வெள்ளி, 23 செப்டம்பர், 2016

தொடரி

தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடிப்பில், பிரபு சாலமன் இயக்கத்தில் வெளிவந்துள்ள ரயிலிலேயே நடக்கும் ஒரு கமர்ஷியல் சினிமாதான் தொடரி.ரயில் டெல்லியிலிருந்து சென்னைக்கு புறப்படுவதாக படம் ஆரம்பமாகிறது. அந்த ரயிலில் பானிட்டரியில் வேலை செய்பவராக வருகிறார் தனுஷ். அதே ரயிலில் வரும் ஒரு நடிகையின் அசிஸ்டன்டாக வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

பார்த்த உடனே காதல் வந்துவிட கீர்த்தி சுரேஷின் மனதில் இடம்பிடிக்க தனுஷ் பல்வேறு உத்திகளை கையாள்கிறார். இதற்கிடையில் இதே ரயிலில் பயணம் செய்யும் அமைச்சரான ராதரவிக்கு பாதுகாப்பு அதிகாரியாக வரும் கமாண்டோவுக்கும் தனுஷுக்கும் மோதல் உருவாகிறது. அதைப் பற்றி ராதாரவியிடம் தெரிவிக்கிறார் தனுஷ்.
பின்னர் இந்த மோதல் கமாண்டோவுக்கும் ராதாரவிக்கும் இடையிலானதாக மாற, ராதாரவி கமாண்டோவின் டிஸ்மிசுக்கு ஏற்பாடு செய்கிறார். இதனால் கோபம் கொண்ட கமாண்டோ தனுஷை ஒரு அறையில் பூட்டி போட்டுவிட்டு கீர்த்தி சுரஷை கொலை செய்ய துரத்துகிறார்.

இடையில் மாடு மோதி ரயில் இடையில் நின்றுவிட ஓடி வரும் கீர்த்தி சுரேஷ் வண்டியின் எஞ்சின் பகுதியில் ஏறிவிடுகிறார். உதவி டிரைவர் இல்லாமலே வண்டியை இயக்குகிறார் டிரைவர். தப்பித்து வரும் தனுஷ் ரயிலின் மேற்கூரையில் ஏறி எஞ்சினுக்கு பின் பெட்டிக்கு வருகிறார்.

டிரைவர் இறந்துவிட வண்டி அதிகமான வேகத்தில் கட்டுப்பாடற்று செல்கிறது. கட்டுப்பாடற்று செல்லும் ரயில் எவ்வாறு நிறுத்தப்படுகிறது.? கமாண்டோவிடமிருந்து எப்படி தப்பித்தார்கள்? அதற்குள் என்னென்ன களேபரங்கள் வெளியே நடக்கின்றன? கீர்த்தி சுரேஷ் என்ன ஆனார்? என்பது மீதிக்கதை.தனுஷ் வழக்கம் போல இயல்பு மீறாமல் நடித்திருக்கிறார். அவர் கேண்டீன் ஊழியராக கதையில் சரியாக பொருந்தி வருகிறார். கீர்த்தி சுரேஷும் தனது பாத்திரத்தை சரியாகவே செய்திருக்கிறார்கள். ராதாரவி உட்கார்ந்த இடத்திலேயே யதார்த்தமாக நடித்து மிரட்டுகிறார். கேண்டீன் மேனேஜர் தம்பி ராமையா, கட்டுப்பாட்டு அறை அதிகாரி இயக்குனர் வெங்கடேஷ், போலீஸ் அதிகாரிகள், வண்டியில் பயணம் செய்யும் அமைச்சர் ராதாரவி என எல்லோருமே தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

படுவேகத்தில் போகும் ரயிலில் தான் முழுபடமும் என்றாலும் அதை சரியாக படம் பிடித்து இருக்கிறார் கேமராமேன். படம் முழுக்கவும் க்ரேசி மோகன் பாணியில் வார்த்தைகளை இரண்டு அர்த்தங்களுக்காக பயன்படுத்தும் முயற்சியை மேற்கொண்டு அதில் கொஞ்சம் வெற்றியும் பெற்று இருக்கிறார் வசனகர்த்தா.

“ஜான்ஸ் வந்ததும் டிக்கட் கன்ஃபர்ம் பண்றேன்”, “அது வெள்ளைக்காரன் காலத்து பாலம் உடையாது” என்பது போன்ற நல்ல வசனங்கள். குத்துப்பாட்டு, ஓபனிங் பாடல், சண்டைக் காட்சிகள் என்ற எதுவும் இல்லாமலேயே ஒரு நல்ல படத்தை கொடுத்திருக்கிறார் பிரபு சாலமன். மேலும் பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள் தங்களுடைய டி..ஆர்.பி ரேட்டை அதிகப்படுத்துவதற்காக செய்யும் மானக்கெட்ட செயலையும் இயக்குனர் கண்டித்திருக்கிறார்.

டிரைவர் இறநத்துதான் வண்டி தறிகெட்டு ஓடுவதற்கான காரணம் என்று படத்தின் முதல் பகுதியிலேயே நமக்கு தெரிந்தாலும் ரயிலில் ஏறிய கொள்ளையர்கள், தீவிரவாதிகள் குறித்த அச்சம், மீடியாக்களின் தவறான பரப்புரைகள், பழையதான பாலம், எரிந்து போன கட்டுபாட்டு அமைப்பு, கீர்த்தி சுரேஷ் மற்றும் மெக்கானிக்கை வைத்து ரயிலை நிறுத்தும் முயற்சி, ரயிலில் பிடித்த தீ என எண்ணற்ற விசயங்களை வைத்து மீதி இரண்டு மணி நேரத்தை போரடிக்காமல் நகர்த்தி இருக்கிறார் இயக்குனர்.


முதல் ஒரு மணி நேரப்படத்தில் தனுஷ் கீர்த்தி சுரேஷின் காதல் காட்சிகளும், காமெடி காட்சிகளும் வந்தாலும் படம் கொஞ்சம் போரடிக்கிறது. காமெடிக் காட்சிகளும் கொஞ்சம் மொக்கை. தொடரி என்ற பெயருக்கேற்ப படம் மிகவும் நீளம். கிட்டத்தட்ட 3 மணி நேரம்.

படுவேகத்தில் ஓடும் ரயிலின் கூரையில் சண்டை போடுவது, டான்ஸ் ஆடுவது, ஓடும் எஞ்சினிலிருந்து பெட்டிகளை கையாலேயே கழற்றுவது போன்ற லாஜிக் மீறல்கள் இருந்தாலும் படத்தின் விறுவிறுப்பு அதையெல்லாம் வென்றுவிடுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக