வியாழன், 29 செப்டம்பர், 2016

எந்த வகை ரசிகன் நீ?

எந்த மொழி சினிமாவாக இருந்தாலும் சரி, அதிலே பலவகைகள் உண்டு. சினிமாவின் வகைகள் அவற்றின் மையக்கதை, திரைக்கதை, எடுக்கப்படும் விதம் ஆகியவற்றைப் பொறுத்து உருவாகின்றன. ஒரு பார்வையாளன் எந்த வகை சினிமா ரசிகனோ அந்த வகை சினிமாவை அதிகம் பார்ப்பான். அந்த வகை சினிமா இப்படி இருக்க வேண்டும் என்று தனக்குள் ஒரு குறிப்பிட்ட கருத்தைக் கொண்டிருப்பான். அந்தக் கருத்துக்கு ஏற்ப வரும் ஒரு படம் அவனுக்கு பிடித்த்தாகவோ பிடிக்காத்தாகவோ இருக்கும்.

வெகுஜன சினிமா
எல்லா தரப்பினரும் பார்க்கும்படியாக பொதுவான கதை, திரைக்கதை, நகைச்சுவை, காதல், பாடல் காட்சிகள், சண்டைக்காட்சிகளுடன் U சான்றிதழுடன் வரும் படம்களே வெகுஜன சினிமாக்களாகும். தமிழில் இவை மசாலாப் படங்களென்றும் சொல்லப்படுகின்றன. இவை பொதுவாக கொஞ்சம் அழுத்தமான மையக்கதையையும், கதாபாத்திரங்களையும் கொண்டவையாக பெரும்பாலும் இருக்கும். கே.எஸ்.ரவிக்குமார், பேர்ரசு, சங்கர் போன்றோரின் படங்கள் இந்தவகையைச் சேர்ந்தவை.

நகைச்சுவை சினிமா
மையக்கதையும், திரைக்கதையும் அதிக முக்கியத்துவம் இல்லாமல் பட்த்தின் ஒவ்வொரு காட்சியிலும் புது விதமான நகைச்சுவை காட்சிகளைக் கொண்டு எடுக்கப்படுபவை நகைச்சுவை சினிமாக்கள் ஆகும். கே.எஸ்.ரவிக்குமார், பாண்டியராஜன், சிம்புதேவன் போன்றோரின் படங்கள் இவ்வகையில் வருபவை.

திகில் சினிமா
ஆவியை மையப்படுத்தியோ அல்லது சைக்கோவை மையப்படுத்தியோ நடக்கும் அதிபயங்கர செயல்களைக் கொண்டிருக்கும் படங்கள் அனைத்தும் திகில் சினிமாக்களாகும். தமிழில் டப்பிங்க் செய்யப்பட்டு ஓடும் படங்கள் பெரும்பாலும் இவ்வகைப் படங்களே. மற்ற படங்களை விட இதற்கான ரசிகர்களும் அதிகம்.

காதல் ரொமான்ஸ் படங்கள்
காதல், திருமணம், காதல் பிரிவு, சோகம் போன்றவற்றை மையப்படுத்தி இருக்கும் படங்கள் ரொமான்ஸ் சினிமாக்கள் ஆகும். இந்த வகைப் படங்கள் பெரும்பாலும் டீன் ஏஜ் ரசிகர்களாலும் காதலர்களாலும் ரசிக்கப்படுகின்றன. மணிரத்னம், கௌதம் மேனன் எடுக்கும் பல படங்கள் இவ்வகையானவை.

வரலாற்றுப் படங்கள்
வரலாறு, இதிகாசம், மற்றும் புராணங்களில் வரும் கதைகளை அப்படியே சினிமாவாக எடுப்பது வரலாறு மற்றும் இதிகாசப்படங்கள் ஆகும். இவற்றின் கதை ஏற்கனவே பார்வையாளர்களுக்கு தெரிந்து விட்ட காரணத்தால் இவற்றின் திரைக்கதையும், கிராபிக்ஸ் தொழில்நுட்பங்களும் பட்த்தின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கின்றன.

சமூகப்படங்கள்
சமூகத்தின் நிலையை அல்லது சமூகத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட மனிதர்களின் நிலையை தத்ரூபமாக படம்பிடித்துக் காட்டி, அதன் மூலம் சமூகத்தின் நேர்மறைப் பக்கங்களையோ அல்லது எதிர்மறைப் பக்கங்களையோ பார்வையாளருக்கு உணர வைப்பதன் மூலம், ஒரு சமூக நீதிக்கருத்தை பார்வையாளனுக்கு கூறுவதுதான் இவ்வகைப் படங்களின் நோக்கம். பாலசந்தர், பாரதிராஜா எடுத்த பல படங்கள் இதற்கு உதாரனம்.

அறிவியல் புனைவு படங்கள்.
யதார்த்தத்தில் இல்லாத ஒரு விசயத்தை கற்பனையில் சிருஷ்டித்து அந்த விசயத்தால் மனிதனுக்கு ஏற்படும் சாதக பாதகங்களை திரையில் காட்டுவது அறிவியல் புனைவு படங்களாகும். இவை திகில் படங்களாகவோ அல்லது வெகுஜன சினிமாவாகவோ இருக்கலாம்

கலைப்படங்கள்
யதார்த்தத்துக்கு மிக அருகில், ஆனால் வெகுஜன சினிமாவின் கூறுகள் இல்லாமல் அந்த படத்துக்காகவே எடுக்கப்படும் படங்கள் கலைப்படங்கள் ஆகும். மகேந்திரன், சேரன், பார்த்திபன் எடுக்கும் படங்கள் இவ்வகையைச் சேர்ந்தவை. சில நேரம் இவை சோகப்படங்களாகவும் இருக்கலாம். இவ்வகைப் படங்கள் தேசியவிருதுகள் மற்ற பல விருதுகள் கொடுக்கப்பட்டு கௌரவிக்கப்படுவதுண்டு.

யதார்த்த சினிமா
யதார்த்தத்தில் இருக்கும் விசயங்களை அல்லது கதையை சிறிதும் உண்மையைத் திரித்துக் கூறாமல் அப்படியே சினிமாவாக்குவது யதார்த்த சினிமாவாகும். பெரும்பாலும் தேசியவிருது, ஆஸ்கர் விருது போன்ற உயரிய விருதுகளைப் பெறுபவை இப்படங்களே. சில வேளைகளில் ஒரு படம் யதார்த்த சினிமாவா? அல்லது கலைப்படமா? என்று பிரித்துப் பார்க்கமுடியாமலும் இருக்கலாம்.


மேற்கண்ட இவை மட்டுமே சினிமா வகைகளல்ல. இவை பெரும்பான்மை வகைகள் மட்டுமே. தற்போதைய தமிழ் சினிமாக்கள் ஆணிவேர் இல்லாத மரம் போல கதையே இல்லாமல் கூட எடுக்கப்படுகின்றன. மேலும் ஒரு சினிமா ஒரு குறிப்பிட்ட வகையாக மட்டும்தான் இருக்க வேண்டும் என்றில்லை. இரண்டு மூன்று வகைகளின் கலவையாக்க் கூட இருக்கலாம். ஒரு வெகுஜன சினிமா, திகில் சினிமாவாகவும் அதே நேரம் நகைச்சுவை சினிமாவாகவும் இருக்கலாம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக