திங்கள், 22 மே, 2017

பாகுபலி vs மகாபாரதம்

பாகுபலி படத்தை விமர்சனம் செய்ய பலருக்கு வாய்வரவில்லை. ஏனெனில் படத்தில் அத்தனை சிறப்புக்கள். இந்திய சினிமாவை ஒரு அடி முன்னேற்றி விட்டது என்று புகழ்ந்து தள்ளி விட்டார்கள்.

அது என்னவோ கொஞ்சம் உண்மைதான். அத்தனை பிரம்மாண்டம். அத்தனை உழைப்பு. அத்தனை பெரிய விசயங்களை கற்பனை செய்து படமாக்கி இருக்கிறார்.
ஆனால் கதை என்னவோ ரொம்ப பழசுதான். அதே பங்காளிச் சண்டை. அரியனைப் போட்டி. இதெல்லாம் தெரியாமல் படமாக்கி இருக்கிறார். அதற்காக அவரை பாராட்டலாம்.

கலை இயக்குனருக்குத்தான் எவ்வளவு வேலை. இயக்குனருக்காக எவ்வளவு தூரம் அவரும் உழைத்திருக்க வேண்டும்.

ஒரு புறம் பாகுபலி, மறுபுறம் சிவகாமி, மூன்றாவது புறம் தேவசேனா. இவர்களை முக்கியமாகக் கொண்டே கதை நகர்கிறது. ஆனால் கதையில் அதிகமாக மகாபாரத வாடை வீசுகிறது.

அதே திருதராஷ்டிரன், பாண்டு வம்ச சண்டைதான் இங்கும். அங்கே அண்ணனுக்கு கண் இல்லை. இங்கே கை இல்லை.

இரண்டிலுமே தம்பி வாரிசு மக்களின் செல்வாக்கை பெற்றவர்களாக இருக்கிறார்கள்.

சூழ்ச்சி செய்யும் வேலையை ஊனமான தகப்பனே செய்து விட்டதால், சகுனிக்கு வேலை இல்லை. ஆகையால் கிருஷ்ணனுக்கும் அவசியமில்லை.

பீஷ்மருடைய கதாபாத்திரத்தை இங்கே சிவகாமியும், கட்டப்பாவும் பிரித்துக் கொண்டார்கள்.

திரவுபதி இடத்தில் தேவசேனா. அவளை வைத்தே இரண்டிலும் பிரச்சனை உருவாக்கப்படுகிறது. கடைசியில் அவளே யுத்த வெறிக்கு காரணமாக இருக்கிறாள்.

பாண்டவர்களை காட்டுக்கு அனுப்பிய பின்னும் அவர்களுக்கு தொந்தரவு தர காடு வருகிறான் துரியோதனன். இங்கேயும் அப்படியே அரண்மனையை விட்டு விரட்டிய பின்னும் வில்லன் மனம் பாகுபலியைச் சுற்றியே வருகிறது. அவனைக் கொல்ல நினைக்கிறது.

இங்கே ஒரு வித்தியாசம்.

காதலை கச்சிதமாக பின்னியிருக்கிறார் இயக்குனர். இந்தக் காதலன் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் எட்டாம் எட்வர்டைப் போல காதலிக்காக மணிமகுடத்தை குப்பையில் கிடாசி விடுகிறான்.

மேலும் மகாபாரதத்தில் இருக்கும் யதார்த்தம் இங்கே இல்லை. ஒரு தனிமனிதன் யுதிஷ்டிரன் போல நியாயம் தெரிந்தவனாகவும், அதே நேரம் அர்ஜுனன் போல பெருவீரனாகவும் இருக்க முடியாது.

அப்படி இருந்தால் அது யதார்த்ததை விட்டு விலகியதாகி விடும். அப்படியே மற்ற சினிமா கதாநாயகனைப் போல இந்த நாயகனும் யதார்த்ததை விட்டு விலகி இருக்கிறான்.

கதையிலே இத்தனை ஓட்டை இருக்கிறது தான் என்றாலும், படம் எடுக்கப்பட்ட விதத்திற்காக அதைக் கண்டிப்பாக பார்க்க வேண்டும். இது இந்திய சினிமாவில் ஒரு மைல்கல்.

6 கருத்துகள்:

 1. வித்தியாசமான கதை களத்தை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்று ஒரு பயம் திரைத்துறையினரிடம் உள்ளது, ஆகையால் மிகவும் பழக்கப் பட்ட கதைகளை ஆங்காங்கே செப்பனிட்டு புது பாத்திரத்தில் தருவது வெற்றியை தருவதாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள். விதிவிலக்காக பல படங்கள் புது கதைக்களத்தை தேர்ந்தெடுத்து வரலாறு படைக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் சுரேஷ் தனபால். இது புதிய பாத்திரத்தில் பழைய கள். ஆனால் பாத்திரத்தை மிக அழகாக, புதியதாக, பெரியதாக செய்திருக்கிறார். மேலும் தரம் வாய்ந்த கள்ளை அதில் நிரப்பியிருக்கிறார்கள். அந்த வகையில் கொஞ்சம் சிறப்பு.

   நீக்கு
 2. அங்கு கண் இல்லை இங்கு கை இல்லை நல்ல ஒப்பாய்வு.....
  ஒரு பிரம்மாண்டத்தை மற்றொரு பிரம்மாண்டத்தோடுதான் ஐயா ஒப்பிட வேண்டும்... நல்ல விமர்சனம்...

  பதிலளிநீக்கு
 3. படம் எடுக்கப்பட்ட விதத்திற்காகப் பார்க்கப்படவேண்டும் என்பது உண்மையே. பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு