செவ்வாய், 24 ஜனவரி, 2017

என் நெஞ்சார்ந்த நன்றி

எனது நெஞ்சத்தை போராட்டகளமாக தேர்ந்தெடுத்த மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

எனது நெஞ்சத்தில் நடைபெற்ற அறப்போராட்டத்தில் பங்குபெற்ற ஐந்து மாதக்கைகுழந்தைக்கும் அவளுடைய தாய்க்கும் நன்றி.

கைகுழந்தைகளும், பெண்களும் கூட வருவார்களே என்று அவர்களுக்கு போர்வைகள் வாங்கிக் தந்த இயக்குனர் லாரன்ஸுக்கு நன்றி.

“நாங்கள் போலீஸ்காரர்கள் ஆனாலும் தமிழர்கள்தான்” என்று என்னை நோக்கி வந்து மாணவர்களோடு இணைந்திருந்த தமிழ் உணர்வுள்ள காவலர்களுக்கும் நன்றி.

பயத்தின் அடையாளமாக காவலர்களை பார்த்த இளைஞர்கள் கூட அவர்களுக்கு சாப்பாடும் தண்ணீரும் தந்ததற்கு நன்றி.

நாங்களும் இந்த நாட்டின் குடிமக்கள்தான் என்று போராட்டத்தில் அங்கங்கே இருந்த அரவாணிகளுக்கும் நன்றி.

மதத்தையும் சாதியையும் தூக்கி வீட்டில் போட்டுவிட்டு மாணவர்களுக்கு உணவளித்த இஸ்லாமிய சகோதரர்களுக்கும் நன்றி.

குளிர் தாங்காமல் மீனவர்களின் துடுப்புகளை எரித்து இளைஞர்கள் குளிர்காய்ந்த போதிலும், அதை தெரிந்தே அனுமதித்த மீனவர்களுக்கும் நன்றி.

ஏழு நாட்கள் இரவு பகல் பாராமல் நடந்தாலும் எந்த நிர்பயாக்களும் இங்கே உருவாகா விடாமல் கண்ணியம் காத்த எல்லா இளைஞர்களுக்கும் நன்றி.

போராட்டம் துவக்கமாக இருந்த சிம்பு, ஆதிக்கும் ஆதரவு அளித்த சமுத்திரக்கனி, லாரன்ஸ், மன்சூர், சேனாபதிக்கும் நன்றி.

“தமிழை அழிக்க நினைத்தாயோ” என்று அரசிடம் தனது பதக்கங்களையும், விருதுகளையும் திருப்பியளித்த சேலம் மாரியப்பன் மற்றும் பிற அனைவருக்கும் நன்றி.

இனி நான் உரக்க கூவுவேன், தமிழகத்தின் வீரம் செறிந்த இடம் கயத்தாறு தூக்குமேடை அல்ல, வேலூரின் கோட்டை அல்ல, வேலு நாச்சியார் பூமியல்ல, மருது சகோதரரின் மண்ணும் அல்ல, பூலித்தேவன் மண்ணும் அல்ல, அது சென்னை மெரினா என்று

எனது பூமியைப் பாருங்கள். இனமானம் காக்க கத்தியின்றி, ரத்தமின்றி பெண்களும், முதியவர்களும், குழந்தைகளும் செய்த யுத்தக்கதை கேளுங்கள். என் மண்ணெடுத்து நெற்றியில் பூசுங்கள். அதை அடுத்த பரம்பரைக்கு கூறுங்கள்.

அன்று ஒரு வாஞ்சிநாதன் செங்கோட்டையில் இருந்தான். ஒரு தீரன் சின்னமலை கோவையில் இருந்தான். இன்று எண்ணற்ற வாஞ்சிநாதன்கள், தீரன் சின்னமலைகள் சென்னை மெரினாவில் உருவாயினர்.

நான் நெஞ்சம் நிமிர்த்தி கூறுவேன். தொடையில் தட்டி கூவுவேன். “எனது மகன் முதுகிலே அம்பு பட்டு இறந்தால் அவனுக்கு தாய்ப்பால் கொடுத்த இந்த முலை அறுத்தெறிவேன்” என்ற புறநானூற்று தமிழ்த்தாயின் வீரம் இன்றும் இருக்கிறதடா. எனது உப்பின் வீரியம் வீண்போகவில்லையடா உலக மானிடமே என்று................

இப்படிக்கு

வங்காள விரிகுடா

1 கருத்து:

  1. உண்மைதான் நண்பரே
    புறநாநூற்றுத் தமிழ்த் தாயின் வீரம் இன்றும் உயிர்ப்போடுதான் இருக்கிறது

    பதிலளிநீக்கு