வியாழன், 22 ஜூன், 2017

காப்பியடித்த படங்கள்

சில விமர்சன அறிவுஜீவிகள் இருக்கிறார்கள். எந்தப்படம் வந்தாலும் அது அங்கே இருந்து காப்பியடிக்கப்பட்டது, இங்கே இருந்து காப்பியடிக்கப்பட்டது என்று குறை சொல்வதையே வழக்கமாக வைத்திருப்பார்கள். எந்தப் படைப்பையும் நேர்மறை கண்ணோட்டத்தில் பார்க்கவே மாட்டார்கள்.

அவர்களைப் பொறுத்தவரையில் மற்றவர்களை குறை சொல்வது ஒரு வகை புத்திசாலித்தனம். அதே நேரம் தானாக முன்வந்து எந்தப் படைப்பையும் உருவாக்க மாட்டார்கள்.

ரிமேக் என்ற வகையில் எடுக்கப்படுபவற்றையும், பெருவாரியான காட்சிகள் வேறு ஒன்றுடன் ஒத்துபோனாலும் வேண்டுமானால் முழு காப்பி என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு படத்தின் ஒரு சில அம்சங்கள் மற்றொரு படத்தில் இருக்கிறது என்பதற்காக அதைக் காப்பி என்று சொல்ல முடியாது.

சில வருடங்களுக்கு முன்பு வாரப்பத்திரிக்கை கட்டுரையில் படித்த ஞாபகம். தமிழ் படங்களான “நிலவே முகம் காட்டு”, “துள்ளாத மனமும் துள்ளும்” ஆகிய இரண்டும் சார்லி சாப்ளினின் “சிட்டி லைட்ஸ்” படத்திலிருந்து காப்பியடிக்கப்பட்டதாக எழுதியிருந்தார்கள்.

ஆனால் இந்த மூன்றும் வேறுவேறு விதமானவை. சிட்டி லைட்ஸ் காமெடியுடன் காதல் கலந்த உயர்கலை வடிவம். தமிழ்ப் படங்கள் இரண்டும் ஹீரோயிசம் காட்டும் வணிகப்படங்கள். நாயகிக்கு கண் தெரியாது என்பது மட்டும் தான் மூன்றிலும் இருக்கும் ஒற்றுமை.

“அவதார்” எடுத்த கேமரூனிடம் “எப்படி உங்கள் சிந்தனையில் இந்த மாதிரி கலரான மனிதர்கள் தோன்றினார்கள்” என்று. அவரோ, “நான் இந்திய இதிகாசமான மகாபாரதத்தில் உள்ள கிருஷ்ணனது உடல் நிறத்திலிருந்தே என் படத்தின் கதாபாத்திரங்களுக்கான நிறத்தை சிந்தித்தேன்” என்று பதில் கூறினார்.

அதற்காக கேமரூன் மகாபாரதத்தை காப்பியடித்து விட்டார் என்று கூறமுடியுமா?

நமது இயக்குனர்களுக்கு கற்பனைத்திறன் போதவில்லை என்பது உண்மைதான். தன் படத்திற்கான கதையை தானே எழுத வேண்டும் என்றே எண்ணுகிறார்கள்.

ஒரு எழுத்தாளரிடம் கதை எழுதி வாங்கி திரைக்கதை, வசனம், இயக்கம் மட்டும் தான் செய்யலாம் என்பதை அவர்கள் மனம் ஏற்பதில்லை. ஆனால் எல்லோரும் எழுத்தாளராகிவிட முடியாதே.

ஆகையால் தான் “நானே எழுதினேன்” என்று கூறிக்கொண்டு எங்காவது இருந்து கதையையோ இல்லை ஒரு சில அம்சங்களையோ உருவி விடுகிறார்கள். ஆனால் ஈயடிச்சான் காப்பி என்பது குறைவுதான்.

இயக்கம் என்பது வேறு. எழுத்து என்பது வேறு. அந்தந்த வேலையை அவரவர் செய்தால் மட்டுமே நலமாக இருக்கும். அப்படிச் செய்யாததால்தான் இன்று ஏகப்பட்ட தமிழ்ப்படங்கள் குப்பைகளாக வெளிவருகின்றன. மேலும் குப்பைப் படங்கள் வெளிவரக்காரணம் ரசனையற்ற, குப்பை மனோபாவம் கொண்ட ரசிகர்கள்.

இயக்குனர்களின் சிந்தனை மேம்பட வேண்டும். எழுத்தாளர்களை துணைக்கு வைத்துக்கொள்ள வேண்டும். விமர்சன அறிவுஜீவிகளும் பொறுப்புணர்வோடு நடந்துகொள்ள வேண்டும்.

6 கருத்துகள்:

 1. சிந்தனையுள்ள நல்லதொரு பதிவு.. சில நாட்களுக்கு முன் நானும் இது போல ஒரு பதிவை எழுதியுள்ளேன்...

  http://www.pazhaiyapaper.com/2015/06/inspiration-and-copied-tamil-movies.html

  பதிலளிநீக்கு
 2. ஒரே இடத்தில் இருந்து உருவினால் அது காப்பி, பல இடங்களில் இருந்து உருவினால் அது ஆய்வு என்று எங்கோ படித்த நினைவு. if you copy from one person it is plagiarism, if you copy from many person it is plagiarism.

  பதிலளிநீக்கு
 3. கடைசி பத்தியில் கூறப்பட்டுள்ள கருத்துகள் மிகவும் ஏற்கத்தக்கவை. அவரவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

  பதிலளிநீக்கு
 4. இதே மாதிரிதான் பாகுபலியை தி கிரேட் வார் படத்தை காப்பி அடித்தாக சொல்கிறார்களோ......

  பதிலளிநீக்கு