ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

சதுரம்-2

ஹாலிவுட்டில் வெளிவந்த SAW பட பாணியிலான தமிழ்த்திரைப்படம் தான் சதுரம்-2. ஒரு சிறந்த படம் ஆரம்பித்த இருபது நிமிடங்களுக்குள்ளாக மையக்கதையில் பயணமாக ஆரம்பிக்க வேண்டும். ஆனால் இந்தப் படமோ ஆரம்பித்த நிமிடத்தில் இருந்தே மையக்கதையில் பயணமாகிறது


வானத்தில் பறக்க ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே ஒரு விமானம் கட்டுப்பாட்டை மீறி போய்விடுகிறது. சிறப்பாக பணிபுரிந்ததற்காக ஒரு எஞ்சினியர் விருதுக்கு தேர்வாகிறார். பூட்டிக்கிடக்கும் ஒரு அறையில் ஒரு டாக்டரும், ஃபோட்டோகிராபரும் சங்கிலியால் பிணைக்கப்பட்டு இருக்கிறார்கள். அதே அறையில் SAW  படத்தை போன்று ஒருவர் தலையில் தாக்கப்பட்டு இறந்து கிடக்கிறார். இன்னொரு இடத்தில் அதே போன்று ஒருவர் கொல்லப்படுகிறார். இப்படி நான்கு விதமான ஆரம்பப்புள்ளிகளில் இருந்து கதை ஆரம்பிக்கிறது.

எவ்வாறு தப்பிச் செல்வது என்ற முயற்சியாக, பூட்டிக்கிடக்கும் அறையில் இருக்கும் டாக்டர் தன் கதையையும், தான் தனது மனைவியை விட்டு வேறொரு நர்சுடன் தொடர்பில் இருக்கும் விசயத்தையும், தான் ஒரு சைக்கோ கொலைகாரன் என்றெண்ணி தன்னைப் பின் தொடரும் ஒரு போலீஸ் அதிகாரி பற்றியும் விளக்குகிறார். அவர்தான். போட்டோகிராபர் தனது கதையையும் தனக்கு ஒருவன் பணம் கொடுத்து உனது தவறான தொடர்பு குறித்து போட்டோ எடுக்கச் சொன்னார் என்பதையும் விளக்குகிறான்.

இடையில் இவர்களுடைய அறையில் இருக்கும் செல்போன் ஒலிக்கிறது. டாக்டரின் மனைவியை கடத்தி வைத்திருக்கும் அவருடைய ஜூனியர் பேசுகிறான். அவர்கள் அங்கிருந்து தப்பிக்க ஆறு மணி நேரமே உள்ளது என்று கெடு விதிக்கிறான். இருவருடைய பையிலும் இருக்கும் கேசட்டில் அவர்கள் தப்பிச் செல்வது பற்றிய குறிப்பும் உள்ளது.


டாக்டர் யார்? போட்டோகிராபர் யார்? அவர்களை அங்கு கட்டிப்போட்டது யார்? அவனுடைய நோக்கம் என்ன? டாக்டரின் ஜூனியர் எதற்காக டாக்டரின் மனைவியை கடத்தினான்? அங்கே இறந்து கிடந்தது யார்? விமானம் என்ன ஆனது? என்பதை ஒன்றோடொன்று சரியாகப் பொருந்தும் முடிச்சுகளுடன் படமாக்கி இருக்கிறார் இயக்குனர்.

ஒவ்வொரு மனிதனும் தனக்கு கிடைத்த வாழ்வை சரியாக வாழ வேண்டும். அப்படி வாழ்ந்தால் உலகில் மனிதம் தழைக்கும் என்ற கருத்தை வலியுறுத்தியதற்காகவும், எந்த நேரத்திலும் நடக்கப்போவதை அனுமானிக்க முடியாத ஒரு திரைக்கதைக்காகவும் இயக்குனர் பாராட்டப்பட வேண்டியவர்.

ஐந்து பாடல்கள், மூன்று சண்டைக்காட்சிகள், காதல், டூயட்கள் போன்ற மசாலாப் பார்முலாக்கள் எதுவுமே இல்லாமல் இருந்தாலும் போரடிக்காமல், அதே நேரம் கதையை விட்டு விலகிச்செல்லாத ஒரு படமாக சதுரம்-2 படைக்கப்பட்டுள்ளது. SAW  பட பாணி கதை என்றாலும் வன்முறை இல்லாமல், ரத்தக்களறியாக்காமல் அனைவரும் பார்க்கும் வண்ணம் படம் உருவாகியுள்ளது.

படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் அனைத்தும் ஒரு பெரும் தவறை சாதாரணமாகச் செய்கின்றன. மனிதன் இவற்றை சாதாரணமாக ஏற்றுக்கொள்ளும் நிலைமையை நோக்கி இன்று சென்று கொண்டிருக்கிறான். ஆனால் இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அதற்கு தவறுகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்று அழுத்தமாக கூறப்பட்டுள்ளது.

நியாயத்தையும், ஒழுக்கத்தையும் வலியுறுத்தும் படத்தின் முக்கிய கதாபாத்திரம் தனக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்தில் மற்றவருக்கு தண்டனை வழங்க புறப்பட்டு விட்டதாகவும் ரசிகர்கள் இதைப் புரிந்துகொள்ள வாய்ப்புள்ளது.

வழக்கம்போல் போலீஸ் அதிகாரிகளின் விசாரணை இந்தப் படத்திலும் தவறான பாதையிலே செல்கிறது. அதுவும் மையக்கதையோடு நன்றாகப் பொருந்தாமல் செல்கிறது. மேலும் காட்சிகள் முன்னும் பின்னுமாக காட்டப்படுவது பார்வையாளர்கள் சிலருக்கு குழப்பத்தையும் உருவாக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக