ஞாயிறு, 16 ஏப்ரல், 2017

மௌனராகம்

மோகன், கார்த்திக், ரேவதி நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான படம் மௌனராகம். மிக அற்புதமான திரைப்படம்.

“பெண்ணைப் பிடிக்கவில்லை” என்று சொல்லவேண்டும் என்று எண்ணிக்கொண்டே பெண் பார்க்கவந்த மோகன் “பெண்ணைப் பிடித்திருக்கிறது” என்று சொல்லி விடுகிறார். மணப்பெண்ணான ரேவதி கல்யாணத்தை தடுக்க எடுக்கும் முயற்சியில் தந்தைக்கு நெஞ்சுவலி வரவே ரேவதி கல்யாணத்திற்கு ஒத்துக் கொள்கிறார்.

மனம் விரும்பாதவனுடனான முதலிரவை அருவருப்பாக உணரும் மணப்பெண் “நான் தூங்கணும்” என பொய் சொல்கிறாள். மாப்பிள்ளையும் “அவ்வளவுதான, சரி தூங்கு.” என்று கூறி விடுகிறான்.

புதுப்பெண்ணுக்கு உரிய இயல்பான கூச்சம் என்றெண்ணி பொறுமை காக்கிறான் கணவன். ஆனால் கடைக்குக் கூட்டிப்போய் “உன்னை முதல் தடவை கடைக்கு கூட்டி வந்திருக்கிறேன். ஏதாவது கேள். நான் வாங்கித்தருகிறேன்” என கேட்கும் கணவனிடம், “எனக்கு உங்ககிட்ட இருந்து விவாகரத்து வேணும். அது இந்தக் கடையில கிடைக்குமா?” என்று கேட்கிறாள்.

அப்போதும் கணவனுக்கு கோபம் வரவில்லை. குழப்பம் வருகிறது. தன் மனைவிக்கு தன்னை பிடிக்கவில்லை என்று தெரிந்த பின்னும் அவளின் இதயத்தில் இடம்பிடிக்க முயற்சிக்கிறான்.

ஒரு கட்டத்தில் தன் மனதில் இருந்த முன்னாள் காதலனையும், அவன் விபத்தில் இறந்த சோகத்தையும் சொல்லி அழுகிறாள் மனைவி.

அப்போது அவள் விரும்பிக் கேட்ட விவாகரத்துப் பத்திரத்தையும், தான் விரும்பி வாங்கிவந்த கொலுசையும் அவளிடம் காண்பிக்க அவள் கொலுசை விடுத்து விவாகரத்து பத்திரத்தை தேர்வு செய்கிறாள். விவாகரத்து கிடைக்கும் வரை ஒரே வீட்டில் நண்பர்களாக இருவரும் தங்குகிறார்கள்.

அப்போதும் கணவனது புத்தி “அவளுக்கு உன்னைப் பிடிக்கவில்லை. அவளைத் தொந்தரவு செய்யாதே” என்று அறிவுரை கூறினாலும் இதயம் விட்டுவிட மறுக்கிறது. ஆனால் அவன் புத்தியின் வழியில்தான் செல்கிறான்.

மனைவியானவளோ, முதலில் அவனிடம் விவாகரத்துக் கேட்டவள் பிறகு போகப்போக தான் கேட்டது தவறு என்று உணர்கிறாள். ஆனாலும் பெண்மைக்கே உரிய நாணம் அவள் மனதில் உள்ள காதலை வெளிப்படுத்த தடைபோடுகிறது.

இறுதியில் மனைவியை விவாகரத்து செய்து வீட்டுக்கு அனுப்பிவிடும் போதும் கணவன் அமைதி காக்கிறான். ஏனெனில் அவனது வாயைப் பலமுறை மனைவி அடைத்திருக்கிறாள். கடைசியில் மனைவியே தனது காதலை வெளிப்படுத்துகிறாள். காதலர்கள் இணைந்து விட்டதை ரயில் தண்டவாளங்களைக் கொண்டு காட்சிப்படுத்தி படத்தை முடிக்கிறார் இயக்குனர்.

“பெண் ஆணை வார்த்தைகளால் தாக்கும்போது அது ஆணியைப் போல இறங்குகிறது. ஆனால் ஆண் பெண்ணை அதே வார்த்தையால் தாக்கும்போது அது கடப்பாறையை போல இறங்குகிறது” என்று சொன்னான் ஒரு கவிஞன்.

இந்த வார்த்தைகளின் பொருள் இப்படத்தில் பலமுறை காட்சியாகியுள்ளது. மனைவியின் பெற்றோர் வந்த சமயத்தில் கணவன் பேசும் வார்த்தைகள், அதன் பின்னரான உரையாடல், “நான் தொட்டா உனக்குதான் கம்பளிப் பூச்சி ஊறுகிற மாதிரி இருக்குமே”, “தாலி கட்டிட்டா மட்டும் போதுமா? அது வெறும் கயிறுனு நீதானே சொன்ன” என பல இடங்களில் அந்தக் கணவனது வார்த்தைகள் அவளைக் காயப்படுத்துகிறது. ஆனாலும் அவளால் அவனிடம் கோபப்படமுடியவில்லை. காரணம் அவள்தான்.

அடிபட்ட கணவனை மருத்துவமனையில் சேர்க்கும் சமயத்தில், இவள் பேசும் தமிழ் பஞ்சாப்காரனுக்கு புரியவில்லை. அவன் பேசுவது இவளுக்குப் புரியவில்லை. ஆனால் தாலியைக் காட்டியவுடன் அனைத்தும் புரிந்து விடுகிறது.

“எனக்கு உங்க்கிட்ட இருந்து விவாகரத்து கிடைக்குமா?” என்று கேட்டவளை கிடைத்த கொஞ்ச நாட்களிலேயே “அது என் புருஷன், ப்ளீஸ் காப்பாத்துங்க.” என்று அடுத்தவர் முன்னிலையில் கெஞ்ச வைத்துவிடுகிறான் அந்தக் கணவன். இல்லை அந்தக் காதலன்.

நான் கல்லூரியில் படித்த நாட்களில் “நீங்கள் பார்த்த சினிமாவின் எந்தக் கதாபாத்திரத்தை போன்ற கணவன் உங்களுக்கு வேண்டும்” என்ற ஒரு கேள்வியை எனக்குத் தெரிந்த தோழிகளிடம் கேட்டபோது இந்தக் கணவன்தான் பலரது தேர்வாக இருந்தான். உண்மையில் இந்தக் கேள்வி பெண்களின் மனதை ஓரளவு அறிந்து கொள்ள எனக்கு உதவியாக இருந்த்து.

இப்போது வாரம் ஒருமுறை வெளியாகும் குப்பைகளைப் பார்ப்பதற்கு பதிலாக இம்மாதிரி பழைய படங்களை வாங்கிப் பார்க்கலாம்.

3 கருத்துகள்:

  1. தெளிவான, அழகான விமர்சனம் இது. இப்பணியைத் தொடருங்கள். வாழ்த்துக்கள்!
    -இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து

    பதிலளிநீக்கு
  2. எனக்குப்பிடித்த மிகவும் அருமையான படம். அனைவரின் நடிப்பும் அசத்தலாகவே இருக்கும். எவ்வளவு முறை பார்த்தாலும் அலுக்காத படங்களின் இதுவும் ஒன்று. பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு