திங்கள், 24 ஜூலை, 2017

என் உயிர்த் தோழன்

அறிமுகங்கள் இல்லாத புதுமுகங்கள் நடிப்பில், பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த ஒரு படம் என் உயிர்த் தோழன். அரசியல்வாதிகளின் அரசியலையும், சாதாரண மக்களின் வாழ்க்கையையும் பற்றிப் பேசிய படம்.

தொழிலாளர் கட்சிக்காக உழைக்கும் தொண்டன் ரிக்ஷாகாரன் தருமன் தனது அக்காவுடன் குயிலுக்குப்பத்தில் வசிக்கிறான். அவனது பேச்சுக்கு குயிலுக்குப்பமே அடிபணிகிறது.

மற்றொருபுறம் கிராமத்துப் பெண் சிட்டு தனது கிராமத்திற்கு வந்த நாடக நடிகர் பொன்வண்ணன் மீது காதல் கொண்டு அவனோடு ஊரைவிட்டு ஓடி வருகிறாள். அவளுடைய நகைகளை வஞ்சகமாக பறித்த பொன்வண்ணன் அவளை ரயிலிலேயே விட்டுவிட்டு இரவில் தப்பி ஓடிவிடுகிறான்.

குயிலுக்குப்பத்திற்கு வரும் சிட்டு தருமனிடம் அடைக்கலம் ஆகிறாள். சிட்டுவை தன்வசப்படுத்திக் கொள்ள முயல்கிறான் ஆளுங்கட்சி பிரமுகர் டில்லி. அவனிடமிருந்து சிட்டுவை மீட்டு ஒரு கிறித்தவக் காப்பகத்தில் சேர்க்கிறான் தருமன். சிட்டு தருமன் மீது காதல் கொள்கிறாள்.
தருமனுக்காக டில்லி வைத்த சூழ்ச்சியில் தருமனின் அக்கா இறந்துவிடவே, தனிமரமான தருமனுக்கு ஆதரவுக் கரம் நீட்டுகிறாள் சிட்டு. அவளைத் திருமணமும் செய்து கொள்கிறாள்.

இதற்கிடையில் திருடனான பொன்வண்ணன், டில்லியுடன் சேர்ந்து கொள்கிறான். டில்லி தொழிலாளர் கட்சியில் சேர்கிறான். அடுத்து வரும் தேர்தலில் டில்லி பொன்வண்ணனை குயிலுக்குப்பம் தொகுதி வேட்பாளராக்குகிறான். இரண்டாவது அத்தியாயத்தில் பொன்வண்ணனை சந்திக்கும் சிட்டு தனது கணவன் தருமனிடம் உண்மையைக் கூற கட்சிப் பணிகளை விட்டு அறவே ஒதுங்குகிறான் தருமன்.

அவனை தனது பேச்சுத் திறமையால் தன் வழிக்கு கொண்டு வருகிறார் தொழிலாளர் கட்சித் தலைவர். மீண்டும் கட்சிக்காக மாடுபோல உழைக்கிறான் தருமன்.

தொழிலாளர் கட்சியின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்க, அனுதாப ஓட்டுக்களைப் பெற தலைவர், டில்லி, பொன்வண்ணன் மூவரும் சேர்ந்து சதி செய்து தொண்டனான தருமனைக் கொலை செய்கிறார்கள். அந்தப் பழியை ஆளுங்கட்சியின் மீது போடுகிறார்கள்.

அவர்கள் திட்டமிட்டபடி தொழிலாளர் கட்சி வெற்றி பெறுகிறது. பதவியேற்க போகுமுன்பு தருமனின் கல்லறையில் மாலை வைத்து, மரியாதை செலுத்துவதற்காக வருகிறார்கள் தலைவர்கள். உண்மையை அறிந்த குயிலுக்குப்பம் ஒன்று கூடி மூவரையும் கொலை செய்து விட்டு ஜெயிலுக்கு போகிறது. படம் முடிவடைகிறது.

"தீபங்களே தெரிந்து கொள்ளுங்கள்
திரிகள் மட்டுமே கருகிக் கொண்டிருக்கின்றன
தூண்டுகோல்கள் சுகமாகத் தூங்கிக் கொண்டிருக்கின்றன"

என்று சொன்ன கவிக்கோ அப்துல் ரகுமானைப் போல் அரசியலையும் அது சார்ந்த வன்முறையையும் கடுமையாகச் சாடுகிறது இந்தப் படம்.

தலைவன் என்று எவனையாவது கருதி, அவனுக்கு கொடி பிடித்து, போஸ்டர் ஒட்டி, உங்கள் சந்தோஷத்தையும் உங்கள் குடும்பத்தின் நிம்மதியையும் தொலைத்து விடாதீர்கள் என்று கூறுகிறது இந்த பாரதிராஜா படம்.

பொதுவுடைமைச் சித்தாந்தம் படிக்கும்போது கவர்ச்சியாக இருக்கிறது. ஆனால் அதை நடைமுறைப்படுத்தத்தான் முடியவில்லை. எல்லோருக்கும் சமமாகப் பங்கிட்டுத் தரவேண்டும் என்றால் ஐந்து மணிக்கு எழுந்திருப்பவனுக்கும், ஒன்பது மணிவரை தூங்குபவனுக்கும் ஒரே சம்பளம் கொடுப்பதைப் போலிருக்குமே.

சுதந்திரம் பெற்ற நாள்முதல் இன்றுவரை நமது அரசியல் தலைவர்கள் பெரும்பாலும் தானாக வெற்றி பெற்றதை விட எதிர்க்கட்சியின் மீதான மக்களின் அதிருப்தியினால் பெற்ற வெற்றிகளே அதிகம்.

அவர்களை ஆதரிப்பது, இல்லை இவர்களை ஆதரிப்பது என்ற இரண்டுமே அவர்களுக்கு லாபம்தான். அவர்களைக் கண்டுகொள்ளாமல் புறக்கணிப்பது ஒருவேளை இதற்கு தீர்வாகலாம்.

முடிந்தால் ஓட்டுப்போடுவதை விட்டுவிடுங்கள். அது ஜனநாயகக் கடமை. அதைக் கண்டிப்பாக ஆற்ற வேண்டும் என்று கூறி மக்களை ஏமாற்றி வைத்திருக்கின்றனர் அரசியல்வாதிகள்.

தொன்னூறு சதவீதம் மக்கள் ஓட்டுப்போடாமல் இருந்து ஆறு சதவீதம் மக்கள் ஒரு கட்சிக்கும், மீதம் பேர் இன்னொரு கட்சிக்கும் ஓட்டுப்போட்டால், ஆறு சதவீதம் பேர் வாக்களித்த கட்சி ஆட்சி அமைக்கும். எனில் எல்லோரும் தவறான வேட்பாளர்கள் என்று முடிவு செய்த தொன்னூறு சதவீதம் பேருக்கு மதிப்பென்ன? ஓட்டுப்போட வேண்டியதன் அவசியமென்ன?

எல்லா அரசியல் தத்துவங்களும் ஒருவித மாயை. அரசியல்வாதிகள் கேட்பவர் உணர்ச்சி வசப்படும்படியாக அடுக்குமொழியில் பேசுவார்கள். ஆனால் அவர்கள் உணர்ச்சி வசப்பட மாட்டார்கள். அந்த அடுக்குமொழிப் பேச்சிலே மயங்கி சீரழிந்தவர்கள் ஏராளம்.

வீடுகூட இல்லாமல் இருந்தும், ஒரு கழிப்பிடம் கூட இல்லாமல் இருந்தும், சிறையில் மது அருந்திக் கொண்டிருக்கும் தலைவனுக்காக தீக்குளிக்க போனானே இந்தப் படத்தின் தருமன் அவன் அதற்கு ஒரு உதாரணம்.

முதலாளித்துவத்தை முன்வைக்கும் கட்சிகளும் சரி, தொழிலாளர் நலனை முன்வைக்கும் கட்சிகளும் சரி மக்களை சுரண்டுவதே அவர்களின் நோக்கம். மற்றவை எல்லாம் வேஷம்.

இன்றிருக்கும் இளைஞர்கள் எல்லாம் இஞ்சினியரிங் படித்தால் மட்டும் போதாது. அரசியல் அறிவியல், பொருளாதாரம், சட்டம், மனோதத்துவம், பொது நிர்வாகம் அனைத்தும் கற்க வேண்டும்.
ஏன் தெரியுமா?

அப்போது மட்டுமே நமது அரசியல் தலைவர்களின் அதிகாரம் என்ன? கடமைகள் என்ன? அவர்களுடைய பேச்சின் அர்த்தமென்ன? அது சாத்தியமானதா? என்பதன் உண்மைப் பொருளை உணர்ந்து கொள்ள முடியும்.

மனிதன் ஏழ்மையில் இருக்க முதன்மைக் காரணம் முயற்சியின்மையும் அறியாமையும். இன்று முதலாளித்துவ நாடுகள் போல கம்யூனிசம் நடைமுறையில் இருக்கும் நாடுகளிலும் ஏழ்மை இருக்கிறது.

ஆம். இருக்கவே செய்யும்.

இப்படத்தின் தருமனைப் போன்று மனிதன் முட்டாளாக இருந்தால் ஏழ்மை இருக்கவே செய்யும்.

தன் வயிறு நிறையும் வரை மனிதன் எவனும் சுயநல வாதியாகவே இருக்க வேண்டும். பொதுநலத்தைப் பற்றி சிந்திக்க வேண்டிய தலைவனே பொதுநலவாதியாக இல்லாதபோது அடுத்தவேளை உணவுக்கு வழியற்றவனான நீ ஏன் பொதுநலத்தைப் பற்றி சிந்திக்கிறாய்?. ஏன் உணர்ச்சிகளுக்கு அடிமையாகிறாய்?

ஒவ்வொரு மனிதனும் பார்க்க வேண்டிய திரைப்படம் இது. இதே மாதிரிக் கருத்தை, அரசியல் ஆழத்தை, அக்கிரமத்தை தெளிவாகக் கூறிய மற்றொரு படைப்பு கண்ணதாசனின் “ரத்த புஷ்பங்கள்”. முடிந்தால் அதையும் படித்துப் பாருங்கள்.

1 கருத்து:

  1. தருமா என்னை மன்னித்துவிடு என்று அவனைக் கொன்ற கதாபாத்திரம் (சார்லி என்று நினைக்கிறேன்) பேசும்போது அனைவருடைய மனமும் கனத்துவிடும்.

    பதிலளிநீக்கு