சனி, 12 நவம்பர், 2016

அச்சம் என்பது மடமையடா

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா நடித்து வெளிவந்துள்ள ஒரு காதல், அடிதடி கலந்த படம் அச்சம் என்பது மடமையடா. வலுவற்ற கதையாக இருந்தாலும் திரைக்கதை, காதல் காட்சிகள், பாடல்கள், இசை மூலம் சிறந்த படமாக உருவாகி இருக்கிறது.

படித்து முடித்துவிட்டு வெட்டியாக ஊரைச் சுற்றும் இளைஞன் சிம்பு தனது வீட்டிற்கு வந்த தங்கையின் தோழி (மஞ்சிமா) மீது காதல் கொள்கிறார். குறிப்பிட்ட வேலைக்காக சிம்புவின் வீட்டிற்கு வந்திருக்கும் மஞ்சிமா பைக்கிலேயே ஊரைச் சுற்றுவதற்காக கிளம்பும் சிம்புவோடு யாருக்கும் தெரியாமல் சேர்ந்து கொள்கிறார். ஜோடியாக இருவரும் கன்னியாகுமரி, திருவனந்தபுரம் என்று ஊர் சுற்றுகிறார்கள். அப்போது லாரி ஒன்று இவர்களை மோதி விடுகிறது. சிம்புவிற்கு அடிபட்ட நிலையில் மஞ்சிமா அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டு காணாமல் போய்விடுகிறார்.

விசயம் தெரிந்து பார்க்க வந்த சிம்புவின் நண்பனுடன் சிம்பு மஞ்சிமாவைத் தேடுகிறார். பிறகு ஆஸ்பத்திரிக்கே போன் செய்து, “நான் உன்னுடன் இருக்க முடியாமல் போனதுக்கு மன்னிப்பு கேட்கிறேன். இங்கே என்னுடைய அப்பாவை யாரோ வெட்டி போட்டு விட்டார்கள். ஆஸ்பத்திரியில் இருக்கிறோம்.” என்று கூறுகிறார் மஞ்சிமா.

உடனே சிம்புவும் அவரது நண்பனும் மஞ்சிமாவை சந்திக்க அவரது வீட்டுக்கு போகிறார்கள். இதற்கு பிறகு மாற்றி மாற்றி யார் யாரோ மஞ்சிமா குடும்பத்தை கொலை செய்ய முயற்சிக்கிறார்கள். லோக்கல் போலிஸ்காரன் உதவியோடு மஞ்சிமாவின் அப்பாவையும் அம்மாவையும் கொலையும் செய்து விடுகிறார்கள். சாதாரண மனிதனாக வாழும் மஞ்சிமாவின் அப்பாவை யார் கொலை செய்தார்கள்? ஏன் இவ்வாறு நடக்கிறது? என்று அறிய முயற்சிக்கிறார் சிம்பு. பிறகு சிம்பு, மஞ்சிமா கொலைகாரர்களிடமிருந்து தப்புவதும், எதிரிகளை சமாளிப்பதும் இறுதிக்காட்சிகள்.

பாடல்கள், இசை, திரைக்கதை படத்திற்கு பலம் சேர்க்கும் அம்சங்கள். ஆனால் கதை அத்தனை வலுவானதாகத் தெரியவில்லை. அத்தனை களேபரங்கள் நடந்தாலும் “என் மகன் குற்றமற்றவன்” என்று உறுதியாக நம்பி நாயகனுடன் நிற்கும் தந்தை ஒரு சிறந்த தந்தைக்கு உதாரணம். காமெடி எதுவுமே இல்லையென்றாலும் போரடிக்காமல் போகிறது படம்.

சாதாரணமாக நமது வீட்டிற்கு வரும் நமது தங்கையின் தோழிகள் நம்மை அண்ணா என்றுதான் கூப்பிடுவார்கள். ஆனால் இந்த சினிமாவில் மட்டும் தான் தங்கையின் தோழி இரண்டு நாளில் ஐ லவ் யூ சொல்லிவிடுகிறாள். இது கொஞ்சம் மிகைப்படுத்துதல். கதாநாயகி எப்படி பிழைத்தாள் என்பது பற்றிய விளக்கம் இல்லை.

இந்தப் படத்தில் ஒரு வித்தியாசமான அம்சம், போலிஸ்காரர்களால் அதிகம் பாதிக்கப்படும் ஒரு மனிதன் பொதுவாக சமூக விரோதியாகி விடுவதாகவே பெரும்பாலான படங்களில் காட்டியிருப்பார்கள். ஆனால் இந்த நாயகன் தவறு செய்யும் போலிஸ்காரர்களைத் தண்டிக்க ஐ.பி.எஸ்  எழுதி பாஸாகி அவரது உயரதிகாரியாக மாறிவிடுகிறான். இந்த மாதிரி பொறுமை கொண்ட நாயகர்களை, தனக்கு இழைக்கப்படும் கொடுமைக்காக பழிவாங்காமல் அதை நேர்மறையாக எடுத்துக் கொண்டு வாழ்வில் முன்னேறும் நாயகர்களை ஒரு சில இயக்குனர்களே படைக்கிறார்கள்.

சமூகத்தில் நடக்கும் தவறுகளைக் கண்டு அச்சப்படாதே, அதே நேரம் பொறுமையைக் கைக்கொள், நிதானமாக நடந்துகொள், நேர்மறையாக சிந்தனை செய். இல்லையெனில் உனது அவசரமும், கோபமுமே உனது எதிரிக்கு, அந்த சமூக விரோதிக்கு சாதகமாகிவிடும் என்று தனது தலைப்பிலேயே சொல்கிறது படம். 

3 கருத்துகள்:

  1. நல்லதொரு விமர்சனம். அது சரி.,அது என்ன.. தங்கையின் சகோதரி ???!!!!!! தங்கையின் தோழி அல்லவா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாற்றிவிட்டேன். தவறை எடுத்துக் கூறியதற்கு நன்றி.

      நீக்கு