திங்கள், 19 மார்ச், 2018

ஆடும் கூத்து

சேரன், நவ்யா நாயர், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடிப்பில் டி.வி.சந்திரன் என்ற மலையாள இயக்குனரின் கைவண்ணத்தில் வெளியான படம் ஆடும் கூத்து. தமிழ்படங்களிலேயே மிகச்சிறந்த ஒரு படம். ஆனால் யாருக்கும் தெரியாமலேயே போய்விட்ட படம்.

இந்தப்படம் நன்றாக ஓடவில்லை எனும்போது உலகசினிமா பற்றி  எழுதுகிறவர்ளுக்கு கூட இந்தப்படம் தெரியாமல் போய்விட்டதோ என்று நினைக்கத் தோன்றுகிறது. ஒருவேளை அவர்கள் எழுதினாலும் இம்மாதிரி படங்களை ரசிக்க தமிழ் ரசிகனுக்கு விருப்பமில்லையோ என்னவோ?

வெடிபடு மண்டத் திடிபல தாளம்போட – வெறும்
வெளியிலி ரத்தக் களியொடு பூதம்பாட – பாட்டின்
அடிபடு பொருளும் அடிபடு மொலியிற் கூடக் – களித்
தாடுங்காளீ, சாமுண்டீ, கங்காளீ!

அன்னை அன்னை ஆடும்கூத்தை
நாடச்செய்தாய் என்னை

என்ற பாரதியின் பாடல் வரிகள் டைட்டில் கார்டில் பிண்ணனி இசையாக வர படம் தொடங்குகிறது. கதை நடக்கும் காலம் 1985ம் ஆண்டு.

ஒரு ஊரின் வாய்க்காலில் ஒருவனை மூன்று பேர் சேர்ந்து வெட்டிக்கொலை செய்கிறார்கள். அதை சற்று தொலைவில் சுற்றும் ராட்டினத்தில் மேலே இருந்து பார்த்து விடுகிறாள் மணிமேகலை. உடனே இறங்கி வந்து அப்பாவையும் மற்ற ஆட்களையும் கூட்டி வந்து காட்டுகிறாள். ஆனால் கொலை நடந்ததற்கான தடயம் எதுவும் தென்படுவதில்லை.

“மற்றவங்க கண்ணுக்குத் தெரியாததெல்லாம் உனக்கு மட்டும் ஏன் தான் தெரியுதோ” என்று நொந்து கொள்கிறார் அப்பா அழகிய நம்பி பிள்ளை. இவள் கண்டதை யாரும் நம்பவில்லை.

கருப்பு வெள்ளை சினிமாவின் கழிவு பிலிமில் இருந்து செய்யப்பட்ட ஒரு வளையலை மணிமேகலையின் முறைமாமன் முத்து திருவிழாவில் இருந்து வாங்கிவந்து மணிமேகலைக்கு பரிசாகத் தருகிறான். அந்தப் பிலிமில் ஒரு சினிமா இருக்கிறது என்று முத்து சொல்வதைப் பார்த்து கேலி செய்கிறாள் மணிமேகலை.
மறுநாள் கால்வாயில் அமர்ந்து துணி துவைக்கும் போது அந்த வளையலில் இருந்து ஒளிக்கீற்று புறப்பட்டு ஒரு படம் ஓடத்துவங்குகிறது. அதிலே ஒரு இளம் காதல் ஜோடி தெருக்கூத்து ஆடுகின்றனர். ஒரு ஜமீன்தார் ஒரு சிலரைக்கட்டி வைத்து சவுக்கால் அடிக்கிறார்.

அதைப்பார்த்து பயப்படும் மணிமேகலை ஓடிவந்து முத்துவிடம் கூறுகிறாள். மணிமேகலை ஏதேதோ உளறுவதாக நினைக்கும் முத்து அவளது வீட்டில் சொல்லி ஒரு மனநல மருத்துவரிடம் காட்ட ஏற்பாடு செய்கிறான். அனால் மருத்துவரோ அவளுக்கு ஒன்றுமில்லை என்று சொல்லி வெறுமனே சம்பிரதாயத்திற்கு இரண்டு மாத்திரைகளை எழுதிக்கொடுத்து விட்டு செல்கிறார்.

இதற்கிடையில் ஊர் கால்வாயில் ஒரு பிணம் கண்டெடுக்கப்பட மணிமேகலை ராட்டினத்தில் இருந்து பார்த்தது உண்மைதான் என்று அனைவரும் நம்புகின்றனர். இப்போது மணிமேகலையின் வளையலில் இருந்து ஒளிக்கீற்றுக்களுடன் மீண்டும் அந்தக் காட்சி விரிகிறது. அதிலே அந்த ஜமீன்தார் மோகவயப்பட்டு அந்த கூத்தாடிப் பெண்னைத் தூக்கிவரச் சொல்லி தன் ஆட்களிடம் ஏவ, அவர்கள் அந்தப் பெண்னை துரத்தி வருகிறார்கள். அதைப் பார்த்து மணிமேகலை மிகவும் பயப்படுகிறாள். ஏனெனில் அந்தக் கூத்தாடிப் பெண்ணாக வருவது மணிமேகலையேதான்.

இரண்டாவது முறை மணிமேகலையைப் பரிசோதிக்கும் மருத்துவர், கல்யாணம் செய்து வைத்தால் சரியாகிவிடும் என்கிறார். மணிமேகலைக்கும் முத்துவுக்கும் திருமணம் நிச்சயம் ஆகிறது. மணமேடையில் இருக்கும் வேளையில் மீண்டும் அந்தக் காட்சி தெரிகிறது. அதிலே ஜமீன்தாரின் ஆட்கள் தாசி என்று சொல்லி அந்தக் கூத்தாடிப் பெண்ணைக் கட்டி வைத்து மொட்டையடித்து விடுகிறார்கள். அதைப்பார்க்கும் மணிமேகலை மணமேடையிலேயே அலறி ஆர்ப்பாட்டம் செய்து விடுகிறாள். கல்யாணம் நின்று விடுகிறது.

மனம் வெறுத்துப் போகும் முத்து சொந்த ஊரில் செய்யும் ஜவுளிக்கடை வேலையை விட்டுவிட்டு அயலூரில் ஒரு பத்திரிக்கை அலுவலகத்தில் வேலைக்கு சேர்கிறான். அங்கே பழைய செய்திகளை கணிணியில் படிக்கும் போது மணிமேகலைக்கு தெரிந்த காட்சிகளுக்கு இணையான ஒரு சம்பவம் பற்றிப் படிக்கிறான். உடனே அந்த செய்தித்தாளை மணிமேகலையிடம் கொண்டு வருகிறான்.
தன்னுடைய மனதில் இருந்து உறுத்திக்கொண்டிருக்கும் விசயத்திற்கு ஒரு விடை கிடைக்கப்போகிற சந்தோசத்தில் மணிமேகலை முத்துவை அழைத்துக் கொண்டு சம்பந்தப் பட்ட ஊரான கடையநல்லூருக்கு பயணிக்கிறார்கள். அந்த ஊரிலே உள்ள ஓய்வுபெற்ற ஆசிரியர் லூயிஸ்பாபுவைச் சந்தித்து விவரம் கேட்கிறார்கள். லூயிஸ்பாபு விவரத்தை சொல்லத் தொடங்குகிறார்.

1975ல் இந்திராகாந்தியின் எமர்ஜென்சி காலகட்டத்தில் ஞானசேகரன் என்ற இயக்குனர் தன் ஆசைக்கு இணங்காத கூத்தாடிப் பெண்னை தாசி என்று சொல்லி மொட்டையடித்த ஒரு ஜமீன்தாரின் கதையை படமாக்க முயற்சிக்கிறார். கூத்தாடிப் பெண்ணாக பிரபா என்ற நடிகையும், அவளது காதலனாக ஞானசேகரனும் நடிக்கின்றனர். மேலும் ஜமீன்தாராக இந்த லூயிஸ்பாபு ஆசிரியர்.

இதற்கிடையில் உண்மையிலேயே அந்தக் கொடூரத்தை செய்த அன்பரசன் ஜமீன்தாரின் மகன் கனிவரசன் இந்தப் படப்பிடிப்பை தடுக்க முயற்சிக்கிறான். அவன் செய்த ரகளையில் படப்பிடிப்பு நின்று விடுகிறது. அவமானத்தில் நடிகை பிரபா தற்கொலை செய்து கொள்கிறாள். தன்னுடைய காதலியான பிரபா இறந்து போன சோகத்தில் இயக்குனர் ஞானசேகரன் ஒரு இளைஞர் இயக்கத்தில் சேர்ந்து விடுகிறார்.
ஆதிக்க சமூகத்தின் அக்கிரமங்களை பொறுக்க முடியாமல் இயக்குனராகி அதை படமாக்க முயற்சித்த ஞானசேகரன், தன் லட்சியம் அதே ஆதிக்க சமூகத்தால் சிதைக்கப்பட்டதில் கோபம் கொள்கிறார். தன்னுடைய ஆட்களை அழைத்து வந்து ஜமீன்தார் கனிவரசனைப் சிறைப்பிடித்து மரணதண்டனை கொடுக்கிறான். பிறகு போலீசில் மாட்டிக்கொள்ளும் ஞானசேகரன் காவலர்களால் கொல்லப்படுகிறான்.

லூயிஸ்பாபு சொன்ன கதைப்படி தலித் பெண்ணை மொட்டையடித்து சித்ரவதை செய்த ஜமீன்தாரின் கொடுமைகள் சினிமாவாக வராமல் செய்வதன் மூலம் மேல்சாதி வர்க்கம் தன் தரப்பு அநீதிகளை மறைத்து வைத்துள்ளனர். அதை மீண்டும் படமாக்கி வெளியிட முடிவு செய்கிறாள் மணிமேகலை. எந்தப் பெண்ணை அந்த ஜமீன்தார் மொட்டையடித்து அவமானப்படுத்தினானோ அதே பெண்ணை அழைத்து வந்து நடிக்கவைத்து நின்று போன சினிமாவை படமாக்கி வெளியிடுகிறாள் மணிமேகலை. தன்னுடைய மனதின் பாரம் வெளியான திருப்தியில் முத்துவின் கரங்களைப் பற்றுகிறாள்.

மேல்சாதி வர்க்கத்தின் அட்டூழியங்களும், அவர்களால் கீழ்சாதி வர்க்கம் அடையும் கொடுமையும் படத்தில் காட்டப்படுகிறது. ஏதாவது ஒரு வகையில் ஆதிக்கசமுதாயம் தன்னுடய கோரமுகத்தைக் காட்டிகொண்டே இருக்கிறது.  ஜமீன்தார் காலத்து கொடுமைகளில் இருந்து தொடங்கி தோள்சீலைப் போராட்டம், கீழ்வெண்மணி படுகொலைகள், திண்ணியத்திலே மலம் தின்ன சொன்ன கொடூரம் வழியாகப் பயணித்து இன்று காதலர்களை பிரிப்பதன் மூலம் கௌரவத்தையும், கலாசாரத்தையும் பாதுகாக்கிறேன் என்று கிளம்பி கௌரவக் கொலை செய்யும் கொடுமைகளாக நீடிக்கிறது ஆதிக்கசாதியின் அநீதிகள்.

மணிமேகலைக்கு படம் எப்படித் தெரிகிறது, ஈ.எஸ்.பி சக்தி, அமானுஷ்யம் என்றெல்லாம் கதையின் போக்கினை சிதறவிடாமல் தேவையானதை மட்டும் சொல்லி இருக்கிறார் இயக்குனர். மணிமேகலை மற்றும் பிரபாவாக நவ்யா நாயர், ஞானசேகரனாக சேரன், லூயிஸ்பாபுவாக பிரகாஷ்ராஜ், ஜமீன்தாராக சீமான் மிகச்சிறப்பாக நடித்துள்ளனர். ஒரே ஒரு காட்சியில் மட்டும் வந்தாலும் மனோரமாவின் நடிப்பு சிறப்பு.

உலக சினிமா, வித்தியாசமான கதை என்று முயற்சிக்கும் இயக்குனர்கள், திரைக்கதை எழுத்தாளர்கள் அனைவரும் பார்க்கவேண்டிய படமிது. இம்மாதிரி படங்களுக்கு மக்கள் வரவேற்பு கிடைக்கவேண்டும். 

அம்மணி படம் வெளியான போது சென்னையில் ஒன்றிரண்டு திரையரங்குகளில் மட்டுமே அப்படம் திரையிடப்பட்டது. அந்த மாதிரி இல்லாமல் இதுபோன்ற படங்களுக்கும் திரையரங்குகள் முன்னுரிமை தரவேண்டும். 

இல்லையென்றால் வாராவாரம் வெள்ளிக்கிழமை வெளியாகும் கதையே இல்லாத குப்பைகளைப் பார்த்து சினிமா ரசிகர்களும், தமிழ் சினிமாவும் கெட்டுப்போய்விடும்.

2 கருத்துகள்: