புதன், 9 நவம்பர், 2016

சாரமற்றுப் போன தமிழ் சினிமா

தமிழ் சினிமா தன்னுடைய சாரத்தை படிப்படியாக இழந்து வருகிறது. அதற்கு ஒரு உதாரணம், இப்போது பல சினிமா படங்கள் கதையே இல்லாமல்தான் எடுக்கப்படுகின்றன.

நாடகங்களைப் போல சினிமா ஒரு கதை சொல்லும் ஊடகம். கதையைத் தவிர்த்து சினிமாவில் உள்ள அம்சங்களான இசை, நகைச்சுவை, நடிப்பு, திரைக்கதை, பாடல்கள், வசனம் என்ற அனைத்துமே அதற்கு அழகு சேர்ப்பவை.

ஆனால் கதையைப் பற்றி கொஞ்சமும் அக்கறை காட்டாமல் மற்ற இத்யாதி அம்சங்களை மட்டுமே வைத்து ஒரு சினிமா எடுத்தால் அது பிணத்தின் மீது பூசப்பட்ட வாசனைத் திரவியமாகத்தான் இருக்கும். இதைப் பற்றியெல்லாம் படைப்பாளிகளும் கவலைப்படுவதாக தெரியவில்லை. பார்வையாளனுக்கும் அதைக் கவனிக்க நேரமில்லை. ஆகையால்தான் இந்தப் படங்களும் ஓடுகின்றன.

தமிழ் சினிமாவில் எழுத்தாளர்களுக்கு பஞ்சம் என்று ஒரு கருத்து உண்டு. ஏனெனில் கதையை ஒரு திறமை வாய்ந்த கதைசொல்லியிடமிருந்து வாங்கி அதை படமாக எடுக்க இயக்குனருடைய அகங்காரம் அனுமதி அளிப்பதில்லை.

படம் இயக்க பயிற்சி பெற்றவனுக்கு கதை எழுதும் திறமை இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. “நானே எழுதுவேன். நானே இயக்குவேன்” என்ற திமிர்த்தனம்தான் தனக்கு எந்தக் கதையும் தோணாத பட்சத்தில் பிறமொழிப்படங்களை காப்பி அடிக்க வைக்கிறது.

“வசனத்தை ஒடித்து நாலு வரியாக எழுதி, அதை கவிதை கூறுபவன் கற்பனை கைகூடாத கவிஞன்” என்று கண்ணதாசன் சொன்னது போல, பேச்சு வழக்கு சொற்றொடர்களை குப்பையாக் சேர்த்து எழுதி அதை பாடல் என்று கூறுவதைத்தான் இன்றைய சினிமா கவிஞன் செய்து கொண்டிருக்கிறான்.

இசையமைப்பாளர்களும், “சினிமாவைக் கெடுப்பதில் நாங்களும் சளைத்தவரல்லர்” என்று காட்டுகிறார்கள். நவீன கருவிகள் கொண்டு இன்று போடப்படும் இரைச்சல் குப்பை பாடல்வரிகளில் இடையே இருக்கும் நல்ல வரிகள் கூட காதுகளில் விழாமல் பார்த்துக் கொள்கின்றன.

கலை படைப்பாளியின் கைகளில் இருக்க வேண்டும். ஆனால் அது இன்று வியாபாரிகளின் கைகளில் இருக்கிறது. சீரழிவுக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.

திறமையான கதாசிரியர்கள், பாடலாசிரியர்கள், வசன கர்த்தாக்கள், திரைக்கதை எழுத்தாளர்கள், இசையமைப்பாளர்கள், இங்கு போதுமான அளவில் இல்லை. இந்த நிலை நீடிக்குமானால் தமிழ் சினிமாவின் தரம் மேலும் மேலும் குறைந்து போகும். வெளிவரும் படங்களும் குப்பைகளாகவே வெளிவரும்.

எங்கேயோ எப்போதோ படித்த ஞாபகம். ஒரு எழுத்தாளரை சினிமாவுக்கு பாடல் எழுதி தரவேண்டும் என்று ஒரு இயக்குனர் அணுகினாராம். உடனே அந்த எழுத்தாளர், “அம்மி கொத்துவதற்கு சிற்பி எதற்கு?” என்று திருப்பி கேள்வி கேட்டாராம்.

எத்தனை அர்த்தமுள்ள கேள்வி...

அப்படி அம்மி மட்டுமே கொத்த தெரிந்தவர்கள் தான் இன்றைக்கு சிற்பம் வடிக்கிறேன் என்ற பெயரில் சினிமா படைப்பாளியாக தமிழ் சினிமாவில் பெருகி வருகிறார்கள்.

6 கருத்துகள்:

 1. இப்படிப் பட்டவர்கள் விரைவில் காணாமல் போய் விடுகிறார்கள்...

  பதிலளிநீக்கு
 2. அப்படி அம்மி மட்டுமே கொத்த தெரிந்தவர்கள் தான் இன்றைக்கு சிற்பம் வடிக்கிறேன் என்ற பெயரில் சினிமா படைப்பாளியாக தமிழ் சினிமாவில் பெருகி வருகிறார்கள். ---> neenga nalla cinema ve paathathillai pola... Ammani nnu oru padam vanthurukku poi paarunga, This is a very demotivating post Sir!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் கருத்து உண்மைதான் V. அப்படி நல்ல படங்களும் வருகின்றன. நான் குப்பை படங்கள் எடுப்பவர்கள் பெருகி வருகிறார்கள் என்றுதான் கூறினேன். எல்லாருமே குப்பை படம் எடுக்கிறார்கள் என்று கூறவில்லை. பதிவிற்கு வந்து மாற்றுக்கருத்தை துணிந்து கூறியதற்கு நன்றி.

   நீக்கு