சனி, 24 டிசம்பர், 2016

தங்கல்

ஆமீர்கான் நடிப்பில் தமிழ், இந்தியில் வெளிவந்துள்ள ஒரு சுயசரிதை படம் “தங்கல் (யுத்தம்)”. ஆமீர்கான் படம் என்றாலே பொதுவாக மிக வலுவான கதை இருக்கும். அப்படித்தான் இதுவும்.

கதை: தேசிய அளவிலான மல்யுத்த வீரர் மகாவீர் சிங்கால் சர்வதேச போட்டிகளுக்கு செல்ல முடியவில்லை. அவருக்கு இந்திய விளையாட்டு வாரியமும் உதவி செய்யவில்லை. தனது தேசத்திற்கு தங்கப் பதக்கம் வாங்கித்தர வேண்டும் என்ற கனவு இதனால் உடைந்து போகிறது.

தான் வாங்காத பதக்கத்தை தனது மகன் வாங்க வேண்டும் என்று எண்ணுகிறார். ஆனால் கடவுள் அவருக்கு வரிசையாக நான்கு பெண் குழந்தைகளை மட்டுமே பரிசளிக்கிறார். சரி இருக்கட்டும், என்று தனது கனவை இரும்புப் பெட்டிக்குள் மூட்டை கட்டி வைத்து விடுகிறார்.

ஒரு நாள் தங்களை திட்டியதற்காக பக்கத்து வீட்டிலுள்ள இரண்டு பையன்களை இவரது மூத்த பெண்கள் (கீதா, பபிதா) இருவரும் அடித்து நொறுக்கி விடுகிறார்கள். இதைக் கண்ட மகாவீர் சிங், மல்யுத்தம் இவர்கள் ரத்ததிலேயே ஊறி இருக்கிறது என்று எண்ணி அவரக்ளுக்கு மல்யுத்தம் பயிற்றுவிக்கிறார்.

இதை வெறுக்கும் அந்த பெண்கள் இருவரும் இவரிடமிருந்து எப்படியாவது தப்பிக்க பலவாறு முயற்சி செய்கிறார்கள். எதுவும் பலனளிப்பதில்லை. வேறு விசயங்களில் கவனம் சென்றால் மல்யுத்தம் பயில முடியாது என்று அவர்களின் முடியைக் கூட கத்தரித்து விடுகிறார். இந்தச் செயலால் அப்பாவின் செயல்களை மட்டும் வெறுத்த பெண்கள் அதன் பின்னர் அப்பாவையே வெறுக்கிறார்கள்.

இதற்கிடையில் நண்பியின் வீட்டு சுபநிகழ்ச்சியில் சென்று நடனமாடிக் கொண்டு இருக்கும்போது அதையறிந்து அங்கு வந்த அப்பா அங்கேயே தனது கோபத்தை வெளிப்படுத்துகிறார். ஆனால் அந்த நண்பி கூறிய அறிவுரையின் பேரில் இவர்கள் இருவரும் தனது தந்தையின் அக்கறையை புரிந்து கொள்கின்றனர். தந்தையுடன் ஒத்துழைக்கின்றனர்.

பின்பு பயிற்சி போதவில்லை என்று கூறி தனது அண்ணன் மகனுடன் பயிற்றுவிக்கிறார். வேறு சில ஆண் போட்டியாளர்களுடனும் பயிற்றுவிக்கிறார். ஒரு வழியாக கீதா தேசிய அளவிலான சாம்பியன் ஆகிவிடுகிறார். மேலும் பயிற்சிக்காக தேசிய விளையாட்டு பயிற்சிப்பள்ளிக்க்கு சென்று விடுகிறார்.

அங்கே கீதாவின் பயிற்சியாளர் சொல்லித்தரும் வேறு சில முறைகளால் கீதாவின் திறமை குறைகிறது. உடன் சேர்ந்த நண்பியால் அவளுடைய போக்கும் மாறிவிடுகிறது. இடையில் வீட்டுக்கு வரும்போது இதை அப்பா கண்டிக்கிறார். ஆனால் அவள் கேட்பதில்லை.

அதன் பின்னர் சர்வதேச அளவிலான போட்டிகளில் தொடர்ந்து கீதா தோற்கிறார். தேசிய அளவிலான போட்டிகளில் தொடர்ந்து பபிதா ஜெயிக்கிறார். தேசிய பயிற்சிபள்ளிக்கும் வருகிறார். கடைசியில் கீதா இனி சர்வதேச அளவிலான போட்டிகளில் விளையாடுவது சங்கடம் என்ற நிலையில் பபிதா “உன் மேல எந்த தப்பும் இல்லை, நீ பயன்படுத்துற டெக்னிக்ஸ் தான் தப்பு” என்று அறிவுரை கூறி மீண்டும் தனது தந்தையுடன் கீதாவை பேச வைக்கிறார். மகாவீர் சிங் மீண்டும் தனது மகளுக்கு குருவாகிறார். பின் அவருடைய வழிகாட்டுதலின் பேரில் கீதா காமென்வெல்த் போட்டியில் விளையாடி இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் வாங்கித்தருகிறார். இந்தியாவின் தேசிய கீதம் அரங்கத்தில் இசைக்கப்படுகிறது. அதைக்கேட்டு வெற்றி கீதாவின் பயிற்சியாளர் செய்த சூழ்ச்சியால் அறையினுள் அடைபட்டுக் கிடக்கும் மகாவீர் சிங் பூரிப்பு அடைவதுடன் படம் முடிவடைகிறது.

