புதன், 5 அக்டோபர், 2016

மசாலா படங்கள்

ஐந்து பாடல்கள், மூன்று சண்டைக்காட்சிகள், கொஞ்சம் சோகம், நிறைய காமெடி, அங்கங்கே கொஞ்சம் காதல், இருபது கதாபாத்திரங்கள் என்று அனைத்து தரப்பு பார்வையாளர்களுக்காகவும் தமிழ் சினிமாவின் பிரபல கதாநாயகர்கள் நடித்து வெளிவரும் படங்களே மசாலாப்படங்கள்.

மசாலாப்படங்களின் கதை, திரைக்கதை அனைத்துமே யதார்த்த சினிமாவிலிருந்து வெகுதூரம் விலகிப்போனவை. மேலும் மற்ற நாட்டுடன் ஒப்பிடும்போது இங்கே மசாலாப்படங்கள் அதிகம். அதிகம் பொய்களையும், காட்சி மிகைப்படுத்துதல்களையும், நிஜத்துக்கு ஒவ்வாதவற்றையும் காட்டுவது மசாலாப்படங்களின் குணங்களில் ஒன்று.

இதனால் தான் ஒருவன் சினிமா ஹீரோவைப் பார்த்து சில காரியங்களை செய்யும்போது, “சினிமாவைப் பார்த்து கெட்டுப் போய்விட்டான்” என்றும், சினிமாவில வர்ற மாதிரி நிஜ வாழ்க்கையில நடக்காது என்றும் கூறுகிறோம். அதாவது சினிமா என்றாலே பொய் என்றாகிவிட்டது.
இதற்கு காரணம் படைப்பாளி மட்டுமல்ல, பார்வையாளனும்தான். மனிதன் உணர்ச்சி வசப்பட்ட செயல்களையும், மூடத்தனத்தையும் அதிகம் விரும்புகிறான். இதனால்தான் இங்கே யதார்த்த சினிமாக்களை விட மசாலாப்படங்கள் சக்கைப் போடு போடுகின்றன. நடித்தது கமலாகவே இருந்தாலும் தசாவதாரம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ஓடும் அளவிற்கு உன்னைப் போல் ஒருவன் ஓடுவதில்லை.

மசாலாப்படங்களின் வெற்றிக்கு காரணம், ஒரு சினிமா தன்னை பாதிக்கக் கூடாது, சினிமாவின் உணர்வுகள் தனக்குள் இறங்கக் கூடாது என்ற பார்வையாளனின் எண்ணமே. ஆகையால் தான் இரண்டரை மணி நேரம் பொழுதுபோக்க சிறந்ததான மசாலாப்பட்த்திற்கு செல்கிறான்.
பொழுதுபோக்கு அம்சமாக சினிமாவைப் பார்ப்பவன் மசாலாப் படத்தைக் கொண்டாடுகிறான். கலை அம்சமாக சினிமாவைப் பார்ப்பவன் கழுவி ஊற்றுவான். ஆனால் சினிமாவை பொழுதுபோக்கு அம்சமாகப் பார்ப்பவர்களே அதிகம் என்பதை வெறும் மசாலாப்படங்களையே நடித்து பிரபலமான நமது கதாநாயகர்களின் வெற்றியிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

மசாலாப்படங்கள் எடுப்பது ஒன்றும் அத்தனை சுலபமல்ல. மேலும் அதை எடுக்கும் இயக்குனர்களும் தனக்கென ஒவ்வொரு பாணியைக் கையாள்கின்றனர்.

ஒரு குடும்பத்தை அல்லது ஊரைக் கதைக்களமாக கொண்ட கே.எஸ்.ரவிக்குமார் படங்கள், மெலடி அல்லது சோகவயப்பட்ட விக்ரமன் படங்கள், வேகமான திரைக்கதை கொண்ட பேர்ரசு படங்கள், அழுத்தமான திரைக்கதை கொண்ட பி.வாசு படங்கள், அறிவியலை மையப்படுத்திய சங்கர் படங்கள், ஆணி வேர் இல்லாத மரம் போல கதையே இல்லாமல் எடுக்கப்படும் தற்காலப் படங்கள் என பல வகைப்படுத்தலாம். மேலும் இவற்றில் பெரும்பாலானவை தனிமனித்த துதி பாடுபவை. அவற்றையை நமது ஹீரோக்களும், ரசிகர்களும் விரும்புகின்றனர்.

ஹீரோயிசத்தை விரும்பும் ரசிகனுக்கு, கதைக்கு ஏற்ற ஹீரோவைத் தேடாமல் ஹீரோவுக்காக கதை அமைத்து இயக்குனர் படம் எடுக்கும் போது லாஜிக் மீறல்கள் கண்டிப்பாக நடக்கவே செய்யும். ஹீரோவாக இருப்பவர் பார்வையாளனின் அபிமான நடிகர் என்றால் அதை அவன் ஏற்றுக்கொள்வான், இல்லையெனில் குறை சொல்வான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக