சனி, 17 ஜூன், 2017

வீடு

யாருக்குமே அதிகம் பரிச்சயமில்லாத சில நட்சத்திரங்களின் நடிப்பில் பாலு மகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த படம் வீடு. ஒரு சாமானிய மனிதன் வீடுகட்ட வேண்டுமாயின் எத்தனை தூரம் கஷ்டப்பட வேண்டும் என்பதை கவித்துவமாக காட்டுகிறது.
வாடகை வீட்டில் குடியிருக்கும் தாத்தாவான முருகேசனுக்கு வீட்டை காலி செய்யச் சொல்லி வரும் வக்கீல் நோட்டீஸிலிருந்து படம் துவங்குகிறது. தாத்தா முருகேசன் பெற்றோரை இழந்த தனது இரு பேத்திகள் சுதா, இந்து உடன் அங்கே குடியிருக்கிறார்.

வீட்டை காலி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் வாடகைக்கு வேறு வீடு தேடி அலைகின்றனர். இவர்களது வசதிக்கேற்ப வாடகை வீடு தேடுகிறார்கள். வீடு கிடைக்கவில்லை.

இதற்கிடையில் சுதாவின் ஆபீஸ் நண்பர் கூறிய யோசனையின்படி ஆபீஸில் கடன் வாங்கி, வளசரவாக்கத்தில் உள்ள தமது காலி மனையில் ஒரு வீடு கட்ட ஆரம்பிக்கின்றனர்.

வீடு கட்டும் போது செய்ய வேண்டிய அனைத்து அரசு சார்ந்த பதிவுகளையும், அனுமதிகளையும் பெற்று வீடு கட்ட ஆரம்பிக்கின்றனர். மாதச் சம்பளத்தில் வாழ்பவனுக்கே உரித்தான அனைத்து பொருளாதாரப் பிரச்சனைகளும் அந்தக் குடும்பம் சந்திக்க வேண்டி இருக்கிறது.

பணப்பிரச்சனை அவர்களிடம் இருக்கும் நிலத்தில் பாதியை அடிமாட்டு விலைக்கு விற்கச்செய்கிறது. அதை தாண்டி வந்தால் மழைகூட சாமானியனுக்கு எதிராக வருவதைப் போல அஸ்திவாரத்திற்கு தோண்டிய பள்ளத்தை நிரப்பி விடுகிறது.

காண்டிராக்டர் சிமெண்ட் மூட்டை திருடுகிறான். கள்ளக்கணக்கு எழுதுகிறான். வாட்ச்மேன் வாங்கிப் போட்ட ஜல்லி, மணலை குறைந்த விலைக்கு வேறு இடத்தில் விற்க முயல்கிறான்.

இது போதாதென்று, தான் ஒரு பெண் என்பதால் கண்டவனிடம் எல்லாம் மானத்தை காப்பாற்ற அவமானத்தை பரிசாகப் பெற வேண்டி இருக்கிறது.

இவையெல்லாம் கூட ஒரு தனிமனிதனின் பொருளாதாரப் பிரச்சனைகள், சமூகம் சார்ந்த பிரச்சனைகள் என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால் அனுமதி இல்லாத இடத்தில் வீடு கட்ட அனுமதி வழங்கினார்களே அந்த நகராட்சி அதிகாரிகள். அவர்களால் வரும் பிரச்சனையை என்னவென்று சொல்வது?

அந்தக் கட்டடம் இடிக்கப்படும் போது ஏற்படும் பணக்கஷ்டத்திற்கு யார் நஷ்ட ஈடு வழங்குவார்கள்? மனக்கஷ்டத்திற்கு யார் ஆறுதல் வழங்குவார்கள்?

நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும். வருடக்கணக்கில் விசாரணை நடக்கும். அதுவரையில் அவர்கள் எங்கே தங்குவார்கள்?. இதற்கெல்லாம் அரசோ, நீதித்துறையோ பதில் வழங்காது.

மௌலிவாக்கம் கட்டிடத்தில் வீடு வாங்க பணம் கொடுத்தவர்கள் இன்றும் கோர்ட் படி ஏறி இறங்குகிறார்கள். மற்றொரு புறம் வீடு வாங்க வங்கியில் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டி வருகிறார்கள். மூன்றாவது புறமோ தற்சமயம் இருக்கும் வீட்டுக்கு வாடகை கொடுத்து வருகிறார்கள்.

எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவருக்கு அரசுப் பேருந்தில் செல்லும் போது விபத்து நடந்து விட்டது. அதற்கு நஷ்ட ஈடு இருபதாயிரம் ரூபாயை ஏழு ஆண்டுகள் கழித்து வழங்கினார்கள். வழக்கு நடத்துவதற்கும், ஏழு ஆண்டுகள் அலைந்ததற்கும் கூடுதலாக ரூபாய் மூவாயிரத்து நானூறு வழங்கினார்கள். இது தான் இங்கே நமது நிலைமை.

நமது அதிகார மையங்கள், ஆட்சி பீடங்கள் எல்லாம் பணக்காரனுக்கும், பதவியில் இருப்பவனுக்குமானவை சாமானியனுக்கானதல்ல என்பது படத்தின் இறுதியில் தெரிகிறது.

படத்தின் ஒவ்வொறு ஃப்ரேமிலும் அந்த வீடு கட்டுவது பற்றிய காட்சிகள் தான். எதுவும் வலிந்து திணிக்கப்பட்டதல்ல.

மேலும் கதாபாத்திரங்களின் அசைவுகள் கூட பார்வையாளனை படத்தின் ஒரு பகுதியாக்கி விடுகிறது.

குத்துப் பாட்டு, சண்டைக்காட்சிகள், டூயட், பரட்டைத்தலை வில்லன்கள் என்ற எதுவுமே இல்லாமல் எடுக்கப்பட்ட ஒரு சிறந்தபடம். அனைவரும் நிச்சயம் பார்க்க வேண்டிய படம்.

6 கருத்துகள்:

 1. இத்திரைப்படத்தைப் பார்த்துள்ளேன். இப்போதைய நிலைக்கும் இது பொருந்தும்.

  பதிலளிநீக்கு
 2. உண்மைதான்
  வீடு ஒன்றினைக் கடன் வாங்கிக் கட்டி, கடனை அடைக்க இயலாமல், கட்டிய வீட்டையே விற்ற அனுபவம், எங்கள் குடும்பத்திற்கு உண்டு
  பதிவினைப் படித்தபின் மீண்டும் அக்கால நினைவுகள் வலம் வருகின்றன

  பதிலளிநீக்கு
 3. இப்படம் வெளிவந்து ஆண்டுகள் பல ஆகிவிட்டனவே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான். ஆனால் இந்த மாதிரி படங்கள் இப்போது உள்ளவர்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக எழுதுகிறேன்.

   நீக்கு