செவ்வாய், 26 செப்டம்பர், 2017

கருத்தம்மா

இந்த நடிகர் நாயகனாகவும், இந்த நடிகை நாயகியாகவும் நடித்து வந்த படம் என்று பாரதிராஜாவின் கருத்தம்மாவைப் பற்றி சொல்ல முடியாது. ஏனெனில் கருத்தம்மாவை மொத்தமாக கதையே தூக்கி நிறுத்துகிறது.

கிராமத்திலுள்ள விவசாயி மொக்கையனுக்கு இரண்டு பெண் பிள்ளைகள். மூத்தவள் பெரியகண்ணி, இரண்டாமவள் கருத்தம்மா. மூன்றாவது மற்றும் நான்காவதும் பெண் குழந்தைகளாகவே பிறந்ததால் அவைகளை கள்ளிப்பால் ஊற்றி கொன்றுவிடச் சொல்லி மருத்துவச்சியிடம் கொடுத்து விட்டார் மொக்கையன்.

ஐந்தாவது கண்டிப்பாக ஆண்குழந்தைதான் பிறக்கும் என்று சாமி குறி சொல்லிவிட்டதால் ஐந்தாவது குழந்தைப் பிறப்புக்காக காத்திருக்கிறார். ஆனால் ஐந்தாவதும் பெண்குழந்தை பிறக்க அதையும் கள்ளிப்பால் ஊற்றிக் கொல்லச் சொல்லி மருத்துவச்சியிடம் கொடுத்து விடுகிறார். அதற்கு கூலியாக மாடு போட்ட ஆண் கன்றை விற்றுப் பணம் தருகிறார்.

ஆராரோ நீ கேட்க ஆயுசு உனக்கு இல்லையடி
புது நெல்லை நான் அவிக்க வீதி வந்து சேர்ந்ததடி
தாய்ப்பால் நீ குடிக்க தலையெழுத்து இலையடி
கள்ளிப்பால் நீ குடிச்சு கண்ணுறங்கு நல்லபடி
அடுத்து ஒரு ஜென்மம் வந்து ஆணாக நீ பொறந்தா
பூமியில இடமிருக்கும் போய்வாடி அன்னக்கிளி...
போய்வாடி அன்னக்கிளி...போய்வாடி அன்னக்கிளி...

என்று பாடிக்கொண்டே மருத்துவச்சி அந்தப்பிள்ளையை கொல்லப்போகும் தருணத்தில் ஊருக்குப் புதிதாக வந்த ஆசிரியர் சூசை அந்த சிசுவை யாருக்கும் தெரியாமல் மருத்துவச்சியிடம் இருந்து வாங்கிச் சென்று விடுகிறார்.
மொக்கையனின் இரண்டு பெண்களும் வளர்ந்து பெரியவளாகின்றனர். பெரியகண்ணியை தனது தங்கச்சி மகன் தவசிக்குத் திருமணம் செய்து வைக்கிறார் மொக்கையன். தவசி ஊர்ப்பெரியவருக்கு கையாளாக இருக்கிறான்.

ஊருக்கு வரும் கால்நடை மருத்துவர் ஸ்டீபன், கருத்தம்மாவுக்கு இடையில் பழக்கம் ஏற்படுகிறது. அது நாளடைவில் காதலாக மாறுகிறது. கணவன் வீட்டுக்கு வாழப்போன பெரியகண்ணிக்கு இரண்டு பெண் பிள்ளைகள். ஏற்கனவே நகை போடவில்லை என்று பெரியகண்ணியை கொடுமைப்படுத்திக் கொண்டிருக்கும் அவளது கணவனும், மாமியாரும் ஆண் குழந்தை பிறக்காததால் மேலும் கொடுமைப் படுத்துகின்றனர். ஆதரவாக இருப்பது மாமனார் மட்டும்தான்.
மூன்றாவது குழந்தையாவது ஆண் பிறக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பில் இருக்கிறாள் பெரியகண்ணி. ஆனால் பிறப்பது பெண்ணாகவே பிறக்கிறது. அதைக் கொன்றுவிடச் சொல்கிறாள் மாமியார். இதனால் பெரியகண்ணிக்கும், மாமியாருக்கும் மோதல் முற்றுகிறது. முடிவில் சிசுவை மாமியார் கொன்று விடுகிறாள். தவசி, பெரியகண்ணியைக் கொன்று விட்டு அவள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாள் என்று ஊரை நம்பவைக்கிறான்.

உண்மையை அறிந்துகொள்ளும் கருத்தம்மா போலீஸில் புகார் கொடுக்கச் செல்கிறாள். ஊர்ப்பெரியவரின் கையாளான போலீஸ் இன்ஸ்பெக்டர் புகாரை ஏற்றுக்கொள்ளாமல் தட்டிக்கழிக்கிறான். பிறகு கருத்தம்மா கால்நடை மருத்துவர் ஸ்டீபனுடன் சேர்ந்து புகார் கொடுக்கவர வேறு வழியின்றி புகாரை ஏற்கிறான் இன்ஸ்பெக்டர். தவசியும், மாமியாரும் போலீஸ் காவலில் வைக்கப்படுகின்றனர்.
பெரியகண்ணியின் இரண்டு பெண் குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு மொக்கையன் வீட்டுக்கு வந்து விடுகிறார் தவசியின் தந்தை. இதற்கிடையில் மொக்கையன் வலிப்பு நோயில் விழுகிறார். ஊருக்கு புதிதாக வந்த டாக்டர் ரோஸி (ஸ்டீபனின் முறைப்பெண்) அவருக்கு வைத்தியம் செய்கிறாள். கருத்தம்மா மற்ற சேவைகளை செய்கிறாள்.

ஊர்ப்பெரியவர் மூலமாக பெயிலில் வெளியே வரும் தவசி கருத்தம்மா, ஸ்டீபனைக் கொல்ல நினைக்கிறான். ஆனால் ஊர்ப்பெரியவர் அறிவுரையின் பேரில், தவசி மொக்கையனிடம் கருத்தம்மாவைப் பெண் கேட்கிறான். மொக்கையனின் நிலம் ஊர்ப்பெரியவரிடம் அடமானமாக இருப்பதால் அதை வைத்தும் மிரட்டுகிறார் பெரியவர். வேறு வழியில்லாமல் ஒத்துக்கொள்கிறான் மொக்கையன்.

கருத்தம்மாவின் கல்யாண நாள் வருகிறது. மகளுக்குப் பிடிக்காத சம்பந்தத்தை பேசிவிட்டோம் என்று அறிந்துகொள்ளும் மொக்கையன் விஷமருந்தி விடுகிறார். கருத்தம்மா மீதான காதலை அறிந்துகொண்ட ரோஸிக்கும், ஸ்டீபனுக்கும் இடையே மோதல் வெடிக்கிறது. மனம் உடைந்த ரோஸி தனியாக ஊருக்குக் கிளம்புகிறாள். தன்து தந்தை சூசை சொல்லியும் கேட்கவில்லை.

மொக்கையனின் நிலையை அறிந்த மருத்துவச்சி ரோஸியைத் தேடி வருகிறாள். வைத்தியம் செய்ய முதலில் மறுக்கும் ரோஸி, மொக்கையன் வேறு யாருமல்ல தன்னைப் பெற்ற தந்தை என்பதை மருத்துவச்சி வாயிலாக அறிந்துகொண்டபின் வைத்தியம் செய்கிறாள்.

இருபத்தைந்து வருடங்களுக்கு முன் மொக்கையனால் கொல்லப்பட்ட அவளது ஐந்தாவது பெண் இன்று ஆசிரியர் தயவால் டாக்டராகி அவரது உயிரைக் காப்பாற்றுகிறது. கருத்தம்மாவின் பரிதாப நிலையை மொக்கையன் சொல்ல அனைவரும் கருத்தம்மாவைத் தேடி வருகின்றனர்.
  
இதற்கிடையில் கருத்தம்மாவிற்கு கல்யாண ஏற்பாடுகள் நடக்கின்றன. “கல்யாணத்திற்கு முன் ஒரு நாள் இரவு அவள் என்னுடன் தங்கவேண்டும். அதற்காக நான் உனக்கு என்ன வேண்டுமானாலும் தருகிறேன்” என்று தவசியிடம் பேரம் பேசுகிறார் ஊர்ப்பெரியவர். தங்களது அனைத்து திட்டங்களுக்கும் தடையாக விளங்கும் தவசியின் தந்தையை இருவரும் சேர்ந்து தீ வைத்துக் கொளுத்தி விடுகின்றனர்.

திட்டத்தை அறிந்து கொள்ளும் கருத்தம்மா தன்னை நெருங்கும் ஊர்ப்பெரியவரை குத்திக் கொலை செய்கிறாள். எல்லாவற்றுக்கும் காரணமாக இருந்த தவசியை உலக்கையால் அடித்துக் கொன்றுவிட்டு பெரியகண்ணியின் இரண்டு பெண் குழந்தைகளையும் தூக்கிக் கொண்டு தன் ஊரை நோக்கி வருகிறாள் கருத்தம்மா.

எதிரே வரும் ரோஸி தனது தங்கை என்றறிந்து கொள்ளும் கருத்தம்மா தனது காதலனையும், அக்கா குழந்தைகள் இரண்டையும் அவளிடம் ஒப்படைத்துவிட்டு ஜெயிலுக்குப் போகிறாள்.

அக்காவா நீ பொறந்த அடையாளம் தெரியலடி
அடையாளம் தெரியுறப்போ என் அடிவயிறு எரியுதடி
ஆண் செய்யும் கடமை எல்லாம் நீ செய்த நியாயப்படி
சட்டத்துக்கு குத்தமடி தர்மத்துக்கு நியாயமடி
சட்டத்துக்கும் தர்மத்துக்கும் சத்தியமா கண்ணிருந்தா
பொட்டக்காடு பூப்பூக்கும் போய்வாடி அன்னக்களி
போய்வாடி அன்னக்கிளி போய்வாடி அன்னக்கிளி

என்று பாடல் பின்புலத்தில் ஒலிக்க படம் முடிகிறது. படத்தின் நிகழ்வுகளைப் பார்த்துக் கொண்டே பாடலைக் கேட்கும் பார்வையாளனால் கண்களிலிருந்து நீர் வருவதைக் கட்டுப்படுத்த முடிவதில்லை.

தமிழ்ச் சமூகத்திற்கு வேண்டிய அறிவுரைகளை தன் படத்தின் வழியாக பார்ப்பவர்கள் ஏற்றுக்கொள்ளும் படியாகக் கூறி தமிழ்சமூகத்தை பண்படுத்திய விவசாயி பாரதிராஜா.

பெண் குழந்தைகளைத் தாழ்வாக எண்ண வேண்டாம். பெண் சிசுக்கொலை வேண்டாம் என்பதை அழுத்தமாக இப்படத்தில் கூறியிருக்கிறார் பாரதிராஜா. மிகவும் பாராட்டப்படவேண்டிய திரைப்படம். அவரால் நாம் கொஞ்சம் மாறினோம். ஆனால் முழுதாகத் திருந்தவில்லை. அவரது கருத்தம்மாவும், புதுமைப்பெண்ணும் பெண்கள் அனைவரும் பார்க்கவேண்டிய படைப்புக்கள்.

இக்கதையின் ரோஸி சமூகத்தின் வாளுக்குத் தப்பி டாக்டரான பெண் என்றாலும் அவளுக்கு ஆசிரியரின் தயவு ஏற்கனவே கிடைத்திருக்கிறது. ஆனால் கருத்தம்மா சுயம்புவான புதுமைப்பெண். யாருடைய ஆதரவுமின்றி தன் தடைகளை உடைத்தெறிந்தவள்.

படித்த பெண்ணான ரோஸி போன்றவர்களின் தாயுள்ளத்தால்தான் மொக்கையன் போன்ற முட்டாள் தகப்பன்கள் காப்பாற்றப்படுகிறார்கள். அதேநேரம் கருத்தம்மா போன்ற சாதாரணப்பெண்களின் போர்க்குணத்தால் தவசி, ஊர்ப்பெரியவர் போன்றவர்கள் கண்டிக்கப்படுகிறார்கள் அல்லது தண்டிக்கப்படுகிறார்கள் என்பதை ஆண்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக