புதன், 4 ஜனவரி, 2017

அக்னி நட்சத்திரம்

மணிரத்னம் இயக்கத்தில் விஜயகுமார், பிரபு, கார்த்திக், அமலா, நிரோஷா மற்றும் பலர் நடித்த ஒரு சூப்பர் ஹிட் திரைப்படம் அக்னி நட்சத்திரம். பலதிருப்பங்கள் வைத்து மஹாபாரதம் போல சொல்ல முடியாத கதை என்றாலும் அதை மணிரத்னம் எடுத்திருக்கும் விதம்தான் அதன் சிறப்பு.
கே.ஆர்.விஸ்வநாத்திற்கு (விஜயகுமார்) இரண்டு மனைவியர். மூத்த மனைவியின் மகன் கௌதம் (பிரபு). இளைய மனைவிக்கு ஒரு மகன் அசோக் (கார்த்திக்) மற்றுமொரு தங்கை. இரண்டாவது மனைவியின் வீட்டிற்கு வரும் வேளையிலெல்லாம் விஸ்வநாத் நன்றாக குடிக்கிறார்.

இவர்கள்தான் குடிக்க அனுமதித்து அவரது உடலை கெடுத்து விடுகிறார்கள் என்று முதல் மனைவிக்கு கோபம். முதல் மனைவியும், விஸ்வநாத்தின் தாயாரும் இரண்டாம் மனைவியையும் அவளது பிள்ளைகளையும் மதிப்பதில்லை. அவர்களின்ன் வாசம் படுவதையே அருவறுப்பாக எண்ணுகின்றனர்.

கௌதம் படித்து உயர் போலிஸ் அதிகாரியாகிறான். அசோக் ஊருக்குள் வேலை தேடி அலைகிறான். ஆனால் இருவருமே ஒருவரையொருவர் முறைத்துக் கொண்டே திரிகிறார்கள்.

கடைசியில் சமுதாயத்தின் முக்கிய பிரமுகரான ஒரு சமூக விரோதியால் விஸ்வநாத்தின் உயிருக்கு ஆபத்து வர கௌதம், அசோக் இருவரும் இணைந்து அதை எப்படி தங்கள் வழியில் கையாளுகிறார்கள் என்பது உச்சகட்டம்.

படத்தின் கதையை விட கதாமாந்தரின் உணர்வுகளே கதையை நகர்த்துகிறது. இரு மனைவிகளுமே கணவன் மீது பேரன்பு கொண்டவர்கள்தான். விஸ்வநாத்தும் இரு குடும்பத்தையும் அவர்களது பிள்ளைகளையும் சமமாகப் பாவிப்பவரே. ஆனால் சமுதாயம் கொடுக்கும் அழுத்தத்தால் இளைய தலைமுறை கொம்பில் மண்ணை குத்திக்கொண்டு நிற்கிறது.

ஒரு மனிதன் தன்னை, தனது நலனை மட்டும் கருத்தில் கொண்டு இரண்டு மனைவியை தேடும் பொழுது அது எவ்வாறு குடும்பத்தில் உறவுச்சிக்கல்களையும் உணர்வுச் சிக்கல்களையும் கொண்டுவருகிறது என்பது அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

மணிரத்னம் மனிதர்களின் மன உணர்வுகளை மிக அழகாக படம் பிடித்துக் காட்டுபவர். உணர்வுகளை வெளிப்படுத்த நடிப்பும், முகபாவனையுமே முக்கியம். அங்கே வார்த்தைகள் சக்தியற்றவை. ஆகையால் தானோ என்னவோ மணிரத்னம் படங்களின் கதாபாத்திரங்கள் நீளமாக பேசமாட்டார்கள்.

சோதனைக்காக கேட்கப்படும் மேலதிகாரியின் கேள்விகள், காதலியின் வெகுளித்தனமான கிண்டல் தொனிக்கும் சீண்டல்கள், காதலிக்கும் அப்பா, “உங்கப்பாவை மாதிரி நீயும் இரண்டாவதாக ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு என்ன நிச்சயம்?” என்று கேட்கும் கேள்விகள் என்று ஒருபுறம் சமுதாயத்தால் கௌதம் மனது ரணமாகிறது.

தனது தாயை தவறானவளாக முதல் மனைவி வீட்டார் கருதுவதாலும், வேலைக்கு இண்டர்வியூ போன இடத்தில் கூட தனது குடும்பம் வேறு கண்ணோட்டத்தில் பேசப்படுவதை பொறுக்காமலும் மறுபுறம் அசோக் மனது ரணமாகிறது.

படத்தின் முதலிலிருந்து முக்கால்வாசி வரை இவர்கள் குடும்பம் எப்படி ஒன்றிணையப் போகிறது? என்று பார்வையாளனை எண்ண வைத்து கடைசியில் அசோக்கின் தங்கையைக் கொண்டு கௌதமை “அண்ணா” என்றழைக்கும் இடத்தில் பார்வையாளனுக்கு நம்பிக்கை தருகிறார் கதைசொல்லி.

இரண்டாவது மனைவியின் மகனான அசோக்கின் காதலியின் (நிரோஷா) அம்மாவுக்கு இரண்டு கல்யாணம். அவள் ஓரிடத்தில், “என் கஷ்டம் உனக்கும் உண்டுன்னு ஏன் நீ எனக்கு சொல்லல? உனக்கு என்னைப் பிடிக்கலையா? எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு.” என்று கூறிச்செல்கிறாள்.
சமுதாயம் எப்போதும் பெரும்பான்மையை மையமாக வைத்து இயங்குகிறது. அதில் சிறுபான்மை கஷ்டப்படுகிறது. அது சாதிவாரிச் சிறுபான்மையாக இருந்தாலும் சரி, கொள்கை அளவிலான சிறுபான்மையாக இருந்தாலும் சரி. எல்லாம் ஒன்றுதான்.

ஒருவனுக்கு ஒருத்தி என்று பெரும்பான்மையினர் வாழும் சமூகத்தில் சமுதாய முறைமையிலிருந்து விலகிச்செல்லும் ஒருவனை, அவனது குடும்பத்தை எப்படியெல்லாம் இந்தச் சமுதாயம் கஷ்டப்படுத்துகிறது என்பது படத்தில் தெளிவாகத் தெரிகிறது. கௌதம், அசோக் என்ற இருவரது கஷ்டங்களுமே சமுதாயத்திலிருந்து உருவானவையே. பணக்கஷ்டமோ, இருப்பிடத்திற்கு கஷ்டமோ அங்கே உருவாகவில்லை.

ஆனால் சமுதாயத்தால் வரும் கஷ்டங்கள் அனைத்தையும் தனி மனிதர்கள் முயற்சி செய்யும் போது அழிந்துவிடக்கூடையவை. சமுதாயம் என்னதான் முயன்றாலும் பாசத்தையும் நேசத்தையும் அழித்துவிட முடியாது என்பதையும் படம் கூறுகிறது.

விஸ்வநாத் மருத்துவனையில் சிகிச்சைபெறும் போது, “கோயிலுக்கு போய்ட்டு வந்தேன். இந்தக் குங்குமத்தை அப்பாவுக்கு வச்சு விடுவீங்களா?” என்று கேட்கும் போது இரண்டாம் மனைவியின் பிள்ளைகளும் தனது கணவனைக் காப்பதற்காகவே உள்ளனர் என்பதை முதல் மனைவி புரிந்து கொண்டு, “நீயே வந்து வச்சு விடுமா” என்கிறாள். படத்தில் இந்த இடம் ஒரு கவிதை. இது போலவே மற்றவர் உணர்வுகளை மதிக்கும் குணமும், அவர்களின் வார்த்தைகளை காதுகொடுத்துக் கேட்கும் பக்குவமும் இருந்தால் குடும்பங்களில் குழப்பமேது?

படத்தில் மற்றுமொரு கவிதையான காட்சி. அசோக் கீழ்படிக்கட்டில் உட்கார்ந்திருக்க, கௌதம் மேலிருந்து கீழே இறங்கும்போது மேல்படிக்கட்டில் இருந்து தங்கை “அண்ணா” என்று கூப்பிட்டதும் இருவருமே திரும்பிப் பார்க்கிறார்கள். அவள் யாரைக்கூப்பிட்டாள்? என்று பார்வையாளனுக்கே புரிவதில்லை. இங்கே இயக்குனர் தனது படைப்பின் வழியாக பார்வையாளனை தோற்கடித்துவிடுகிறார்.

