வெள்ளி, 21 ஏப்ரல், 2017

வேதம் புதிது

சத்யராஜ், சரிதா மற்றும் பலர் நடிப்பில் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த படம் வேதம் புதிது. தமிழ் சினிமாவில் சமூக சீர்திருத்தத்தை பாரதிராஜாவைப் போல் எவரும் கூறியதில்லை. சாதி, பேத வேறுபாட்டிற்கு சாவுமணி அடிக்கவும், மனிதாபிமானமே உயர்ந்தது என்பதை நிலைநிறுத்தவும் முயற்சித்த படம் வேதம்புதிது.
ஊரின் பெரியவரான பாலுத்தேவர் ஒரு நாத்திகர். அவரது மகன் சங்கரபாண்டிக்கும், பிராமணரான நீலகண்டசாஸ்திரியின் மகள் வைதேகிக்கும் காதல். விசயம் தீவிரமாகும் வேளையில் தாயில்லாத தனது மகளை வேறு ஒருவனுக்கு இரண்டாம்தாரமாக கட்டிவைக்க அழைத்து செல்கிறார் நீலகண்ட சாஸ்திரி. இதை விரும்பாத வைதேகி நதியில் விழுந்து தற்கொலை செய்து கொண்டதைப் போன்ற மாயத்தோற்றத்தை உருவாக்கிவிட்டு தப்பிச் செல்கிறாள்.

வைதேகியின் மறைவுக்கு சங்கரபாண்டியே காரணம் என நினைக்கும் சாஸ்திரி சங்கரபாண்டியை தூற்றுகிறார். இருவருக்கும் இடையே நடக்கும் வாக்குவாதத்தில் பாறையில் இருந்து தவறி விழுந்து இருவரும் இறக்கின்றனர். பிறந்தபோதே தாயை இழந்து, பின் உடன் பிறந்தவளையும் இழந்து, தற்சமயம் தந்தையையும் இழந்த சாஸ்திரியின் மகன் சங்கரன் அனாதையாகிறான். அனாதையான குழந்தை சங்கரனை பிராமண சாதி உறவினர் எவருமே ஏற்றுக்கொள்ளாத போதும் பாலுத்தேவர் ஆதரவளிக்கிறார். பாலுத்தேவரால் குழந்தை சங்கரன் உலக நடைமுறையை கற்றுக்கொள்கிறான். சங்கரனால் பாலுத்தேவர் மென்மையானவராகிறார்.

இந்நிலையில் ஊரைவிட்டு ஓடிய வைதேகி வேறு ஒருவர் உதவியோடு உண்மையை அறிந்து பாலுத்தேவர் வீட்டிற்கு வருகிறாள். வைதேகி மீது ஆசைகொண்டு, நிராகரிக்கப்பட்டு, அவமானப்படுத்தப் பட்ட கிருஷ்ணய்யர் இதை அறிந்து கொள்கிறான். அவளைப் பழிவாங்கத் துடிக்கிறான். தானே ஊரில் நான்கு வீடுகளைக் கொழுத்திவிட்டு அது வைதேகியால் வந்த சாமிக்குத்தம் என்று சொல்லி வைதேகிக்கு எதிராக ஊரைத் தூண்டிவிடுகிறான். சங்கரனால் மென்மையானவராகிப் போன பாலுத்தேவர் நடக்கும் கலவரத்தில் கொல்லப்படுகிறார். சங்கரனோ தனது மத ஆச்சாரங்களையும், சாதியையும் துறந்து நாத்திகனாகிறான்.

படத்தில் எத்தனையோ விசயங்களை வசனமாக இல்லாமல் காட்சிப்படுத்தியே காண்பித்திருப்பார் இயக்குனர். காதலர்களைப் பிரிக்கும் நெருப்பாக இரண்டு சாதியினரும் செயல்படுவதாக பாடலின் நடுவிலும், தந்தையும் காதலனும் இறந்த விசயத்தை வைதேகி அறிந்து கொள்வதை புகைப்போக்கியின் புகையாகவும், பாலுத்தேவர் வாரிசு இறந்துபோவதை தண்ணீரில் மூழ்கும் செம்பாகவும், பாலுதேவருக்கு எதிராக ஊர் ஒன்று கூடுவதை தண்டோராவாகவும் காட்சிப்படுத்தியிருப்பது அழகு.
பள்ளிக்கூடம் கட்டவேண்டும் என்ற விசயத்தை சங்கரபாண்டி பஞ்சாயத்தைக் கூட்டி சொல்ல அது ஜாதிப் பிரச்சனையாகிறது. அக்காட்சியில் பிராமணர், தேவர், ஆசாரி, நாடார், செட்டியார், சேரி என்று சாதிபேதம் பாராமல் அனைவரையும் தாக்கியிருப்பார் இயக்குனர். இத்தனை துணிச்சல் தமிழ் சினிமாவில் எவரிடமும் இல்லை.

பாரதிராஜா படங்களில் பொதுவாக காதல் வாழத்துடிக்கும். சமூகம் அதைப் பிரிக்கத் துடிக்கும். அதுதான் யதார்த்தம். இந்தப் படத்திலும் அப்படித்தான். காதலனின் தாய் சாமிக்குப் படையல் செய்த பொங்கலை தற்செயலாக கோவிலுக்கு வந்த காதலிக்கும் அளிக்கிறாள்.

“அதை சாப்பிடாவிட்டால் சாமி கோபித்துக் கொள்ளும்” என்று காதலி சொல்ல, அவள் தம்பியான குழந்தை சங்கரனோ “அதை சாப்பிட்டால் அப்பா கோபித்துக் கொள்வார்” என்கிறான்.

வேறு வழியின்றி அதைக் கோவிலிலேயே விட்டுவிடும் காதலி தன் கையிலே ஒட்டியிருக்கும் இரண்டு பருக்கை பொங்கலை தம்பிக்குத் தெரியாமல் சாப்பிடுகிறாள்.

அன்போடு தரப்பட்ட பொங்கலை சாப்பிடச் சொல்கிறது காதல். அதைத் தடுக்கிறது அப்பாவின் ஆச்சாரம். அந்த இரண்டு பருக்கைகள் அவளுக்கு கிடைத்ததால், அதை அவள் சாப்பிட்டதால்தான் படம் பார்க்கும் காதலர்கள் கூட சந்தோஷப்பட்டிருப்பார்கள்.

இந்த நிலையைத்தான் “காதல் என்னை அழைக்குது, எங்கள் வேதம் என்னைத் தடுக்குது” என்று எழுதியிருப்பார் பாடலாசிரியர். மேலும் அவர் “சின்னக்கிளி இரண்டும் செய்துவிட்ட பாவமென்ன? அன்பைக் கொன்று விட்டு ஆச்சாரம் வாழ்வதென்ன?” என்றும் கேள்வி கேட்டிருப்பார்.
அனாதையான குழந்தை சங்கரனைப் பற்றி பிராமணர்கள் ஒன்று கூடி விவாதம் செய்யும் காட்சியும் அர்த்தமுள்ளதாக இருக்கும். பிராமணர் அனைவரும் இருக்க இடையிடையே சங்கரனின் கேள்வி படிந்த முகத்தை மறைத்து மறைத்து காட்டியிருப்பார் இயக்குனர்.

ஆதரவு கிடைக்காமல் போன குழந்தை சங்கரனுக்கு, அவன் கற்ற வேதம் “பவதி பிக்ஷாம் தேஹி” என்று ஆதிசங்கரரைப் போல் பிச்சையெடுக்க மட்டுமே உதவுகிறது.

“கொடிது கொடிது வறுமை கொடிது” என்று பாடிய ஔவையார் கடைசியில் கூறுவாரே “அனைத்திலும் கொடிது அன்பிலாப்பெண்டிர் கையால் அமுதுண்ணல் தானே” என்று. அப்படி அன்பில்லாமல் ஒரு பிராமணன் வீட்டில் கொடுக்கப்பட்ட உணவை உண்ண மனமில்லாமல் வீசியெறிகிறான் குழந்தை சங்கரன்.

படத்தின் கதையில் முக்கிய பாத்திரங்களாக சாஸ்திரிகளும், பாலுத்தேவரும் வருகின்றனர். இருவருமே இருவேறு பாதையில் இறுகிப் போய்விட்டவர்கள். உறைந்து விட்டவர்கள்.
சாஸ்திரிகள் மெஞ்ஞானத்தில் மெருகேறி உலக வாழ்க்கையில் பற்றில்லாமல் இருக்கிறார். அவருக்கு வேதத்தை தவிர ஒன்றும் தெரியாது.

பாலுத்தேவர் விஞ்ஞானத்திலும், உலக வாழ்விலும் முழுக் கவனத்தையும் செலுத்தி மெஞ்ஞானத்தை பற்றி ஒன்றும் அறியாதவராக இருக்கிறார். ஆகையால்தான் “இவ்வளவு பெரிய வீடா இருக்கு இங்க ஒரு சாமி படம் கூட இல்லையே” என்று குழந்தை சங்கரன் கேள்வி கேட்கும் விதமாக வாழ்கிறார். “மாதா, பிதா, குரு, தெய்வம்” என்பதன் பொருளை குழந்தையிடமிருந்து கற்றுக் கொள்கிறார்.

பாலுத்தேவர் மனிதாபிமானத்தை முன்னிறுத்துபவராக இருந்தாலும் ஒரு வகையில் வறட்டு நாத்திகவாதியாகவும் இருக்கிறார். “அன்பே சிவமென்றால் அவன் கையில் ஏன் சூலாயுதம்”, “நல்ல காரியத்துக்குப் போகும் போது நேரம் எல்லாம் பாக்காதீங்க”, எல்லா ஆடுகளும் மற்ற சாதி ஆடுகளோடு ஒண்ணா கலக்குதா?” என்பது போன்ற வசனங்கள் அதற்கு உதாரணம். மேலும் தனது மகன் வேதம் கற்றுக்கொள்வதை அறிந்ததும் எப்போதும் சாந்தமாக இருக்கும் பாலுத்தேவர் கடுமையாக கோபம் கொள்கிறார். அவர் நாத்திகத்தில் உறைந்துவிட்டவர்.

மனிதாபிமானத்தில் உறைந்து விட்ட பாலுத்தேவர் இரந்து கேட்கிறேன் என்ற பெயரில் சாஸ்திரிகள் செய்யும் ஆச்சாரப் பிச்சைக்கு தனது மகனின் காதலைத் தெரிந்தே பலிகொடுத்துவிடுகிறார். அவர் இதைத்தான் தானமாக கேட்க வருகிறார் என்று தெரிந்த உடன் அவரைப் போலவே நாசூக்காக அவரைக் கேட்கவிடாமல் தடுத்திருக்கலாம்.

அந்த வகையில் பாலுத்தேவர் மனைவி மிக எச்சரிக்கையாக செயல்படுகிறார். கடைசிக் காட்சியில் வைதேகி, தனது தம்பி சங்கரனை தன்னுடன் அனுப்புமாறு கேட்டு விடுவாளோ என்று சந்தேகிக்கும் பாலுத்தேவர் மனைவி அவளைக் கேட்கவிடாமல் தடுத்து விடுகிறாள்.

நீலகண்ட சாஸ்திரியும் சில விசயங்களில் முரண்படுகிறார். சங்கரபாண்டி தன்னிடம் வேதம் கற்றுக் கொள்ள வரும்போது பெருந்தன்மையோடு கற்றுத்தந்தவர், சிலை திருட்டு விவகாரத்தில் ஊரின் முன்பு பாலுத்தேவர் மன்னிப்பு கேட்ட பின்பும் அவரை மன்னிக்கவில்லை. இவர் ஆத்திகத்தில் உறைந்து விட்டவர்.
இருவரிடமிருந்தும் சிறப்புக்களைப் பெற்றுக்கொள்ளும் குழந்தை சங்கரனே மானுடத்தின் சிறந்த பிரதிநிதியாகிறான்.

ஊருக்கு வரும் பெரிய சாமியார் தன்னிடம் கேள்வி கேட்டு ஞானம் வழங்கிய குழந்தை சங்கரனுக்கு ஆசி வழங்க முற்படுகிறார். பிறகு அந்தத் தகுதி தனக்கில்லை என்பதை உணர்ந்து தன் கையை நிறுத்திக் கொள்கிறார்.

மேலும் அவன் “பாலு உங்க பேரு, தேவர்ங்கறது நீங்க படிச்சு வாங்கின பட்டமா” என்று கேள்வி கேட்கிறான். குழந்தை சங்கரனின் வரவால் மட்டுமே பாலுத்தேவர் பாலுவாகிறார்.

பாலுவிடம் வளர்வதால் குழந்தை சங்கரன் உலக யதார்த்தத்தை கற்றுக் கொள்கிறான். ஞானம் பிராமணன் வைத்திருக்கும் புத்தகத்தில் இல்லை, வாழ்வின் அனுபவத்தில் கிடைக்கிறது என்பதை அறிந்து கொள்கிறான். இருவருமே ஒருவகையில் பரிசுத்தமாகின்றனர்.

யதார்த்தத்தை உணரும் குழந்தை சங்கரன் தனக்கு ஆதரவளித்த பாலுவை அப்பா என்றழைத்து, தன் ஆச்சாரங்களைத் துறந்து புது மனிதனாகிறான். அவனைப் புதிய வேதம் ஓதுவிக்க வந்த புதுமனிதனாகக் காட்டி படத்தை முடித்திருப்பது சிறப்பு.

2 கருத்துகள்: