சனி, 8 ஜூலை, 2017

நிழல்கள்

சந்திரசேகர், ரவி நடித்து பாரதிராஜா இயக்கத்தில் பல ஆண்டுகள் முன்பு வெளிவந்த படம் நிழல்கள். மனிதன் முதலில் வயிற்றுப் பிழைப்புக்கு வழி வகை செய்ய வேண்டும். பிறகு வாழ வழிவகை செய்ய வேண்டும். அதற்குப் பிறகுதான் ஆசைகள், லட்சியங்களை நிறைவேற்ற முடியும் என்பதை தெளிவாகக் காட்டிய படம்.
தன் படிப்புக்கேற்ற வேலை தேடி அலையும் எம்.ஏ பட்டதாரியான கோபி, சினிமாவில் மியூசிக் டைரக்டராக முயற்சி செய்து வரும் ஹரி இருவரும் சென்னையில் ஒரு வீட்டின் மாடியில் குடியிருக்கின்றனர்.

கீழே உள்ள வீட்டு உரிமையாளருக்கு இரண்டு மகன் ஒரு மகள். மூத்தவன் படித்து விட்டு வேலை தேடுகிறான். இளையவன் பிரபு கல்லூரிக்கு கூட சரியாகப் போகாமல் இயற்கையை ரசித்துக் கொண்டு கனவுலகிலேயே வாழ்ந்து வருகிறார்.

இவர்கள் வீட்டிற்கு எதிர் வீட்டில் குடியிருப்பவள் மகா. அவளுக்கு ஆங்கிலம் கற்றுத்தர வருகிறார் கோபி. முதலில் கோபியைத் தவறாக நினைக்கும் மகா பிறகு புரிந்துகொள்கிறார். இருவரும் காதலிக்கின்றனர்.

ஆத்திரக்காரனான கோபி இண்டர்வியூ என்ற பெயரில் ஏமாற்றியதற்காக அடிதடியில் இறங்குகிறார். தன்னுடைய ஆர்மோனியத்தை தவறாகப் பேசியதற்காக ஹரி வட்டிக்கடை செட்டியாரிடம் அடிதடியில் இறங்குகிறார். இப்படி இருவரும் போலீஸ் ஸ்டேசனில் அடைக்கப்படுகின்றனர்.

கனவுலகிலேயே வாழ்பவரான பிரபுவின் ஓவியம் முதலில் நிராகரிக்கப்படுகிறது. சிந்தனை நிராகரிக்கப்படுகிறது. அவரும் பெற்றோரால் நிராகரிக்கப்படுகிறார். ஒரு வித்வானிடம் வீணை கற்றுக் கொள்ள தயாராகும் போது அந்த வீணை வித்வானின் விதியை முடித்து வைத்து கடவுள் கூட பிரபுவை நிராகரிக்கிறான்.

வீணைக் கற்றுக் கொள்ள முடியாத சோகத்தில் கஞ்சா அடித்து போலீஸில் மாட்டிக் கொள்கிறார் பிரபு. இம்மூவரையும் தனது தங்கச் சங்கிலியை அடகு வைத்து மீட்கிறார் மகா.
மூவருக்குமே அவருடைய லட்சியங்கள்தான் கண்ணுக்கு தெரிகிறது. உலகத்தை அவர்கள் கவனிக்கவே இல்லை. ஒரு வகையில் அவர்கள் லட்சியவாதிகள். வேறொரு வகையில் அவர்கள் தறுதலைகள் ஏனெனில் அவர்களால் அவர்களுடைய தேவைகளைக் கூட பூர்த்தி செய்துகொள்ள முடியவில்லை.

தன்னுடைய தனிப்பட்ட உலகில் வாழும் இவர்கள் யதார்த்த உலகினை கவனிப்பதே இல்லை. அவர்களை யதார்த்த உலகிற்குள் அழைத்து வர டீக்கடை சிறுவன் எத்தனையோ முறை அழைப்பு விடுக்கிறான். ஆனால் இவர்கள் கேட்கவில்லை.

இறுதியில் கையில் பணமுமில்லாமல், பிழைப்புக்கும் வழியில்லாமல் கோபி, ஹரி இருவரும் வீட்டை விட்டுத் துரத்தப் படுகின்றனர். இதற்கிடையில் கோபியின் அப்பா இறந்து விட்டதாக தந்தி வருகிறது. நான் பணம் ஏற்பாடு செய்கிறேன் என்று கூறி ஆர்மோனியத்துடன் கடற்கரைக்கு சென்று தன் இசை மூலம் பணம் சம்பாதிக்க முயல்கிறான் ஹரி.

சாவுக்குப் போக பணமில்லாமல் இருக்கும் வேளையில் ரிக்ஷாகாரர் மணியின் மகன் (டீக்கடை பையன்) ஒரு பாத்திரத்தை அடகு வைத்து பணம் கொண்டு வர செல்கிறான். வரும் வழியில் பாதாள சாக்கடையில் விழுந்து உயிருக்குப் போராடுகிறான். அவனைக் காப்பாற்ற வட்டிக்கடைகாரரிடம் பணம் கேட்டு அது கிடைக்காமல் போகவே அவரைக் கொலை செய்கிறான் கோபி.

எல்லா விதத்திலும் நிராகரிக்கப்படும் பிரபுவிடம் மகா காட்டும் கருணையை காதல் என்று எண்ணுகிறான் பிரபு. இறுதியில் நடக்கும் மோதலில் பிரபு இறந்து விடுகிறான். காதலர்கள் இருவரும் கொலைக் குற்றத்திற்காக கைது செய்யப்படுகின்றனர். ஆர்மோனியப் பெட்டியோடு கடற்கரைக்குச் சென்ற ஹரி பைத்தியமாகிறான். டீக்கடை சிறுவன் இறந்து போகிறான்.

சமூக யதார்த்தத்தை மறந்து விட்டு லட்சியம் என்ற பெயரில் கனவு காண்பவர்களை நிழல்கள் என்று காட்டியிருக்கிறார் இயக்குனர். லட்சியப் பாதையில் செல்ல வேண்டிய இளைஞர்களுக்கான படம். கனவு காணுங்கள் என்று சொன்னார் கலாம். ஆனால் கனவு மட்டும் கண்டு யதார்த்தத்தை மறந்து விடாதீர்கள் என்று எச்சரிக்கிறார் பாரதிராஜா.
இதே மாதிரி கருத்துள்ள ஒரு படம் சில ஆண்டுகளுக்கு முன்பு மாயக்கண்ணாடி என்ற பெயரில் இயக்குனர் சேரனால் எடுக்கப்பட்டது. படம் என்னவோ ஓடவில்லை. யதார்த்தத்தை பற்றிப் பேசுவது இன்றைய இளைஞர்களுக்கு பிடிக்கவில்லை போலும்.

இந்தப் படத்திற்கு கதை, வசனம் எழுதி ஒரு பாடலும் எழுதியவர் நடிகர் மணிவண்ணன். அவரே ரிக்ஷாகாரனாகவும் நடித்திருப்பார். திரைக்கதை எழுதி இயக்கியவர் பாரதிராஜா.

படத்தில் படித்த இளைஞர்களை நிழல்களாக காட்டிய இயக்குனர் நிஜமாக ஒரு சிறுவனையும் காட்டியிருக்கிறார். “இப்பவும் பிழைக்கிறதுக்கு ஆயிரம் வழி இருக்கு” என்று ஒவ்வொரு முறையும் தன்னம்பிக்கை தருகிறான் அவன்.

ஆரம்பக் காட்சியில் கோபி கதவைத் திறந்து வீட்டுக்குள் வருகிறார். கதவில் எழுதப்பட்டிருக்கும் பெயர்களை ஒரு நிமிடம் காட்டி அந்த வீட்டில் இருப்பவர்களை நமக்கு நறுக்கென்று அறிமுகம் செய்து வைக்கிறார் இயக்குனர். என்னைப்போல இப்படி பக்கம் பக்கமாக இழுப்பதில்லை.

தன் வீட்டை நோக்கி கைதட்டுவதாக கோபியை முதலில் தவறாக நினைக்கும் மகா பின் காய்கறி வாங்கும் போது உண்மையை உணர்ந்து கொள்கிறாள். அந்தக் காட்சியில் மகாவின் மனநிலையை தராசு சமநிலைக்கு வருவதைக் கொண்டு நமக்கு உணர்த்துகிறார் இயக்குனர். அந்தக் காட்சியும் சிறந்த காட்சிப்படுத்துதல்.

மற்றொரு காட்சியில் பிரபுவின் தங்கை, “அவரது ஆட்சிக்காலத்தில், வசந்த விழாக்காலத்தில் முத்துக்களும், பவளங்களும் தெருக்களிலே குவித்து வைக்கப்பட்டிருந்தன” என்று புத்தகத்தை சத்தமாகப் படித்துக் கொண்டிருக்க மற்றொரு புறம் அவனது தாய், ரேஷனில் கிடைக்கும் கோதுமையை வாங்கவில்லையென்று பிரபுவின் அண்ணனைத் திட்டிக் கொண்டிருக்கிறாள். இங்கே கற்றுத் தரப்படும் கல்விக்கும் யதார்த்தத்திற்கும் எத்தனை வித்தியாசம் என்று இந்தக் காட்சியில் காட்டப்படுகிறது.

மனதில் பெரும் வைராக்கியத்தோடு லட்சியப்பாதையில் செல்பவன் ஒன்று பெருவெற்றியைப் பெறுவான், சூழ்நிலைகள் சரியாக இல்லையெனில் தோல்வி தரும் வருத்தத்தில் அல்லது விரக்தியில் மனஅழுத்தத்திற்குள்ளாவான். அப்படி மன அழுத்தத்திற்குள்ளாகி பைத்தியமாகிப்போனவன் தான் இந்த ஹரி. “வயிற்றுப் பிழைப்புக்காக லட்சியத்தை விட்டுட்டா நமக்கும் தேவிடியாளுக்கும் என்னடா வித்தியாசம்?” என்று கேட்குமளவு வைராக்கியம் கொண்டவன் இந்த ஹரி.

படத்தில் படித்த இளைஞர்களை நிழல்களாக காட்டிய இயக்குனர் நிஜமாக ஒரு சிறுவனையும் காட்டியிருக்கிறார். “இப்பவும் பிழைக்கிறதுக்கு ஆயிரம் வழி இருக்கு” என்று ஒவ்வொரு முறையும் தன்னம்பிக்கை தருகிறான் அவன். இளைஞர்கள் பின்பற்ற வேண்டியவனும் அவனே.

3 கருத்துகள்:

  1. பாரதிராஜாவின் படங்களில் நான் ரசித்துப் பார்த்த படம். இதே காலகட்டத்தில் வெளிவந்த வறுமையின் நிறம் சிகப்பு வெற்றி பெற்ற அளவு இப்படம் வெற்றி பெறவில்லை. காரணம் நிழல்கள் திரைப்படத்தில் தன்னம்பிக்கைக்கான வழிவகை தெளிவாகத் தரப்படவில்லை. நான் ரசித்த வசனம் தந்தை மகனிடம் கூறுவார், "நான் செத்துட்டேன்னு தந்தி வரும். நீ ஊருக்கு வர்றத்துக்குக் கூட காசு இருக்காது". அந்த அளவிற்கு போலி வாழ்க்கையை நம்பவேண்டாம் என்ற கருத்து கூறப்பட்டிருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். உண்மைதான். இந்தப்படம் முழுக்க முழுக்க எதிர்மறையைப் பற்றியே பேசுகிறது. அந்த சிறுவனை தவிர ஒருவரும் நம்பிக்கை தருபவர் இல்லை. ஹரி கூட எப்போதும் சோக இசையையே வாசிக்கிறார். அவ்வாறு இருக்க காரணம், படம் நிழல்களைப் பற்றி பேச வேண்டும் என்பதற்காகத்தான்.

      நீக்கு