ஹரியானா மாநிலத்தின் மகாவீர் சிங் என்ற மல்யுத்த வீர்ர் தனது இரு மகள்கள் கீதா, பபிதாவை எவ்வாறு சர்வதேச வீர்ராக உயர்த்தினார் என்ற கதையை மிகச்சிறந்த சினிமாவாக ஆக்கி இருக்கிறார் இயக்குனர். “ஒரு விளையாட்டு வீரன் தனது நாட்டுக்காக பதக்கம் வாங்கித்தர வேண்டும் என்று நினைக்கிறான், ஆனால் அந்த நாடு அவனுக்காக எதுவுமே செய்யவில்லை என்றால் அவன் என்ன செய்வான்?”, “நம்ம பொண்ணுங்க பசங்கள விட கம்மினு நெனைச்சியா?”, “நீ நாளைக்கு செய்ய வேண்டிய மல்யுத்தம் நம்ம நாட்டு பொண்ணுங்களுக்காக, அவங்களோட வளர்ச்சிக்காக” என்று வசனங்கள் அனைத்தும் அருமை.

முதலில் ஒரு உள்ளூர் போட்டியில் ஒரு ஆணுடன் போட்டியிட்டு தோல்வி அடையும் கீதா ரூபாய் ஐம்பது பரிசாக பெறுகிறார். ஆனால் வெற்றி பெற்ற அந்த ஆண் ரூபாய் இருபது மட்டுமே பரிசாகப் பெறுகிறான். இங்கே வெற்றி எங்கே என்று தெளிவாக காட்டப்படுகிறது.

தான் தோல்வி அடைந்தோம் என்று எண்ணும் கீதாவால் அன்று இரவு சரியாகத் தூங்க முடியவில்லை. அன்று அவளுடைய கவனம் மல்யுத்தத்தில் இருக்கிறது. ஆனால் பின்னாளில் ஒர் சர்வதேசப் போட்டியில் தோல்வி அடைந்தும் எந்த வருத்தமும் இல்லாமல் இருக்கும் கீதாவைப் பார்க்கும் பபிதா அவளைக் கண்டிக்கிறாள். அப்போது கீதாவின் கவனம் மல்யுத்தத்தைவிட மேக்கப் செய்வதில் அதிகம் இருக்கிறது. அது அவளுக்குத் தோல்வியை மட்டுமே பெற்றுத்தருகிறது.

படத்தின் சில இடங்கள் தமிழில் வந்த “இறுதிச்சுற்று” படம் போல இருக்கிறது. ஆனால் அந்தப்படத்தை போல இதிலே விளையாட்டு அரசியல் அதிகமாக இல்லை. அப்பாவாகவும், கண்டிப்பான குருவாகவும் ஆமீர்கானின் நடிப்பு அருமை.

கவனம் சிதறக்கூடாது என்பதற்காக முதலில் கீதா, பபிதா இருவரின் முடியை இவர் வெட்டி விடுகிறார். இடையில் தோழியால் முடி வளர்த்து பாதை மாறிய கீதா தொடர்ந்து தோல்விகளையே பெறுகிறார். கடைசியில் நிதர்சனத்தை புரிந்து கொண்டு அவரே தனது முடியை கத்தரிக்கிறார். முடிக்கும் வெற்றிக்கும் சம்பந்தமில்லை. ஆனால் ஒன்றை கற்க வேண்டுமானால் ஒரு சீடனுடைய மனம் அழகிலும், ஆடம்பரத்திலும் கவனம் செலுத்தக்கூடாது என்பதை படம் மிகத்துல்லியமாக எடுத்துக் கூறுகிறது.

கால் இறுதியிலும், அரை இறுதியிலும் தனக்கு வழிகாட்டிய அப்பா இறுதிப்போட்டியில் தன்னுடன் இல்லையே என்று எண்ணும் கீதாவுக்கு “ஒவ்வொரு கட்டத்திலும் உன்னைக் காப்பாற்ற உங்கப்பன் வரமாட்டான், நீயே தான் உன்னைக் காப்பாற்றிக்கணும்” என்று அப்பா கூறிய அறிவுரைகள் நினைவுக்கு வரும் காட்சியும் மிக நன்று.

படத்தில் காமெடி, சண்டைக்காட்சிகள், பாடல்கள் போன்ற மசாலா அம்சங்கள் எதுவும் இல்லை. ஆனால் படம் சிறப்பாக இருக்கிறது. படத்தின் இறுதியில் மகாவீர் சிங்கின் பற்றியும், கீதா, பபிதா வென்ற போட்டிகள் குறித்தும் சொல்லி இருக்கிறார்கள். கண்டிப்பாக தவற விடகூடாத படம். முடிந்தால் பல முறையும் பாருங்கள்.

5 கருத்துகள்:

 1. உண்மையிலேயே தவற விடக்கூடாத படம்தான்
  அவசியம் பார்ப்பேன்
  நன்றி

  பதிலளிநீக்கு
 2. இணைந்து கொண்டேன்
  அருமையாக விமர்சனம் செய்கிறீர்கள்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. பார்த்துவிட்டோம்! அருமையான படம். உங்கள் விமர்சனமும் அப்படியே!

  பதிலளிநீக்கு
 4. தங்கள் பதிவை படித்ததிலே படம் பார்த்துவிட்ட திருப்தி ஏற்பட்டுவிட்டது.

  பதிலளிநீக்கு