பொதுவாகத் தமிழ்படங்களில் எதிர்மறையாக இயங்கும் கதாபாத்திரம் சாகடிக்கப்படும் அல்லது அது தனது சுயத்தன்மையை, வீரியத்தை இழந்து நல்லவனாக மாறி பத்துபக்கத்திற்கு வசனம் பேசும். ஆனால் இப்படத்தில் போலீஸாக வரும் கௌதம், ரவுடியைப்போல வரும் அசோக் இருவருமே தனது சுயத்தன்மையும், வீரியமும் கொஞ்சமும் குறையாமல் கடைசிவரை அப்படியே இருக்கிறார்கள்.

தனது தந்தையை கொலை செய்ய முயன்றவனை கௌதம் போலிஸாகச் சென்று எச்சரிக்கிறார். அசோக் ரவுடியாகவே மாறி எச்சரிக்கிறார். தந்தையை காப்பாற்றும் வேளையில் கௌதம் மருந்துப் பாட்டிலை எடுக்க ஓடுகிறார். அசோக் எதிரிகளை நோக்கி சுடுகிறார். இருவருமே தனது தனித்தன்மையை கொஞ்சமும் இழக்கவில்லை.

பிறமொழிகளில் பல்வேறு விருதுகளைப் பெறும் படங்களில் பொதுவான ஒரு அம்சம் இருக்கும். திரைக்கதை ஒருபோதும் மையக்கதையை விட்டு விலகிச்செல்லாது. ஆனால் மணிரத்னம் கூட இந்தப்படத்தில் கதையோடு ஒட்டாத ஜனகராஜ், வி.கே.ராமசாமி வரும் நகைச்சுவை காட்சிகளை வலிந்து திணித்திருக்கிறார்.

அது இந்தப்படத்தின் குறை என்று சொல்லலாம். அதுவும் பார்வையாளனால் உருவாகின்ற குறை அது. படத்தின் காட்சிகளுக்கு இடையில் கவுண்டமணி, செந்தில் நகைச்சுவையை பார்த்து பழகிய அன்றைய ரசிகனை திருப்திப் படுத்துவதற்காக அவர் அதை இணைத்திருக்கலாம்.

ஆண்டுகள் பல ஆனாலும் இன்னும் இளமையாகவே இருக்கும் படம். இன்றைய தலைமுறை அவசியம் பார்க்கவேண்டிய படம்.

7 கருத்துகள்:

 1. என்ன இது, பழைய படங்களுக்கு இப்போது விமர்சனம் எழுதுகிறாரே என்று திகைத்தேன். நல்ல படம் தான். அக்னி நட்சத்திரம். எனக்கு மிகவும் பிடித்த படம். அந்த 'நின்னுக்கோரி' பாடல் காட்சி இளமையின் தெறிப்பு. இன்று வெளிவரும் குப்பையான படங்களைப் பார்க்கிலும் இம்மாதிரி பழைய படங்களை மீண்டும் பார்க்குமாறு இலைகன்ர்களைத் தூண்டுவதும் ஒரு சமுதாய சேவையே. வாழ்த்துக்கள். - இராய செல்லப்பா நியுஜெர்சியில் இருந்து.

  பதிலளிநீக்கு
 2. இளைஞர்களை.. என்பது ...'இலைகன்ர்களைத்' என்று வந்துவிட்டது....!

  பதிலளிநீக்கு
 3. நல்லதொரு படத்தைப் பற்றிய விமர்சனம் நன்று...

  நன்றி... தொடர வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 4. படம் பார்க்கவி்லை...கே டீவியில் வந்தால் பார்க்கலாம்...

  பதிலளிநீக்கு
 5. நல்ல படம். 1987 இல் திருச்சி கலையரங்கத்தில் முதல் நாள் முதல் காட்சி பார்த்தேன்.
  இளையராஜா இசை படத்தின் வெற்றிக்கு பக்கபலம்.

  பதிலளிநீக்கு