திங்கள், 4 செப்டம்பர், 2017

குரங்குபொம்மை

பாரதிராஜா, விதார்த் நடிப்பில் வெளிவந்துள்ள ஒரு திரைப்படம் குரங்கு பொம்மை. தஞ்சாவூரில் மரக்கடை வைத்து நடத்தும் ஏகாம்பரம் ஒரு சில சிலைக்கடத்தல் வேலைகளையும் செய்கிறார். அவரிடம் வேலை பார்ப்பவர், நண்பர், விசுவாசமான ஊழியர் சுந்தரம். சுந்தரம் ஏகாம்பரத்திடம் வேலை பார்ப்பது அவருடைய மனைவிக்கும், மகன் கதிருக்கும் பிடிக்கவில்லை.

ஏகாம்பரத்திடம் வேலை பார்ப்பதால் மட்டுமே கதிருக்கு நிச்சயமாக இருந்த பெண் வீட்டில் பெண்ணின் தந்தை ஒத்துக்கொள்ளவில்லை. இதற்குப் பிறகும் சுந்தரம் ஏகாம்பரத்தை விட்டு வர விரும்பவில்லை.

கதிர் சென்னையில் டிரைவராக வேலை செய்கிறார். ஒரு காலையில் கதிர் பஸ்ஸுக்காக காத்திருக்கும்போது தனது மகளின் திருமணசெலவுக்காக ஒரு தந்தை கொண்டு செல்லும் பணத்தை வழிப்பறித் திருடன் திருடுகிறான். அவனிடமிருந்து அந்தப் பையை மீட்டு வருகிறான் கதிர். ஆனால் அந்தப் பேருந்து நிலையத்தில் பையைத் தவறவிட்ட நபர் இல்லை.

இந்நிலையில் தனது மனைவியிடம் கூட சொல்லாமல் சுந்தரம், ஏகாம்பரம் கொடுத்த ஒரு பையை எடுத்துக் கொண்டு சென்னைக்கு தனியாகக் கிளம்பி வருகிறார். அந்தப் பையில் இருக்கும் ஐம்பொன் சிலையை சென்னையில் இருக்கும் சேகரிடம் சேர்த்துவிட்டு, அவன் தரும் ஐந்து கோடியை வாங்கிவர வேண்டும்.

சேகரிடம் சிலையைக் கொடுத்தாரா? பணம் கிடைத்ததா? வீடு கொண்டு வந்து சேர்த்தாரா? கதிர் அந்தப் பையை சரியான நபரிடம் கொண்டு சேர்த்தானா? என்பதை மிகவும் சுவாரஸ்யமாக, வேகமான திரைக்கதையில் சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

கர்ணன் துரியோதனிடம் வேலை செய்வதைப் போல, தான் வேலை செய்யும் ஏகாம்பரம் குற்றப் பிண்ணனி கொண்டவராக இருந்தாலும் அதன்பின் இருக்கும் யதார்த்தத்தை விளக்க சுந்தரம் கூறும் கதை அருமை.

கதையில் இடையிடையே வரும் சின்ன சின்ன பாத்திரங்களான வழிப்பறித் திருடன், மணப்பெண்ணின் தந்தை கூட கதாபாத்திரத்தில் நன்றாக ஒன்றி இருக்கிறார்கள். இவன்தான் வில்லனாக இருக்கும் என்று நம்மால் கணிக்க முடிந்தாலும், இந்தமாதிரி வில்லனுக்கு இந்தமாதிரி தண்டனை கொடுக்க வேண்டும் என்று நம்மால் கணிக்க இயலவில்லை. அந்த இடத்தில் இயக்குனர் வென்றுவிடுகிறார்.

குரங்குபொம்மை படம் போட்ட பையில் இருப்பது பணமா? இல்லை ஐம்பொன் சிலையா? என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், இறுதிக் காட்சியில் அதில் இருப்பது வேறு ஒன்று என்று காட்டி திகைக்க வைக்கிறார் இயக்குனர்.

கதை, திரைக்கதை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார். இத்தனை வேகமாக செல்லும் திரைக்கதையில் நாயகன், நாயகி சம்பந்தப் பட்ட பாடல்களை நீக்கி இருக்கலாம். அது கதையுடன் ஒட்டவில்லை. மற்றபடி படத்தில் குறை என்று சொல்ல ஏதுமில்லை.

கதிராக விதார்த்த், ஏகாம்பரமாக தேனப்பன், சுந்தரமாக பாரதிராஜா, விஜியாக டெல்னா டேவிஸ் நடித்திருக்கும் குரங்குபொம்மை சென்று பார்க்க வேண்டிய ஒரு சிறந்த தமிழ் சினிமாதான்..

1 கருத்து: