வெள்ளி, 7 அக்டோபர், 2016

தேவி

பிரபுதேவா, தமன்னா, சோனு, முரளி ஷர்மா நடித்த ஒரு காமெடி கலந்த பேய் படம் தேவி. கோயம்புத்தூரிலிருந்து மும்பைக்கு சென்று வேலை செய்யும் இளைஞரான பிரபுதேவாவிற்கு ஒரு மாடர்ன் பெண்ணை கல்யாணம் செய்ய வேண்டும் என்பது ஆசை. ஆனால் எதிர்பாராத விதமாக அவரது பாட்டியின் கட்டாயத்தால் ஒரு மாடு மேய்க்கும் பெண்ணுடன் கல்யாணம் ஆகிவிடுகிறது.
மாடு மேய்க்கும் பெண்ணான தேவியுடன் பிரபுதேவா மும்பைக்கு வந்து ஒரு வீட்டில் குடியிருக்கிறார். அங்கே நடிகையாக வேண்டும் என்று எண்ணி அற்ப ஆயுளில் மாண்டுபோன ரூபி என்ற பேய் தேவியின் உடலில் புகுந்துவிடுகிறது.

பகலில் தேவியாகவும், இரவில் ரூபியாகவும் இரண்டு மனுஷியாக இருக்கிறார் தேவியான தமன்னா. இதற்கிடையில் நடிகையாக இருக்கும் போது அவருடைய சக நடிகர் பேயான ரூபியைக் காதலிக்கிறார்.

பேயை எவ்வாறு தேவியிடமிருந்து விரட்டுவது, ஒருவேளை விரட்டிவிட்டாலும் அவளை ரூபி என்று எண்ணி பின் தொடரும் அந்த நடிகரிடமிருந்து எப்படி தேவியைக் காப்பாற்றுவது என்பதை மீதிக்கதையில் பிரபுதேவாவின் திண்டாட்டத்தோடு சொல்லியிருக்கிறார்கள்.

தேவி, ரூபியாக தமன்னாவும், கிருஷ்ணாவாக பிரபுதேவாவும் குறைவில்லாமல் நடித்திருக்கிறார்கள். ஃபார்முலாவான பழிவாங்குகிற பேய், லாரன்ஸ் காட்டிய காமெடி பேய், மிஷ்கின் காட்டிய நல்ல பேய் என்ற வரிசையில் நிராசையுடன் இறந்து போன பேயைக் காட்டியிருக்கிறார்கள். இந்தப் பேய் யாரையும் தேவையில்லாமல் பயமுறுத்தவில்லை. பிரபுதேவாவை மட்டும் ரெண்டு காட்டு காட்டுகிறது.

நான் இப்படி இப்படி நடந்துகொள்வேன், நீ இப்படி இப்படி இருந்து கொள்ள வேண்டும் என்று பேய் டீல் பேசும் விதமும், அதற்கு பதிலடியாக அதனிடமே முத்திரைத்தாளில் கையெழுத்து வாங்கும் விதமும் சூப்பர். பிரபுதேவா, நான் ஒரு டான்ஸ் மாஸ்டர் என்று முதல் பாடலிலேயே காட்டியிருக்கிறார். உருண்டு பிரண்டு கூட டான்ஸ் ஆடுகிறார்.

பாடல்களில் ஒரு வரியும் பிடிபடக் கூடாது என்று இசையை போட்டுத்தாக்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு காட்சியையும் சுவராசியமாக குறையாமல் கோர்த்திருக்கும் திரைக்கதை நன்று. தேவி கதை, திரைக்கதையுடன் கூடிய ஒரு ஜாலியான பொழுதுபோக்குப் படம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக