இன்று நிம்மதியின்றி இருக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் ஆண்களை எதிர்ப்பதையே குறியாக வைத்திருக்கிறார்கள்.

அன்றைய தினம் இந்தப்படம் ஆஹா ஓஹோ வென்று ஓடியது. ஆனால் இந்தப்படம் பெண்மையை கேவலப்படுத்திதான் இருக்கிறது. தனது தாயின் தவறான நடத்தையால் தன் வாழ்வு கெட்டுப்போனது என்றும், ஆண்கள் அனைவரும் தவறானவர்கள் என்றும் கூறும் மஞ்சு தானும் ஏன் அதே மாதிரியான ஒரு வாழ்க்கைப் பாதையை முன்னெடுக்க வேண்டும்.

தன்னிடம் ஆபீஸில் தவறாக நடக்க முயன்ற இரண்டு ஆண்களை ஏன் அவள் ஒரு அடி கூட அடிக்கவில்லை. அவளும் அதே உடல் இன்பத்தையும், தான் இப்படி அடங்காப்பிடாரியாக இருப்பதையும் மட்டுமே விரும்புகிறாளா?

இதையெல்லாம் பார்க்கும்போது மஞ்சுவை விட, தியாகு மிகவும் யதார்த்தமானவனாக இருக்கிறான். சாக்கடையாக இருக்கும் அவன் தன்னை ஒரு சந்தணக்கிண்ணம் என்று கூறவே இல்லை. அவனைக் காட்டிலும் மஞ்சு ஒரு வெளிப்படையானவளாகவோ, நேர்மையானவளாகவோ இருக்கவில்லை.

படத்தின் கடைசிக்காட்சியில், மஞ்சுவை இறக்கிவிட்டு அருண், அவன் மனைவி, தியாகு இருக்கும் வண்டி முன்னோக்கி செல்கிறது. “மஞ்சு இன்று மீண்டும் இறந்துவிட்டாள். நாளை மீண்டும் பிறப்பாள்” என்று வசனம் ஓடுகிறது.

ஆம். கண்டிப்பாக மீண்டும் இறப்பாள். ஒருமுறை சுட்டபின் அது தீ என்று தெரியாத முட்டாளாக இருந்தால் அவள் மீண்டும் மீண்டும் சூடு வாங்கத்தான் செய்வாள். இது பெண்களுக்கான படம் அல்ல. பாடமும் அல்ல.

வெள்ளி, 20 அக்டோபர், 2017

பாமா விஜயம்

மேஜர் சுந்தர்ராஜன், முத்துராமன், நாகேஷ் நடிப்பில் பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த ஒரு படம் பாமா விஜயம். போலி கௌரவம் வேண்டாம் என்று ஒரே வார்த்தையில் சொன்ன படம்.

ஒரு தந்தை தனது மூன்று மகன்களுக்கும் திருமணம் செய்து ஒரே வீட்டில் தனித்தனியாக குடிவைக்கிறார். மூத்தமகன் மகேஸ்வரனுக்கு கல்லூரியில் இந்தி வாத்தியார் வேலை. இரண்டாவது மகன் ராமனுக்கு குமாஸ்தா வேலை. மூன்றாவது மகன் கிருஷ்ணனுக்கு மருந்து விற்பனையாளர் வேலை.

பக்கத்து வீட்டுக்கு சினிமா நடிகை பாமா குடிவருகிறாள். மருமகள்கள் பார்வதி, சீதா, ருக்மணி மூவரும் பாமாவுடன் தோழிகளாகி, அவளை ஒரு நாள் விருந்துக்கு தங்களது வீட்டுக்கு அழைக்கிறார்கள். பாமாவும் சரி என்கிறாள்.

சினிமா நடிகை பாமா தங்களது வீட்டுக்கு வரும்போது தங்கள் வீடு ஆடம்பரமாகத் தெரிய வேண்டும் என்பதற்காக ஏர்கண்டிஷன், ஃபேன், சோபா, கார், வைர நெக்லஸ் என்று பல பொருட்களை கடனுக்கும், வாடகைக்கும், மாதத்தவணையிலும் வாங்கிக் குவிக்கிறார்கள் மருமகள்கள். பாமாவிடம் பெருமையாகக் காட்டிக்கொள்ள இந்தி, இங்கிலீஸ் படிக்கிறார்கள். ஏன் குழந்தைகளைக் கூட மறைக்கிறார்கள். பாமாவும் வந்து செல்கிறாள்.

மறுமாதத்தில் பொருட்கள் வாங்கியதற்கான தவணையிலும், கடனிலும் சம்பளப்பணத்தில் முக்கால்வாசி காலியாகிறது. பிழைப்பு திண்டாட்டமாகிறது. மாதம் முதல் தேதியன்று குழந்தைகளுக்கு கிடைக்கும் சாக்லேட் கூட கிடைக்கவில்லை. வேறு வழியில்லாமல் மருமகள்கள் மூவரும் வீட்டிலிருந்த பாத்திரங்கள் ஒவ்வொன்றாக அடகுவைக்கிறார்கள். விற்கிறார்கள்.

இதற்கிடையில் மகேஸ்வரன் பாமாவுக்கு இந்தி கற்றுத்தரவும், ராமன் சினிமாவில் வாய்ப்புத் தேடியும், கிருஷ்ணன் தனது கம்பெனி விளம்பரப்படத்தில் நடிக்க வேண்டும் என்றும் வெவ்வேறு கோரிக்கைகளுடன் பாமா வீட்டிற்கு சென்று வருகின்றனர்.

மருமகள்கள் மூவருக்கும் பாடம் கற்பிக்க எண்ணும் மாமனார் ஒரு மொட்டைக்கடுதாசியில், “உங்கள் கணவன்மார்களில் ஒருவன் பாமா வலையில் விழுந்து கிடக்கிறான்” என்று எழுதி மூவருக்கும் தனித்தனியே அனுப்பி வைக்கிறார்.

மருமகள்கள் மூவரும் அதிர்ச்சி அடைகின்றனர். கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது யார் என்று கண்டுபிடிக்க முயற்சி செய்கின்றனர். படிப்படியாக பாமா மோகத்தில் இருந்து விடுபடுகின்றனர். வீடு மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புகிறது.

இந்தக் கதையை மிகச்சிறப்பான திரைக்கதையுடன் படமாக்கி இருக்கிறார் பாலசந்தர். இந்தப் படத்தை இன்றைக்கு இருக்கும் சினிமாக்காரர்கள் கூட ரசிக்கமாட்டார்கள். ஏனெனில் படம் அவ்வளவு எளிமையான விசயத்தைப் பற்றி பேசுகிறது. ஆனால் இந்தப் படம் இன்றைக்கும் தேவையான பாடம். “தேவையற்றதை வாங்கினால் தேவையானதை விற்க வேண்டி வரும்” என்ற பழமொழி சொல்லும் பாடம்தான் பாமா விஜயம்.

இன்றைய நடுத்தர வர்க்கத்தினருக்கான படம் என்றும் கூறலாம். இன்று ஒன்றுமே இல்லாமல் ரோட்டோரம் கிடப்பவனுக்கும், தேவைக்கதிகமாக பணம் வைத்திருப்பவனுக்கும் வராத பல பிரச்சனைகள் மாதச்சம்பளத்தை நம்பி மட்டுமே வாழும் நடுத்தர வர்க்கத்திற்கு உருவாகிறது. காரணம் போலி கௌரவம்.

வாங்குகிற சம்பளம் வெறும் பத்தாயிரமாக இருக்கும். ஆனால் அவன் பனிரெண்டாயிரத்துக்கு ஸ்மார்ட்போன் வாங்குவான் மாதத்தவணையில்.  இன்றைக்கு செல்போன் அவசியம் தான் ஆனால் ஸ்மார்ட்போன் தான் வேண்டும் என்பது ஆடம்பரம்.

வேலைக்குப் போய் சில ஆண்டுகளிலேயே சென்னையில் வீடு வாங்க கனவு கண்டு வங்கியில் கடன் வாங்குவான். இருபது லட்சம் கடன் வாங்கி நாற்பது லட்சமாக திருப்பி கட்டுவான். வட்டி மட்டும் இருபது லட்சம்.

எல்லோரும் வாங்கிவிட்டார்கள் என்பதற்காக தானும் ஆபிஸில் லோன் போட்டு கார் வாங்குவான். பெருமையடித்துக் கொள்வான். கடிசியில் வங்கி லோன், ஆபீஸ் லோன், போன மாதக்கடன் போக சம்பளத்தில் பாதிக்கும் சற்று குறைவாக கையில் பெறுவான். பிறகென்ன, இருபதாம் தேதிக்குப் பிறகு அரைச்சாப்பாடுதான். இல்லையென்றால் பட்ஜெட் சமையல்தான். இதை புத்திசாலித்தனம் என்று வேறு கூறிக்கொள்வான்.

அதாவது இருபது ஆண்டுகள் கழித்து கிடைக்கப்போகும் வீட்டுப் பத்திரத்திற்காக இன்றைய சாப்பாட்டை அடகு வைப்பதற்குப் பெயர் புத்திசாலித்தனம்.

இல்லாத கௌரவத்தை காப்பாற்றுவதற்காக இருக்கின்ற வாய்க்குப் பூட்டுப் போடும் நிலை.

இதிலே என்ன பெரிய சமூகக் கேடா விளைந்து விட்டது என்று கேட்கலாம்.

ஆம். சமூகக்கேடுதான் விளைந்து விட்டது.

முதலில் போலித்தனம் ஒரு தனிமனித தன்மானக் குறைவு. ஒவ்வொருவனும் தன்னைப் பற்றி சிந்திக்காமல் அடுத்தவன் என்ன செய்கிறான் என்பதைப் பற்றியே சிந்திக்கிறான். ஏனெனில் அதைப்போல தானும் ஆகவேண்டும் என நினைக்கிறான். 

தன்னை மற்றவனுடன் ஒப்பிட்டு பார்த்தே தன்னுடைய அடுத்த இலக்கைத் தீர்மானிக்கிறான். இவனுக்கென்று சுயபுத்தி இல்லாமல் போகிறது. மனிதர்கள் தன்னம்பிக்கை குறைந்தவர்களாகவும், மந்தபுத்தி உள்ளவர்களாகவும் மாறி வருகின்றனர்.

மாநகர சாலைகளில் பாருங்கள். இருசக்கர வாகனங்களை விட கார் போன்ற வாகனங்களால் அதிக நெரிசல் உருவாகிறது. மாதத்தவணையில் கார் வாங்கியவன் டிரைவராக வண்டி ஓட்ட மற்ற மூன்று சீட்களும் காலியாக இருக்கும். ஒரே ஒரு மனிதன் சாலையில் கிட்டத்தட்ட எண்பது சதுர அடி நிலத்தை ஆக்கிரமித்தபடி செல்வான் தன்னுடைய கார் மூலமாக.

இது புரியவில்லை என்றால் எல்லா மனிதர்களும் தன்னுடைய காருக்குப் பதிலாக ஒரு பஸ்சை மாதத்தவணையில் வாங்கி அதில் தான் மட்டும் ஏறிச்சென்றால் என்னவாகும் என்று யோசியுங்கள்.

இம்மாதிரி போலிக் கௌரவம் சாதி என்ற பெயரில் மனிதனின் இதயத்தில் ஆழமாக நுழைந்து விடும்போது அதுவே காதலர்களைக் கொல்லும் இரக்கமற்ற சக்தியாகிறது.

இம்மாதிரி விஷத்தை முளையில் அல்ல, விதையாக இருக்கும்போதே மனிதன் தன் மனதில் முளைக்க விடாமல் அழித்து விட வேண்டும். ஏனெனில் மனிதன் தான் அதற்கு தண்ணீர் ஊற்றி வளர்க்கிறான்.

செவ்வாய், 26 செப்டம்பர், 2017

கருத்தம்மா

இந்த நடிகர் நாயகனாகவும், இந்த நடிகை நாயகியாகவும் நடித்து வந்த படம் என்று பாரதிராஜாவின் கருத்தம்மாவைப் பற்றி சொல்ல முடியாது. ஏனெனில் கருத்தம்மாவை மொத்தமாக கதையே தூக்கி நிறுத்துகிறது.

கிராமத்திலுள்ள விவசாயி மொக்கையனுக்கு இரண்டு பெண் பிள்ளைகள். மூத்தவள் பெரியகண்ணி, இரண்டாமவள் கருத்தம்மா. மூன்றாவது மற்றும் நான்காவதும் பெண் குழந்தைகளாகவே பிறந்ததால் அவைகளை கள்ளிப்பால் ஊற்றி கொன்றுவிடச் சொல்லி மருத்துவச்சியிடம் கொடுத்து விட்டார் மொக்கையன்.

ஐந்தாவது கண்டிப்பாக ஆண்குழந்தைதான் பிறக்கும் என்று சாமி குறி சொல்லிவிட்டதால் ஐந்தாவது குழந்தைப் பிறப்புக்காக காத்திருக்கிறார். ஆனால் ஐந்தாவதும் பெண்குழந்தை பிறக்க அதையும் கள்ளிப்பால் ஊற்றிக் கொல்லச் சொல்லி மருத்துவச்சியிடம் கொடுத்து விடுகிறார். அதற்கு கூலியாக மாடு போட்ட ஆண் கன்றை விற்றுப் பணம் தருகிறார்.

ஆராரோ நீ கேட்க ஆயுசு உனக்கு இல்லையடி
புது நெல்லை நான் அவிக்க வீதி வந்து சேர்ந்ததடி
தாய்ப்பால் நீ குடிக்க தலையெழுத்து இலையடி
கள்ளிப்பால் நீ குடிச்சு கண்ணுறங்கு நல்லபடி
அடுத்து ஒரு ஜென்மம் வந்து ஆணாக நீ பொறந்தா
பூமியில இடமிருக்கும் போய்வாடி அன்னக்கிளி...
போய்வாடி அன்னக்கிளி...போய்வாடி அன்னக்கிளி...

என்று பாடிக்கொண்டே மருத்துவச்சி அந்தப்பிள்ளையை கொல்லப்போகும் தருணத்தில் ஊருக்குப் புதிதாக வந்த ஆசிரியர் சூசை அந்த சிசுவை யாருக்கும் தெரியாமல் மருத்துவச்சியிடம் இருந்து வாங்கிச் சென்று விடுகிறார்.
மொக்கையனின் இரண்டு பெண்களும் வளர்ந்து பெரியவளாகின்றனர். பெரியகண்ணியை தனது தங்கச்சி மகன் தவசிக்குத் திருமணம் செய்து வைக்கிறார் மொக்கையன். தவசி ஊர்ப்பெரியவருக்கு கையாளாக இருக்கிறான்.

ஊருக்கு வரும் கால்நடை மருத்துவர் ஸ்டீபன், கருத்தம்மாவுக்கு இடையில் பழக்கம் ஏற்படுகிறது. அது நாளடைவில் காதலாக மாறுகிறது. கணவன் வீட்டுக்கு வாழப்போன பெரியகண்ணிக்கு இரண்டு பெண் பிள்ளைகள். ஏற்கனவே நகை போடவில்லை என்று பெரியகண்ணியை கொடுமைப்படுத்திக் கொண்டிருக்கும் அவளது கணவனும், மாமியாரும் ஆண் குழந்தை பிறக்காததால் மேலும் கொடுமைப் படுத்துகின்றனர். ஆதரவாக இருப்பது மாமனார் மட்டும்தான்.
மூன்றாவது குழந்தையாவது ஆண் பிறக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பில் இருக்கிறாள் பெரியகண்ணி. ஆனால் பிறப்பது பெண்ணாகவே பிறக்கிறது. அதைக் கொன்றுவிடச் சொல்கிறாள் மாமியார். இதனால் பெரியகண்ணிக்கும், மாமியாருக்கும் மோதல் முற்றுகிறது. முடிவில் சிசுவை மாமியார் கொன்று விடுகிறாள். தவசி, பெரியகண்ணியைக் கொன்று விட்டு அவள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாள் என்று ஊரை நம்பவைக்கிறான்.

உண்மையை அறிந்துகொள்ளும் கருத்தம்மா போலீஸில் புகார் கொடுக்கச் செல்கிறாள். ஊர்ப்பெரியவரின் கையாளான போலீஸ் இன்ஸ்பெக்டர் புகாரை ஏற்றுக்கொள்ளாமல் தட்டிக்கழிக்கிறான். பிறகு கருத்தம்மா கால்நடை மருத்துவர் ஸ்டீபனுடன் சேர்ந்து புகார் கொடுக்கவர வேறு வழியின்றி புகாரை ஏற்கிறான் இன்ஸ்பெக்டர். தவசியும், மாமியாரும் போலீஸ் காவலில் வைக்கப்படுகின்றனர்.
பெரியகண்ணியின் இரண்டு பெண் குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு மொக்கையன் வீட்டுக்கு வந்து விடுகிறார் தவசியின் தந்தை. இதற்கிடையில் மொக்கையன் வலிப்பு நோயில் விழுகிறார். ஊருக்கு புதிதாக வந்த டாக்டர் ரோஸி (ஸ்டீபனின் முறைப்பெண்) அவருக்கு வைத்தியம் செய்கிறாள். கருத்தம்மா மற்ற சேவைகளை செய்கிறாள்.

ஊர்ப்பெரியவர் மூலமாக பெயிலில் வெளியே வரும் தவசி கருத்தம்மா, ஸ்டீபனைக் கொல்ல நினைக்கிறான். ஆனால் ஊர்ப்பெரியவர் அறிவுரையின் பேரில், தவசி மொக்கையனிடம் கருத்தம்மாவைப் பெண் கேட்கிறான். மொக்கையனின் நிலம் ஊர்ப்பெரியவரிடம் அடமானமாக இருப்பதால் அதை வைத்தும் மிரட்டுகிறார் பெரியவர். வேறு வழியில்லாமல் ஒத்துக்கொள்கிறான் மொக்கையன்.

கருத்தம்மாவின் கல்யாண நாள் வருகிறது. மகளுக்குப் பிடிக்காத சம்பந்தத்தை பேசிவிட்டோம் என்று அறிந்துகொள்ளும் மொக்கையன் விஷமருந்தி விடுகிறார். கருத்தம்மா மீதான காதலை அறிந்துகொண்ட ரோஸிக்கும், ஸ்டீபனுக்கும் இடையே மோதல் வெடிக்கிறது. மனம் உடைந்த ரோஸி தனியாக ஊருக்குக் கிளம்புகிறாள். தன்து தந்தை சூசை சொல்லியும் கேட்கவில்லை.

மொக்கையனின் நிலையை அறிந்த மருத்துவச்சி ரோஸியைத் தேடி வருகிறாள். வைத்தியம் செய்ய முதலில் மறுக்கும் ரோஸி, மொக்கையன் வேறு யாருமல்ல தன்னைப் பெற்ற தந்தை என்பதை மருத்துவச்சி வாயிலாக அறிந்துகொண்டபின் வைத்தியம் செய்கிறாள்.

இருபத்தைந்து வருடங்களுக்கு முன் மொக்கையனால் கொல்லப்பட்ட அவளது ஐந்தாவது பெண் இன்று ஆசிரியர் தயவால் டாக்டராகி அவரது உயிரைக் காப்பாற்றுகிறது. கருத்தம்மாவின் பரிதாப நிலையை மொக்கையன் சொல்ல அனைவரும் கருத்தம்மாவைத் தேடி வருகின்றனர்.
  
இதற்கிடையில் கருத்தம்மாவிற்கு கல்யாண ஏற்பாடுகள் நடக்கின்றன. “கல்யாணத்திற்கு முன் ஒரு நாள் இரவு அவள் என்னுடன் தங்கவேண்டும். அதற்காக நான் உனக்கு என்ன வேண்டுமானாலும் தருகிறேன்” என்று தவசியிடம் பேரம் பேசுகிறார் ஊர்ப்பெரியவர். தங்களது அனைத்து திட்டங்களுக்கும் தடையாக விளங்கும் தவசியின் தந்தையை இருவரும் சேர்ந்து தீ வைத்துக் கொளுத்தி விடுகின்றனர்.

திட்டத்தை அறிந்து கொள்ளும் கருத்தம்மா தன்னை நெருங்கும் ஊர்ப்பெரியவரை குத்திக் கொலை செய்கிறாள். எல்லாவற்றுக்கும் காரணமாக இருந்த தவசியை உலக்கையால் அடித்துக் கொன்றுவிட்டு பெரியகண்ணியின் இரண்டு பெண் குழந்தைகளையும் தூக்கிக் கொண்டு தன் ஊரை நோக்கி வருகிறாள் கருத்தம்மா.

எதிரே வரும் ரோஸி தனது தங்கை என்றறிந்து கொள்ளும் கருத்தம்மா தனது காதலனையும், அக்கா குழந்தைகள் இரண்டையும் அவளிடம் ஒப்படைத்துவிட்டு ஜெயிலுக்குப் போகிறாள்.

அக்காவா நீ பொறந்த அடையாளம் தெரியலடி
அடையாளம் தெரியுறப்போ என் அடிவயிறு எரியுதடி
ஆண் செய்யும் கடமை எல்லாம் நீ செய்த நியாயப்படி
சட்டத்துக்கு குத்தமடி தர்மத்துக்கு நியாயமடி
சட்டத்துக்கும் தர்மத்துக்கும் சத்தியமா கண்ணிருந்தா
பொட்டக்காடு பூப்பூக்கும் போய்வாடி அன்னக்களி
போய்வாடி அன்னக்கிளி போய்வாடி அன்னக்கிளி

என்று பாடல் பின்புலத்தில் ஒலிக்க படம் முடிகிறது. படத்தின் நிகழ்வுகளைப் பார்த்துக் கொண்டே பாடலைக் கேட்கும் பார்வையாளனால் கண்களிலிருந்து நீர் வருவதைக் கட்டுப்படுத்த முடிவதில்லை.

தமிழ்ச் சமூகத்திற்கு வேண்டிய அறிவுரைகளை தன் படத்தின் வழியாக பார்ப்பவர்கள் ஏற்றுக்கொள்ளும் படியாகக் கூறி தமிழ்சமூகத்தை பண்படுத்திய விவசாயி பாரதிராஜா.

பெண் குழந்தைகளைத் தாழ்வாக எண்ண வேண்டாம். பெண் சிசுக்கொலை வேண்டாம் என்பதை அழுத்தமாக இப்படத்தில் கூறியிருக்கிறார் பாரதிராஜா. மிகவும் பாராட்டப்படவேண்டிய திரைப்படம். அவரால் நாம் கொஞ்சம் மாறினோம். ஆனால் முழுதாகத் திருந்தவில்லை. அவரது கருத்தம்மாவும், புதுமைப்பெண்ணும் பெண்கள் அனைவரும் பார்க்கவேண்டிய படைப்புக்கள்.

இக்கதையின் ரோஸி சமூகத்தின் வாளுக்குத் தப்பி டாக்டரான பெண் என்றாலும் அவளுக்கு ஆசிரியரின் தயவு ஏற்கனவே கிடைத்திருக்கிறது. ஆனால் கருத்தம்மா சுயம்புவான புதுமைப்பெண். யாருடைய ஆதரவுமின்றி தன் தடைகளை உடைத்தெறிந்தவள்.

படித்த பெண்ணான ரோஸி போன்றவர்களின் தாயுள்ளத்தால்தான் மொக்கையன் போன்ற முட்டாள் தகப்பன்கள் காப்பாற்றப்படுகிறார்கள். அதேநேரம் கருத்தம்மா போன்ற சாதாரணப்பெண்களின் போர்க்குணத்தால் தவசி, ஊர்ப்பெரியவர் போன்றவர்கள் கண்டிக்கப்படுகிறார்கள் அல்லது தண்டிக்கப்படுகிறார்கள் என்பதை ஆண்கள் புரிந்துகொள்ள வேண்டும்.