திங்கள், 11 செப்டம்பர், 2017

அந்திமந்தாரை

விஜயகுமார், ஜெயசுதா நடிப்பில் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த படம் அந்திமந்தாரை. பாரதிராஜா பொதுவாக எந்த விசயத்தை சினிமாவில் பேசினாலும் காதலை அதில் சேர்க்காமல் இருக்கமாட்டார். இந்தப்படம் ஒரு உண்மையான தேசப்பற்று மிக்க மனிதனின் காதல் வாழ்க்கையைப் நமக்குப் படம்பிடித்துக் காட்டுகிறது.

கதர்க்கொடி கந்தசாமி தனது முதிர்ந்த வயதில் சென்னையில் உள்ள தனது தம்பி மகன் வீட்டில் வசித்து வருகிறார். மருமகளோ இவரை ஒரு பாரமாகக் கருதுகிறாள். அவள் பணத்தை மட்டுமே நேசிப்பவள். கந்தசாமியும் நிறைய பணத்தை சேர்த்து வைத்திருந்தால் இவரை அவள் நன்றாகப் பார்த்துக் கொள்வாள்.

பக்கத்து வீட்டில் இருக்கும் பெண்மணிகள் எல்லாம் தனது கணவரிடம் கொடுக்கச் சொல்லி வீட்டுச் சாவியை கந்தசாமியிடம் ஒப்படைத்துச் செல்லும் வேளையில், மருமகளோ பாதுகாப்பு இல்லை என்று சொல்லி வீட்டைப் பூட்டிச் செல்கிறாள்.

கந்தசாமியோ சிறுவயது முதலே தாய்நாட்டுக்காக மட்டுமே வாழ்வைத் தியாகம் செய்தவர். பணம், காசு பார்த்ததில்லை. கௌரவத்தை மட்டுமே பார்க்கிறவர். இதை மக்களறிய சொல்கிறவர் இவருடன் சுதந்திரத்திற்காக போராடி, அப்போது ஜனாதிபதியாக இருக்கும் இவருடைய நண்பர்.

கந்தசாமியின் மருமகள், “தியாகிகள் உதவித்தொகை பெற உங்கள் நண்பரிடம் அனுமதிக் கடிதம் பெற்று வாருங்கள்” என்று கந்தசாமியை அனுப்புகிறாள். கந்தசாமியோ நண்பரை சந்தித்தாலும் அதைப் பற்றி கேட்காமல் இருந்து விடுகிறார்.

ஜனாதிபதியைப் பார்த்துவிட்டு திரும்பி வரும் வேளையில், தனது பழைய காதலி தங்கம்மாளை சந்திக்கிறார். அவளையும் தன்னோடு அழைத்து வர மருமகள் வீட்டில் அவருக்கு இடமில்லாமல் போகிறது.
இந்தச் சமூகத்தில் கூட்டுக் குடும்ப கட்டமைப்பு குலைக்கப்பட்ட பின்னர் இருக்கும் தனிக்குடித்தனத்தில் தான் பார்த்துப்பார்த்து கட்டி வைத்தாலும், அதிலே தனது மகனும் இருந்தாலும் வீடு மருமகளுடைய வீடாகிவிடுகிறது. கந்தசாமியின் மகன் வீடும் இப்படித்தான் மருமகள் வீடாகி விட்டது.

பின்னர் கந்தசாமியின் மீது பாசமாக இருந்த பழைய வாட்ச்மேன் அந்தோணி வீட்டுக்கு இருவரும் செல்கிறார்கள். ஆனால் நியாயத்தை தூக்கிப் பிடிக்கும் அந்தோணியோ காவல் துறையினரால் விசாரணை என்ற பெயரில் அடித்துக் கொல்லப்பட்டனர் என்று தெரிந்து திரும்புகின்றனர்.

திரும்பும் வழியில் இருக்கும் ஒரு கல்லறைத்தோட்டத்திலேயே கூடாரம் அமைத்து தங்க ஆரம்பித்து விடுகின்றனர். வருமானத்திற்காக கந்தசாமி சுண்டல் விற்கிறார். மிருகக் காட்சிசாலையில் கரடி வேஷம் போடுகிறார். தங்கம்மாளோ துணி வெளுக்கிறாள்.

இதற்கிடையில் தங்கம்மாள் வீட்டு வேலைக்கு வருவதாக ஒப்புக்கொண்டிருந்த மைலாப்பூர் வழக்கறிஞருடைய ஆட்கள் வந்து தங்கம்மாளைத் தூக்கிச் செல்கின்றனர். அவளைத் தேடிக் கண்டுபிடிக்கிறார் கந்தசாமி. அவர் வேலையை விட்டுச் செல்வதென்றால் அவள் மூவாயிரம் ரூபாய்க்கு வேலை செய்யவேண்டும் அல்லது கந்தசாமி மூவாயிரம் ரூபாய் தரவேண்டும் என்று கூறுகிறார் வழக்கறிஞர்.

மூவாயிரம் ரூபாய் தருவதாகச் சொல்லி காவல்துறையினர் ஒரு வழக்கில் பொய் சாட்சி சொல்ல சொல்கின்றனர். முதலில் பணத்தைப் பெற்றுக்கொள்ளும் கந்தசாமி நீதிமன்றத்தில் மனம் மாறுகிறார். பொய் சாட்சி சொல்ல மறுக்கிறார்.

வாங்கிய பணத்தையும் நீதிமன்றத்தில் திருப்பித் தருகிறார். கல்லறைத் தோட்டத்திற்கு திரும்பிச் செல்லும் வழியில் கந்தசாமியை காவல்துறையினர் அடித்துக் கொன்றுவிடுகின்றனர். சுதந்திரதின அணிவகுப்பன்று அனாதையாக ரோட்டில் அடிபட்டுக் கிடக்கும் கந்தசாமியின் உடலை குப்பைக் கிடங்கில் தூக்கிப்போடுகின்றனர்.

கந்தசாமியைத் தேடிவரும் தங்கம்மாள், உயிரற்ற அவரது உடல் குப்பையில் கிடப்பதைக் கண்டு அழுகிறாள். பிறகு தங்கம்மாள், காவல் நிலையத்தில் உள்ள தேசியக்கொடியை எடுத்துவந்து கந்தசாமியின் உடலில் போர்த்துகிறாள். உண்மையான தலைவர்களை அடையாளம் காணத்தெரியாத நம் அனைவர் மீதும் காறித்துப்புகிறாள். படம் நிறைவடைகிறது.

அந்திமந்தாரை ஒருபுறம் தேசப்பற்றுள்ள ஒரு மனிதனின் வாழ்க்கையைப் பற்றிப் பேசுகிறது. மறுபுறம் இளவயதில் சேரமுடியாமல், வாழ்வின் அந்திமக்காலத்தில் சேரும் கந்தசாமி – தங்கம்மாளின் காதலைப் பற்றிப் பேசுகிறது.

அடுக்குமாடிக் குடியிருப்பில் யாரோ கீழே கொட்டிய குப்பையை தான் எடுத்து குப்பைத் தொட்டியில் போடுவது, எல்லா சுதந்திரப் போராட்டக் களங்களிலிருந்தும் மண்ணை எடுத்து வந்து சேகரித்து வைத்திருப்பது, காந்திய வழியில் உண்மையை மட்டும் பேசுவது, விடுதலைக்காக வீரமுழக்கம் இடுவது, வெள்ளைக்காரன் கைகளில் சிக்காமல் ஏமாற்றுவது, தாழ்த்தப்பட்டவர்ளுடன் ஆலயப்பிரவேசம் செய்வது என்று எல்லாவகையிலும் தேசப்பற்று, சமூகப்பற்று மிக்க போராளியாக இருக்கிறார் கந்தசாமி.

மறுபுறம் போட்டிருக்கும் கரடி வேஷத்தை மறந்து பேத்தியுடன் விளையாட எத்தனிப்பது, காதலிக்காக தள்ளாடாத வயதிலும் வேலைக்குச் செல்வது, அவளுடனே காலத்தைக் கழிக்க எண்ணுவது என்று சிறந்த மனிதனாகவும் இருக்கிறார் கதர்க்கொடி கந்தசாமி.

ஒரு தேசத்தின் விடுதலைப்போரில் இப்படி எத்தனையோ மனிதர்கள் ஆணிவேராகவும், சல்லிவேராகவும் இருந்திருப்பார்கள். ஆனால் பின்னால் வரும் மக்கள் அறிவிழந்து, தேசபக்தி மறந்து நாட்டை சீரழித்து விடுகிறார்கள்.

இன்றைய நமது மக்கள் கொடிபிடித்து, கோட்டையில் ஏற்றி வைத்துக் கொண்டாடுபவர்கள் தலைவர்கள் அல்ல, அரசியல்வாதிகள். எல்லா சமூக அநீதிகளுக்கும் காரணம் மக்கள் முட்டாள்களாகவே இருப்பதுதான். மேலும் அப்படி இருப்பதை தவறல்ல என்றெண்ணிக்கொள்வது, அப்பாவித்தனம் என்று பட்டமாகச் சூடிக்கொள்வதும் தான்.

ஆகையால் தான் காமராஜர் போன்ற ஈடு இணையற்ற தலைவர்கள் கூட தேர்தலில் தோற்கடிக்கப்படுகிறார்கள். நமது நாட்டைக் காப்பாற்ற மகாவிஷ்ணு அவதாரம் எடுத்தால் கூட முடியாது. ஏனெனில் அரசை தீர்மானிக்கும் அதிகாரம் மக்கள் கையில் உள்ளது. இந்த மக்கள்தான் போலிகளையும், புறம்போக்குகளையும் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கின்றனர். தேர்ந்தெடுத்தபின் அவர்களைக் குறை சொல்கின்றனர். பிறகு மீண்டும் அவர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

ஓட்டுப்போடுவது குடிமகனின் கடமை என்று நினைக்கிறான். ஆனால் தான் ஓட்டுப்போட்டுத் தேர்ந்தெடுத்த அரசியல்வாதி பிறகு என்ன செய்கிறான் என்பதை கவனிப்பதில்லை.

மக்கள் அனைவரும் வேரினைத் தேடும் விழுதுகளாக இருந்தால் ஒரு ஆலமரம் நீண்டகாலம் நிலைத்து நிற்கும். ஆனால் இந்த தேசத்தின் மனிதர்கள் வேர்களை மறந்த விழுதுகள். காற்றில் பறக்க நினைக்கும் சருகுகள். அவர்கள் மரத்தைத் தாங்கும் விழுதுகளாக மாறும்போடு மட்டுமே தேசம் என்ற ஆலமரம் பரவி, பலம்பெற்று நீண்டகாலம் வாழும். இந்த அந்திமந்தாரை அனைவரும் அறிந்து கொள்ளவேண்டிய ஒரு படம்.

1 கருத்து:

  1. உண்மையான பாசம், தேசப்பற்று, இக்கால வறட்டுப் பாசம் போன்ற அனைத்தையும் வெளிப்படுத்தும் அருமையான திரைப்படம். நான் அதிகம் ரசித்தவை பாலசந்தர் மற்றும் பாரதிராஜாவின் படங்களே. அவ்வகையில் மனதில் நின்ற திரைப்படங்களில் இதுவும் ஒன்று. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு