வியாழன், 15 மார்ச், 2018

The Good, The Bad and The Ugly

செரிகோ லியோனி என்ற இயக்குனரின் ஆக்கத்தில் 1966ல் வெளிவந்த ஒரு இத்தாலிய கௌபாய் சினிமாவின் பெயர் நல்லது, கெட்டது, மற்றும் அசிங்கமானது. மூன்றுவகை மனிதர்களைப் பற்றி பேசுகின்ற ஒரு சிறந்த படம்.

இந்தப் படம் அமெரிக்க உள்நாட்டுபோர் நடக்கும் காலகட்டத்தில் ஒரு தங்கப்புதையலைத் தேடிச்செல்லும் மூன்று துப்பாக்கி வீரர்களைப் பற்றி பேசுகிறது.

இரண்டு லட்சம் டாலர் மதிப்புள்ள புதையலை திருடி பதுக்கி வைத்திருக்கும் கார்சன் என்பவனைப் பற்றி அறிந்தவன் ஸ்டீவன் என்னும் முன்னாள் ராணுவ அதிகாரி. ஸ்டீவனிடம் இருந்து கார்சனைப் பற்றிய தகவலைப் பெற்று வர தன்னுடைய வேலையாளான ஏஞ்சல் ஐஸ் என்பவனை அனுப்புகிறான் பேக்கர் என்பவன். ஸ்டீவனிடம் இருந்து தகவலை அறிந்த பின் அவனைக் கொன்றுவிடுமாறு கூறும் பேக்கர், அதற்கு கூலியாக ஐநூறு டாலர் பணமும் தருகிறான்.

ஸ்டீவனை சந்திக்கும் ஏஞ்சல் ஐஸ், அவனை மிரட்டி கார்சன் பற்றிய விசயத்தை அறிந்து கொள்கிறான். அதே வேளையில் ஸ்டீவன், ஆயிரம் டாலர் கொடுத்து பேக்கரை கொல்ல சொல்கிறான். அதைப் பெற்றுக்கொள்ளும் ஏஞ்சல் ஐஸ் ஏற்கனவே வாங்கிய ஐநூறு டாலருக்காக ஸ்டீவனையும், தற்போது வாங்கிய ஆயிரம் டாலருக்காக பேக்கரையும் கொன்று விட்டு தங்கப்புதையலைத் தேடி தானே புறப்படுகிறான்.
பல குற்றங்கள் செய்ததற்காக டூகோ என்பவன் தலைக்கு இரண்டாயிரம் டாலர் பரிசு அறிவிக்கிறது ஒரு மாகாண அரசு. அவனை பிடித்துக் கொடுக்க மூன்று பேர் முயற்சிக்கும் வேளையில் அவர்களிடம் இருந்து டூகோவைக் காப்பாற்றுகிறான் ப்ளாண்டி என்பவன். பிறகு ப்ளாண்டி அவனைப் பிடித்து மாகாண அரசிடம் கொடுத்து இரண்டாயிரம் டாலர் பெற்றுக்கொள்கிறான்.

டூகோவை தூக்கில் போடும் வேளையில் அவனைக் காப்பாற்றி தூக்கிச் செல்கிறான் ப்ளாண்டி. வெகுதூரம் சென்றதும் ப்ளாண்டி, டூகோ இருவரும் அந்த இரண்டாயிரம் டாலரை பங்கு பிரித்துக் கொள்கிறார்கள். இதே போல் பல மாகாணங்களில் தங்கள் கைவரிசையைக் காட்டி பணம் சம்பாதிக்கிறார்கள் இருவரும்.

“நானே தூக்கு கயிறு ஏறி அபாயத்தை சந்திக்கிறேன். எனவே எனக்கு அடுத்த முறை பாதிக்கும் அதிகமாக வேண்டும்” என்கிறான் டூகோ. “இருந்தாலும், நானே கயிறை வெட்டி உனை விடுவிக்கிறேன்” என்று ப்ளாண்டி எடுத்துக் கூறினாலும் டூகோ புரிந்து கொள்ளவில்லை. டூகோவின் வசைமொழிகளை தாங்க முடியாத ப்ளாண்டி அவனுடைய நட்பை முறித்துக் கொள்கிறான்.
டூகோ, ப்ளாண்டி, ஏஞ்சல் ஐஸ் மூவருமே அந்த தங்கப்புதையலைத் தேடி செல்பவர்கள்தான். ஆனால் தனித்தனி வழிகளில் செல்கிறார்கள்.

தன்னுடன் உறவை முறித்து கொண்ட ப்ளாண்டி மீது கோபம் கொள்ளும் டூகோ வேறு ஒரு இடத்தில் அவனை சிறைப்பிடிக்கிறான். ப்ளாண்டியை பழிவாங்க நினைக்கும் டூகோ அவனை தூக்கில் போட முனைகிறான். அப்போது எங்கிருந்தோ இருந்து வந்த பீரங்கி குண்டு அவர்கள் இருவரும் இருந்த வீட்டின் மீது விழ அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தப்பிச் செல்கிறான் ப்ளாண்டி.

பிறகு மீண்டும் ஓரிடத்தில் ப்ளாண்டியை சிறைப்பிடிக்கிறான் டூகோ. அப்போது ஒரு பாலைவனத்தில் ப்ளாண்டியை வெயிலில் தண்ணீர் கூட இல்லாமல் நடக்க வைத்து அவனை சித்ரவதை செய்கிறான். அவனது தண்ணீர் பாட்டிலை துப்பாக்கியால் சுட்டு வீணாக்குகிறான். தொப்பியையும் எடுத்து விடுகிறான். இறுதியில் மேலும் நடக்க முடியாமல் ப்ளாண்டி கீழே விழும் வேளையில் அவனை சுட எத்தனிக்கிறான் டூகோ.

அப்போது ஒரு குதிரை வண்டி ஓடிவருகிறது. அதை நிறுத்தும் டூகோ அதிலே கார்சனுடன் சிலர் சுடப்பட்டுக் கிடப்பதைக் காண்கிறான். கார்சனிடம் இருந்து அந்தப்புதையல் இருக்கும் சுடுகாட்டின் பெயரை அறிந்து கொள்கிறான். “அந்த சுடுகாட்டில் எந்த சமாதியின் அருகில் உள்ளது” என்று டூகோ கார்சனைக் கேட்க, கார்சனோ தண்ணீர் கேட்கிறான்.

டூகோ தண்ணீர் எடுத்து வரச் செல்லும் வேளையில் சமாதியின் பெயரை கார்சனிடம் இருந்து அறிந்து கொள்கிறான் ப்ளாண்டி. இப்போது குறைந்தபட்சம் அந்த சமாதியின் பெயரை அறிந்து கொள்வதற்காகவேனும் ப்ளாண்டியின் உயிரைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் வந்து விடுகிறது டூகோவிற்கு.

ப்ளாண்டியை தூக்கிச் சென்று அருகில் இருக்கும் ராணுவ முகாமில் வைத்து வைத்தியம் செய்யும் டூகோ, மிக அழகாக நண்பன் வேஷம் போடுகிறான். “நீ என் நண்பன். உன்னைக் காப்பாற்றுவதே என் வேலை” என்று வசனம் பேசுகிறான்.

ப்ளாண்டி குணமானதும் இருவரும் சேர்ந்து அந்த தங்கப் புதையலைத் தேடி புறப்படுகிறார்கள். வழியில் இருவரும் கைது செய்யப்பட்டு ராணுவ முகாமில் கைதிகளாக அடைக்கப்படுகிறார்கள். அங்கே சிறைக்காவலராக வருகிறான் ஏஞ்சல் ஐஸ். கைதியாக வரும் டூகோவை அடித்து உதைத்து அவனிடம் இருந்து சுடுகாட்டின் பெயரை அறிந்து கொள்கிறான்.

ஆனால் சமாதியின் பெயர் தெரியாததால் ப்ளாண்டியை அழைத்து கொண்டு புதையலைத் தேடி புறப்படுகிறான் ஏஞ்சல் ஐஸ். சிறையில் இருந்து தப்பிக்கும் டூகோவும் புதையலைத் தேடி வருகிறான். இதற்கிடையில் ஏஞ்சல் ஐஸிடமிருந்து தப்பிக்கும் ப்ளாண்டி டூகோவை வந்து சேர்கிறான்.

ப்ளாண்டியைப் பொறுத்தவரை டூகோ, ஏஞ்சல் ஐஸ் இருவரில் ஒருவரின் உதவி தேவை. ஆனால் அந்த இருவருக்குமே ப்ளாண்டியின் உதவி தேவை.
டூகோ, ப்ளாண்டி இருவரும் புதையலை அடைந்த போது அங்கு வந்து சேர்கிறான் ஏஞ்சல் ஐஸ். அப்போது நடக்கும் சண்டையில் ஏஞ்சல் ஐஸை சுட்டுக்கொல்கிறான் ப்ளாண்டி. இருவரும் புதையலை பாதி பாதியாக பிரித்துக் கொள்கிறார்கள்.

இறுதியில் டூகோவை தூக்கு கயிற்றில் மாட்டி நிற்க வைத்து விட்டு வெகுதூரம் சென்றபின் அவனை கயிற்றில் இருந்து விடுவிக்கிறான் ப்ளாண்டி. ஆனால் அப்போதும் அவனை பலபல கெட்ட வார்த்தையால் திட்டுகிறான் டூகோ. படத்தின் இறுதியில் ப்ளாண்டி நல்லது என்றும், ஏஞ்சல் ஐஸ் கெட்டது என்றும், டூகோ அசிங்கமானது என்றும் காட்டப்படுகிறது.

இந்தக்கதையில் வரும் மூன்று மனிதர்களைப் போலவே மனிதர்களிலும் நல்லவர்கள், கெட்டவர்கள், அசிங்கமானவர்கள் என்று மூன்று வகையினர் இருக்கிறார்கள். நல்லவர்களும், கெட்டவர்களும் மிக குறைந்த அளவில் இருப்பார்கள். ஆனால் இந்த அசிங்கமானவர்கள் மிகவும் அதிகமாக இருப்பார்கள்.

நன்றிகெட்டதனம், நேரத்திற்கேற்ப நடித்தல், வஞ்சகம், பேராசை, முட்டாள்தனம் இவையே இந்த அசிங்கமானவர்களின் குணங்கள். இவற்றின் மொத்த உருவமாக இருக்கிறான் டூகோ. நேரத்திற்கேற்ப நடிக்கிறான். ஒருமுறை ப்ளாண்டியை கொல்லத்துடிக்கிறான். மறுமுறை பணத்திற்காக ப்ளாண்டியைக் காப்பாற்றத் துடிக்கிறான். ப்ளாண்டியை சித்ரவதை செய்கிறான். அதே ப்ளாண்டியை தனது நண்பன் என்கிறான்.

ஆனால் ப்ளாண்டியும், ஏஞ்சல் ஐஸும் புதையலைத் தேடுவதிலேயே குறியாக இருக்கிறார்கள். இருவருக்கும் ஒரே ஒரு வேறுபாடு ஏஞ்சல் ஐஸ் புதையலை தான் மட்டுமே அடைய நினைக்கிறான். ஆனால் ப்ளாண்டி தன்னோடு கூட்டாளியாக வரும் டூகோவிற்கும் பாதி கொடுக்க நினைக்கிறான்.

நல்லவர்களும் கெட்டவர்களும் எப்போதும் ஒருவருக்கொருவர் எதிரியாக இருப்பார்கள். ஆனால் அசிங்கமானவர்கள் எவருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைத்துக் கொள்வார்கள். ஆனால் எவரையும் நம்புவதில்லை.

அசிங்கமானவனாகக் காட்டப்படும் டூகோ தன்னை எத்தனையோ முறை காப்பாற்றிய டூகோ மீதும் அவநம்பிக்கை கொள்கிறான். அசிங்கமான வார்த்தைகளால் திட்டுகிறான். இப்படிபட்ட மனிதர்கள் நம்மை சுற்றிலும் நிறைய இருப்பார்கள். அவர்களுக்கு ஏஞ்சல் ஐஸ் போன்ற சாத்தான்களையும், ப்ளாண்டி போன்ற கடவுள் தன்மை கொண்டவர்களையும் பிரித்தறிய தெரியாது. அவர்கள் பிரித்தறியவும் முயற்சிப்பதில்லை.

மனிதர்களில் பெரும்பாலோனோர் கடவுளை நம்புவதில் அசிங்கமானவர்களாகவே இருப்பார்கள். சில சமயம் போற்றுவார்கள். சில சமயம் தூற்றுவார்கள். ஏனெனில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. பொறுமையில்லை. அக்கறையும் இல்லை.

கெட்டதை அழித்து விடுங்கள். அசிங்கமானவற்றிற்கு நீங்கள் நல்லதையே செய்தாலும் அதனிடம் இருந்து விலகி இருங்கள். மனிதர்களைப் பற்றியும், தன்னைப் பற்றியும் அறிந்து கொள்வதற்காக ஒவ்வொரு மனிதனும் பார்க்கவேண்டிய திரைப்படம் இது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக