வெள்ளி, 20 அக்டோபர், 2017

பாமா விஜயம்

மேஜர் சுந்தர்ராஜன், முத்துராமன், நாகேஷ் நடிப்பில் பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த ஒரு படம் பாமா விஜயம். போலி கௌரவம் வேண்டாம் என்று ஒரே வார்த்தையில் சொன்ன படம்.

ஒரு தந்தை தனது மூன்று மகன்களுக்கும் திருமணம் செய்து ஒரே வீட்டில் தனித்தனியாக குடிவைக்கிறார். மூத்தமகன் மகேஸ்வரனுக்கு கல்லூரியில் இந்தி வாத்தியார் வேலை. இரண்டாவது மகன் ராமனுக்கு குமாஸ்தா வேலை. மூன்றாவது மகன் கிருஷ்ணனுக்கு மருந்து விற்பனையாளர் வேலை.

பக்கத்து வீட்டுக்கு சினிமா நடிகை பாமா குடிவருகிறாள். மருமகள்கள் பார்வதி, சீதா, ருக்மணி மூவரும் பாமாவுடன் தோழிகளாகி, அவளை ஒரு நாள் விருந்துக்கு தங்களது வீட்டுக்கு அழைக்கிறார்கள். பாமாவும் சரி என்கிறாள்.

சினிமா நடிகை பாமா தங்களது வீட்டுக்கு வரும்போது தங்கள் வீடு ஆடம்பரமாகத் தெரிய வேண்டும் என்பதற்காக ஏர்கண்டிஷன், ஃபேன், சோபா, கார், வைர நெக்லஸ் என்று பல பொருட்களை கடனுக்கும், வாடகைக்கும், மாதத்தவணையிலும் வாங்கிக் குவிக்கிறார்கள் மருமகள்கள். பாமாவிடம் பெருமையாகக் காட்டிக்கொள்ள இந்தி, இங்கிலீஸ் படிக்கிறார்கள். ஏன் குழந்தைகளைக் கூட மறைக்கிறார்கள். பாமாவும் வந்து செல்கிறாள்.

மறுமாதத்தில் பொருட்கள் வாங்கியதற்கான தவணையிலும், கடனிலும் சம்பளப்பணத்தில் முக்கால்வாசி காலியாகிறது. பிழைப்பு திண்டாட்டமாகிறது. மாதம் முதல் தேதியன்று குழந்தைகளுக்கு கிடைக்கும் சாக்லேட் கூட கிடைக்கவில்லை. வேறு வழியில்லாமல் மருமகள்கள் மூவரும் வீட்டிலிருந்த பாத்திரங்கள் ஒவ்வொன்றாக அடகுவைக்கிறார்கள். விற்கிறார்கள்.

இதற்கிடையில் மகேஸ்வரன் பாமாவுக்கு இந்தி கற்றுத்தரவும், ராமன் சினிமாவில் வாய்ப்புத் தேடியும், கிருஷ்ணன் தனது கம்பெனி விளம்பரப்படத்தில் நடிக்க வேண்டும் என்றும் வெவ்வேறு கோரிக்கைகளுடன் பாமா வீட்டிற்கு சென்று வருகின்றனர்.

மருமகள்கள் மூவருக்கும் பாடம் கற்பிக்க எண்ணும் மாமனார் ஒரு மொட்டைக்கடுதாசியில், “உங்கள் கணவன்மார்களில் ஒருவன் பாமா வலையில் விழுந்து கிடக்கிறான்” என்று எழுதி மூவருக்கும் தனித்தனியே அனுப்பி வைக்கிறார்.

மருமகள்கள் மூவரும் அதிர்ச்சி அடைகின்றனர். கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது யார் என்று கண்டுபிடிக்க முயற்சி செய்கின்றனர். படிப்படியாக பாமா மோகத்தில் இருந்து விடுபடுகின்றனர். வீடு மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புகிறது.

இந்தக் கதையை மிகச்சிறப்பான திரைக்கதையுடன் படமாக்கி இருக்கிறார் பாலசந்தர். இந்தப் படத்தை இன்றைக்கு இருக்கும் சினிமாக்காரர்கள் கூட ரசிக்கமாட்டார்கள். ஏனெனில் படம் அவ்வளவு எளிமையான விசயத்தைப் பற்றி பேசுகிறது. ஆனால் இந்தப் படம் இன்றைக்கும் தேவையான பாடம். “தேவையற்றதை வாங்கினால் தேவையானதை விற்க வேண்டி வரும்” என்ற பழமொழி சொல்லும் பாடம்தான் பாமா விஜயம்.

இன்றைய நடுத்தர வர்க்கத்தினருக்கான படம் என்றும் கூறலாம். இன்று ஒன்றுமே இல்லாமல் ரோட்டோரம் கிடப்பவனுக்கும், தேவைக்கதிகமாக பணம் வைத்திருப்பவனுக்கும் வராத பல பிரச்சனைகள் மாதச்சம்பளத்தை நம்பி மட்டுமே வாழும் நடுத்தர வர்க்கத்திற்கு உருவாகிறது. காரணம் போலி கௌரவம்.

வாங்குகிற சம்பளம் வெறும் பத்தாயிரமாக இருக்கும். ஆனால் அவன் பனிரெண்டாயிரத்துக்கு ஸ்மார்ட்போன் வாங்குவான் மாதத்தவணையில்.  இன்றைக்கு செல்போன் அவசியம் தான் ஆனால் ஸ்மார்ட்போன் தான் வேண்டும் என்பது ஆடம்பரம்.

வேலைக்குப் போய் சில ஆண்டுகளிலேயே சென்னையில் வீடு வாங்க கனவு கண்டு வங்கியில் கடன் வாங்குவான். இருபது லட்சம் கடன் வாங்கி நாற்பது லட்சமாக திருப்பி கட்டுவான். வட்டி மட்டும் இருபது லட்சம்.

எல்லோரும் வாங்கிவிட்டார்கள் என்பதற்காக தானும் ஆபிஸில் லோன் போட்டு கார் வாங்குவான். பெருமையடித்துக் கொள்வான். கடிசியில் வங்கி லோன், ஆபீஸ் லோன், போன மாதக்கடன் போக சம்பளத்தில் பாதிக்கும் சற்று குறைவாக கையில் பெறுவான். பிறகென்ன, இருபதாம் தேதிக்குப் பிறகு அரைச்சாப்பாடுதான். இல்லையென்றால் பட்ஜெட் சமையல்தான். இதை புத்திசாலித்தனம் என்று வேறு கூறிக்கொள்வான்.

அதாவது இருபது ஆண்டுகள் கழித்து கிடைக்கப்போகும் வீட்டுப் பத்திரத்திற்காக இன்றைய சாப்பாட்டை அடகு வைப்பதற்குப் பெயர் புத்திசாலித்தனம்.

இல்லாத கௌரவத்தை காப்பாற்றுவதற்காக இருக்கின்ற வாய்க்குப் பூட்டுப் போடும் நிலை.

இதிலே என்ன பெரிய சமூகக் கேடா விளைந்து விட்டது என்று கேட்கலாம்.

ஆம். சமூகக்கேடுதான் விளைந்து விட்டது.

முதலில் போலித்தனம் ஒரு தனிமனித தன்மானக் குறைவு. ஒவ்வொருவனும் தன்னைப் பற்றி சிந்திக்காமல் அடுத்தவன் என்ன செய்கிறான் என்பதைப் பற்றியே சிந்திக்கிறான். ஏனெனில் அதைப்போல தானும் ஆகவேண்டும் என நினைக்கிறான். 

தன்னை மற்றவனுடன் ஒப்பிட்டு பார்த்தே தன்னுடைய அடுத்த இலக்கைத் தீர்மானிக்கிறான். இவனுக்கென்று சுயபுத்தி இல்லாமல் போகிறது. மனிதர்கள் தன்னம்பிக்கை குறைந்தவர்களாகவும், மந்தபுத்தி உள்ளவர்களாகவும் மாறி வருகின்றனர்.

மாநகர சாலைகளில் பாருங்கள். இருசக்கர வாகனங்களை விட கார் போன்ற வாகனங்களால் அதிக நெரிசல் உருவாகிறது. மாதத்தவணையில் கார் வாங்கியவன் டிரைவராக வண்டி ஓட்ட மற்ற மூன்று சீட்களும் காலியாக இருக்கும். ஒரே ஒரு மனிதன் சாலையில் கிட்டத்தட்ட எண்பது சதுர அடி நிலத்தை ஆக்கிரமித்தபடி செல்வான் தன்னுடைய கார் மூலமாக.

இது புரியவில்லை என்றால் எல்லா மனிதர்களும் தன்னுடைய காருக்குப் பதிலாக ஒரு பஸ்சை மாதத்தவணையில் வாங்கி அதில் தான் மட்டும் ஏறிச்சென்றால் என்னவாகும் என்று யோசியுங்கள்.

இம்மாதிரி போலிக் கௌரவம் சாதி என்ற பெயரில் மனிதனின் இதயத்தில் ஆழமாக நுழைந்து விடும்போது அதுவே காதலர்களைக் கொல்லும் இரக்கமற்ற சக்தியாகிறது.

இம்மாதிரி விஷத்தை முளையில் அல்ல, விதையாக இருக்கும்போதே மனிதன் தன் மனதில் முளைக்க விடாமல் அழித்து விட வேண்டும். ஏனெனில் மனிதன் தான் அதற்கு தண்ணீர் ஊற்றி வளர்க்கிறான்.

2 கருத்துகள்:

  1. மிகவும் அருமையான குடும்பப்படம். பாலசந்தர் படங்களில் நான் அதிகம் ரசித்தவற்றில் இதுவும் ஒன்று.

    பதிலளிநீக்கு
  2. பாமா விஜயம் என்ற சாதாரண கதையமைப்பு கொண்ட திரைப்படத்தை தொட்டுக்காட்டி இன்றைய சமூக அவலமான வறட்டு கவுரவம், வீண் ஆடம்பரம், அடுத்தவரை பார்த்து தேவை இல்லாதவற்றில் பணம் விரயம் செய்வது, அத்தியாவசியத்திற்கும் ஆடம்பரத்திற்குமான வித்தியாசம் தெரியாமல் விளம்பரங்களுக்கும் போலி அந்தஸ்த்துக்கும் பலியாகிப்போகும் விட்டில் பூச்சிகளான மனிதர்களுக்கு நீங்கள் சுட்டிக்காட்டும் இந்த பாடம் அனைவரும் ஏற்கக்கூடியதே.

    உங்களின் சமூக சிந்தனை பார்வைக்கு பாராட்டுக்கள்.

    கோ

    பதிலளிநீக்கு