செவ்வாய், 1 நவம்பர், 2016

ரத்தக்கண்ணீர்

நடிகவேள் எம்.ஆர்.ராதா நடித்து, கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த ஒரு திரைக்காவியம் ரத்தக்கண்ணீர். இந்தத் தலைமுறையினர் பெரும்பான்மையோருக்குத் தெரியாத திரைப்படம்.
வெளிநாட்டில் படித்துவிட்டு திரும்பிய பணக்கார வீட்டுப்பிள்ளை மோகன், இந்தியச்சூழலை வெறுக்கிறான். கலை என்ற பெயரில் விபச்சாரம் செய்யும் காந்தா என்ற ஆட்டக்காரியை நேசிக்கிறான். திருமணம் செய்து வைத்தால் திருந்திவிடுவான் என்று எண்ணி அவனது தாயார் திருமணம் செய்து வைக்கிறார். அப்போதும் திருந்தவில்லை. மனைவி சந்திரா, நண்பன் பாலு இவர்களின் பேச்சை சிறிதும் கேட்பதில்லை. தான் செய்வதே சரியென்று ஒற்றைக்காலில் தாண்டவமாடுகிறான்.

கடைசியில் சொத்துக்களையெல்லாம் இழந்து, குணப்படுத்த முடியாத வியாதியையும் பரிசாகப் பெற்றுக் கொண்டு காந்தா வீட்டை விட்டுத் துரத்தப்படுகிறான். மின்னலில் கண்களையும் இழந்து பிச்சைக்காரனாகிறான். ஒருபுறம் இவனை மனைவியும், நண்பனும் தேடிக்கொண்டிருக்கின்றனர். மறுபுறம் அவனை துரத்திவிட்ட காந்தாவோ இப்போது வேறு ஒரு சீமானைப் பிடித்துக் கொள்கிறாள்.

பிச்சைக்காரனான மோகன், யதேச்சையாக யாரென்று அறியாமலேயே மனைவியிடம் பிச்சை வாங்கி சாப்பிடுகிறான். பின் விஷயம் அறிந்து, தன்னுடைய வாழ்வை தானே சீரழித்துக் கொண்டதால் நண்பனையும், தனது மனைவியையும் இல்லற பந்தத்தில் சேர்த்து வைத்து விடுகிறான்.

மொத்தப்படத்தையும் தன்னுடைய நடிப்பிலே தூக்கி நிறுத்தி இருக்கிறார் எம்.ஆர்.ராதா. அகங்காரம் மனித உருவெடுத்து வந்தால் எப்படி நடந்து கொள்ளுமோ அப்படி ஒரு கதாபாத்திரம் எம்.ஆர்.ராதாவிற்கு. மோகன் என்ற கதாபாத்திரத்தை அத்தனை சிறப்பாக நடித்துக் காட்டியதால்தான் இத்தனை ஆண்டுகள் கழித்தும் ரத்தக்கண்ணீரைப் பற்றி எழுத முடிகிறது.

பணத்திமிர் ஒன்று இருந்தாலே வாழ்வை சீரழித்து விடும். ஆனால் இந்தக் கதாநாயகனுக்கோ பணத்திமிரோடு, படிப்புத் திமிரும் சேர்ந்து விட்டது. எப்படி சீரழிக்காமல் விடும்?

மனிதனின் படிப்புத்திமிர் அந்த அளவுக்கு தீராத வியாதி. மேலும் அது திமிர் என்று அத்தனை எளிதாக அடையாளம் காணவும் முடியாது. ஏனெனில் அது தன்னை கௌரவம் என்று கூறிக் கொள்கிறது.

அந்த வியாதி படத்தின் முதல் காட்சியிலிருந்தே மோகனைப் பிடித்து இருக்கிறது. உயிர் அவனை விட்ட பின்பே அது அவனை விடுகிறது. அந்தப் படித்த திமிர்தான் காதலை விபச்சாரியிடத்திலும், கலையை அவளது அங்க அசைவுகளிலும் மட்டும் தேட வைக்கிறது.

அகங்காரம் மனிதனை மற்றவர்களுக்கு மரியாதை தர அனுமதிக்காது. மற்றவரை அவமரியாதை செய்வதன் மூலமே அது தன்னை நிலை நிறுத்திக் கொள்கிறது. ஆனால் அதே அகங்காரம் செய்த வினைகளின் விளைவை நம்மை சுமக்க வைக்கிறது. இந்தப் படத்தின் முதல் பகுதியை மனிதனின் அகங்காரம் செய்யும் வினைகளாகவும், இரண்டாம் பகுதியை அகங்காரத்தால் அந்த மனிதனுக்கு கிடைக்கும் விளைவுகளாகவும் சுருக்கமாகக் கூறிவிடலாம்.

உணர்வுப்பூர்வமான விசயங்கள் ஏதுமில்லாமல், சமூகத்தின் தவறான விழுமியங்களையும், செம்மறி ஆட்டு மந்தை மனிதர்களின் முட்டாள்தனத்தையும் வெகுவாகக் கிண்டல் செய்திருக்கிறார் கதாசிரியர்.

படத்தில் வரும் கதாபாத்திரங்களின் பெயரிலேயே அவர்களின் குணாதிசயங்கள் அடங்கிவிடுகின்றன. மோகம் கொண்டு அலைபவனாக மோகன், அவனை தன்பக்கம் இழுக்க்கும் காந்தமாக காந்தா, பால் போன்ற மனமுள்ளவனாக பாலு, சந்திரனைப் போன்ற சந்திரா. கதாபாத்திரங்களுக்கும், அவற்றின் குணத்துக்கும்தான் எத்தனை பொருத்தம்.?

எம்.ஆர்.ராதா சின்ன சின்ன வேடங்களில் நடித்த பல படங்கள் இருந்தாலும் அவரது மொத்த ஆளுமையையும், நடிப்புத்திறனையும் முழுதாக அறிந்துகொள்ள உதவும் படம் ரத்தக்கண்ணீர். இன்றைய தலைமுறை நிச்சயம் பார்க்கவேண்டிய படம்.

8 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. பக்கத்திற்கு வந்து கருத்து தெரிவித்ததற்கு நன்றி வலைச்சித்தரே.

   நீக்கு
 2. குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி
  கொள்வதென்பதேது...."
  பாடல் ஒன்றே போதும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பக்கத்திற்கு வந்து கருத்து தெரிவித்ததற்கு நன்றி கனேசன்.

   நீக்கு
 3. அருமை.. வலைசித்தர் சொல்லியபடியே படம் அல்ல...! பாடம்...!!

  பதிலளிநீக்கு
 4. பெயர்ப் பொருத்தத்தை இப்போது தான் அறிந்தேன். வியப்பு.
  \\அள்ளி அள்ளிக் கொடுத்தேனடி காந்தா//
  இந்த வரிகளைப் பேசி மாறுவேடப் போட்டியில் நடித்த நாட்கள் நினைவுக்கு வருகிறது

  பதிலளிநீக்கு
 5. படம் அல்ல...! பாடம்...!!!//

  திண்டுக்கல் அவர்கள் கருத்தை வழி மொழிகிறேன்.
  நல்ல விமர்சனம்.

  பதிலளிநீக்கு